மாநாடு பட விழாவில் திமுக, அதிமுகவினரை சீண்டிய நடிகர் விஜய்யின் தந்தை : கொளுத்திப் போட்ட சரவெடியால் தமிழக அரசியலில் பரபரப்பு !

Author: Babu Lakshmanan
22 December 2021, 12:45 pm
Quick Share

76 வயது எஸ்ஏ சந்திரசேகர் இயக்குனர், தயாரிப்பாளர், கதாசிரியர், நடிகர் என்று
என பன்முகங்களைக் கொண்டவர். பிரபல நடிகர் விஜயின் தந்தை என்பதும் நாம் அறிந்த விஷயம்.

1978-ல் அவள் ஒரு பச்சைக்குழந்தை என்ற படத்தை இயக்கி அதன் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். எனினும் அவர் இயக்கத்தில் 1981-ம் ஆண்டு வெளியான இரண்டாவது படமான, சட்டம் ஒரு இருட்டறைதான் எஸ்ஏ சந்திரசேகருக்கு, பெரும் புகழைப் பெற்றுத் தந்தது.

சட்டம், நீதி, அரசியலை மையக் கருவாக வைத்து, தமிழில் அதிக படங்களை இயக்கியவர் என்ற பெருமையும் அவருக்கு உண்டு. இதுவரை 70 தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி படங்களை இயக்கியிருக்கிறார். 21 படங்களில் நடித்தும் உள்ளார்.

மாநாடு வெற்றி விழா

சிம்பு நடித்து அண்மையில் வெளியாகி ஓடிக்கொண்டிருக்கும் மாநாடு படத்திலும் அவர் நடித்திருக்கிறார். கோலிவுட்டில் பெரும் வெற்றி பெற்றுள்ள இந்தப் படத்தில் எஸ் ஏ சந்திரசேகர், தனக்கு விருப்பமான முதலமைச்சர் வேடத்தில் நடித்துள்ளார்.

நான்கு வாரங்கள் கடந்தும் படம் நல்ல வசூலை குவித்து வருவதால் மாநாடு படத்தின் வெற்றி விழா கொண்டாடப்பட்டது. இந்த விழாவில் படத்தின் நாயகன் சிலம்பரசன் கலந்து கொள்ளவில்லை. அதற்கு அவர் ஒரு படப்பிடிப்பில் இருப்பதாக காரணம் என்று கூறப்பட்டது.

சிம்பு மீது பாய்ச்சல்

ஆனாலும் மனதில் உள்ளதை வெளிப்படையாக பளிச்சென்று பேசும் எஸ் ஏ சந்திரசேகர், சிம்புவை ஒரு பிடி பிடித்தார். அதில் நியாயமான கோபமும் காணப்பட்டது. பிரபல நடிகர், இயக்குனர், தயாரிப்பாளர் இசையமைப்பாளரான ராஜேந்தரின் மகன் என்பதால் சிம்புவைப் பற்றி வெளிப்படையாக தமிழ்த் திரைப்படத் துறையினர் விமர்சிப்பதை தவிர்த்து விடுவார்கள். ஆனால்
எஸ் ஏ சந்திரசேகர் அது பற்றியெல்லாம் கவலைப்படாமல் பட விழாவில் பேசினார். அது சிம்புவின் தலையில் நறுக்கென்று கொட்டுவதுபோல் இருந்தது.

simbu - updatenews360

அதுமட்டுமின்றி, அவர் அரசியலை விமர்சிப்பது போன்று அதிரடியாக ஒரு கருத்தையும் தெரிவித்து பரபரப்பை ஏற்படுத்தினார்.

அவர் பேசியது இதுதான்:

ஒரு படத்தின் வெற்றியால் கிடைக்கும் புகழ் முடிவில் பட ஹீரோவுக்குத்தான் போய்ச் சேரும். ஒரு நல்ல கதை, நல்ல திரைக்கதை எந்தவொரு நடிகரையும் உச்சத்துக்குக் கொண்டுபோகும். இந்தப் படம் இதன் ஹீரோவை ரொம்ப நாட்களுக்குப் பிறகு உயரத்தில் கொண்டுபோய் உட்கார வைத்துள்ளது.

நல்ல முதலமைச்சர் யார்..?

காமராஜருக்கு பிறகு நல்ல முதலமைச்சரை நம்மால் பார்க்க முடியவில்லை. சினிமாவில் முதலமைச்சர் வேடம் நல்லவராக இருப்பதுபோல் அமைவதை பெரும்பாலும் யாரும் ஏற்றுக் கொள்வதில்லை. இந்த படத்தில் வரும் மதம், அரசியல் தொடர்பான காட்சிகள் இந்தியாவையும், வாரிசு அரசியல் காட்சி தமிழகத்தையும் குறிக்கிறது.

இப்படம் சிம்புவுக்கு ஒரு பெரிய திருப்பு முனை. இந்த மகிழ்ச்சியை கொண்டாட அவர் வரவில்லை. என்னதான் பட ஷூட்டிங் இருந்தாலும் கூட அவர் இங்கே வந்திருக்க வேண்டும். படத்தின் வெற்றி விழாவில் சிம்பு கலந்து கொண்டிருக்கவேண்டும். வெற்றி வந்தவுடன் இப்படி நடந்து கொள்ளக்கூடாது. தயாரிப்பாளர் அவரை நம்பி எவ்வளவு முதலீடு செய்துள்ளார்?… அவர் பங்கேற்காதது மனதுக்கு ரொம்ப கஷ்டமாக இருக்கிறது.

