சாய்னா குறித்து அவதூறு கருத்து : நடிகர் சித்தார்த்திற்கு சம்மன்!!

Author: kavin kumar
20 January 2022, 10:30 pm
Quick Share

சென்னை : ஒலிம்பிக் வீராங்கனை சாய்னா நேவால் பற்றியும், பெண் தொகுப்பாளர் குறித்தும் சமூக வலைத்தளத்தில் அவதூறு பரப்பும் வகையில் கருத்து பதிவிட்ட விவகாரத்தில், வாக்குமூலம் பெறுவதற்கு நடிகர் சித்தார்த்திற்கு சென்னை காவல்துறை சம்மன் அனுப்பியுள்ளது.

பஞ்சாப் மாநிலத்தில் பிரதமரின் வருகை மற்றும் பாதுகாப்பு குறித்து பேட்மிண்டன் வீராங்கனை சாய்னா நேவால் தனது டுவிட்டரில் கருத்து தெரிவித்திருந்தார். திரைப்பட நடிகரான சித்தார்த், தனது ட்விட்டரில் சாய்னாவின் பதிவை குறிப்பிட்டு, அதை இரட்டை அர்த்தத்தில் கேலி செய்யும் விதமாக ட்வீட் செய்தார். அந்த பதிவு வைரலாகி பெரும் சர்ச்சையையும், கடும் எதிர்ப்புகளையும் உருவாக்கியது. இதனைத் தொடர்ந்து, சாய்னா நேவாலிடம் நடிகர் சித்தார்த் மன்னிப்பு கோரினார். ஆனால் அதற்கு முன்பே இந்த பதிவு பெண்களை கொச்சைப்படுத்தும் வகையில் இருப்பதாக கூறி அவர் மீது வழக்குப்பதிவு செய்யவேண்டும் என தேசிய மகளிர் ஆணையம் மஹாராஷ்டிரா டிஜிபிக்கு கடிதம் எழுதி இருந்தது. தமிழக காவல்துறைக்கும் கடிதம் எழுதியிருந்தது.

இந்த விவகாரம் தொடர்பாக நடவடிக்கை எடுக்க தமிழக டிஜிபிக்கு தேசிய மகளிர் ஆணையம் நோட்டீஸ் அனுப்பி இருந்த நிலையில், டிஜிபி உத்தரவின்படி சென்னை காவல்துறை விசாரணையை தொடங்கியுள்ளது. இதனிடையே சித்தார்த் தனது சர்ச்சை பதிவை நீக்கி விட்டதால், சட்டபூர்வமாக நடவடிக்கை எடுக்க வேண்டுமா என்பது குறித்து சட்ட நிபுணர்கள் ஆலோசனைக்கும் அனுப்பப்பட்டுள்ளதாக சென்னை காவல்துறை தெரிவித்திருந்தது. இந்நிலையில் ஒலிம்பிக் வீராங்கனை சாய்னா நேவால் பற்றியும், பெண் தொகுப்பாளர் குறிக்கும் சமூக வலைத்தளத்தில் அவதூறு பரப்பும் வகையில் கருத்து பதிவிட்ட விவகாரத்தில், வாக்குமூலம் பெறுவதற்கு நடிகர் சித்தார்த்திற்கு சென்னை காவல்துறை சம்மன் அனுப்பியுள்ளது. நடிகர் சித்தார்த் மீது வழக்குப் பதிவு செய்வது குறித்து சட்ட ஆலோசனைக்கு அனுப்பப்பட்டுள்ளதாகவும் சென்னை காவல் ஆணையர் தெரிவித்துள்ளார்.

Views: - 236

0

0