படப்பிடிப்பின்போது எப்படி இருந்தோமோ அதேபோல் படம் வெளியான பிறகும் நடந்து கொள்ளவேண்டும். ஒருபோதும் தலைக்கணம் கூடாது. அப்போதுதான் இன்னொரு வெற்றி கிடைக்கும்” என்று சிம்புவுக்கு, அறிவுரையும் வழங்கினார்.

அரசியல் ஆர்வம்

எனினும் படவிழாவில், மாநாடு படத்தின் வெற்றி குறித்து எஸ் ஏ சந்திரசேகர் பேசியதைவிட, நல்ல முதலமைச்சர் யார் என்பது பற்றி அவர் பேசியதுதான், தமிழக அரசியலில் தற்போது சூறாவளியை கிளப்பி விட்டிருக்கிறது.

ஏனென்றால் இதில் மறைமுகமாக சில கடும் விமர்சனங்களை அவர் முன் வைத்திருப்பதை புரிந்து கொள்ள முடிகிறது. அதற்கு முக்கிய காரணம், கடந்த சில ஆண்டுகளாகவே தன்னை அரசியலில் ஈடுபடுத்திக்கொள்ள அவர் தீவிர முயற்சி எடுத்து வருகிறார் என்பதுதான்.

கடந்த ஆண்டு நவம்பர் மாதம் ‘அகில இந்திய தளபதி விஜய் மக்கள் இயக்கம்’ என்ற பெயரில் அரசியல் கட்சி தொடங்குவதாக அறிவித்தார். இதன் பொதுச்செயலாளராக தானும், பொருளாளராக விஜயின் தாயார் ஷோபா இருப்பதாகவும் கூறினார்.

ஆனால், தனது தந்தை தொடங்கிய கட்சிக்கும், தனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்று மறுத்த நடிகர் விஜய், தனது ரசிகர் மன்றத்தின் பெயரை எந்த விதத்திலும் பயன்படுத்தி கட்சி தொடங்க அனுமதிக்கக்கூடாது என்று கடந்த ஜனவரிமாதம் இந்திய தேர்தல் ஆணையத்திடம் மனுவும் கொடுத்தார்.

இதுதொடர்பாக சென்னை நகர உரிமையியல் கோர்ட்டில் விஜய் வழக்கும் தொடர்ந்தார்.
வழக்கு விசாரணையின்போது எஸ் ஏ சந்திரசேகர், விஜய் மக்கள் இயக்கம் என்ற பெயரில் தான் தொடங்குவதாக இருந்த அரசியல் கட்சி கலைக்கப்பட்டு விட்டதாக தெரிவித்ததை தொடர்ந்து இப்பிரச்சினை முடிவுக்கு வந்தது.

விஜய் தனக்கு ஆதரவு தெரிவித்திருந்தால், விஜய் மக்கள் இயக்கத்தினரை 2021 தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் களம் இறக்கி விட எஸ் ஏ சந்திரசேகர் திட்டமிட்டிருந்தார். ஆனால் அது கைகூடவில்லை. அந்த வருத்தம் இன்னும் அவரிடம் உள்ளது. அதனால்தான் தனது அரசியல் அபிலாஷைகளை அவ்வப்போது, அவர் பொதுவெளியில் பேசி வருகிறார்.

ஆனால் மாநாடு படவிழாவில் அவர் கூறியது, அரசியலில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தி இருக்கிறது என்று அரசியல் விமர்சகர்கள் கருதுகின்றனர்.

தவிர்த்திருக்க வேண்டிய ஒன்று

அவருடைய கூற்றின்படி பார்த்தால் காமராஜருக்கு பிறகு வந்த முதலமைச்சர்கள் யாருமே நல்ல முதலமைச்சர்கள் இல்லை என்பதுபோல் அர்த்தம் ஆகிறது. இதுதான் காங்கிரஸ், திமுக, அதிமுக கட்சிகளிடம் கடும் கண்டனத்தை வாங்கிக் கட்டிக் கொள்ளும் விவகாரமாக விஸ்வரூபம் எடுத்துள்ளது.

தவிர எஸ் ஏ சந்திரசேகர் சொல்வதன்படி பார்த்தால் இன்றைய இளைய தலைமுறையினருக்கு, பக்தவத்சலம், அண்ணா, கருணாநிதி, எம்ஜிஆர் பற்றி தெரிந்திருக்க வாய்ப்பே இல்லை. அவ்வாறு இருக்கும்போது, காமராஜருடன் எப்படி இன்றைய தலைமுறையினரால் மற்ற முதலமைச்சர்களை ஒப்பிட்டுப் பார்க்க முடியும்?…

மேலும் எஸ் ஏ சந்திரசேகர், தன்னால், அரசியல் கட்சி தொடங்க முடியவில்லையே என்ற ஆதங்கத்தில் இப்படி பேசினாரா என்பதும் புரியவில்லை. அவருடைய இந்த கருத்து தமிழக அரசியலில் பெரிய அளவில் தாக்கத்தை ஏற்படுத்தப் போவதில்லை என்றாலும் கூட காமராஜரை புகழ்ந்து பேசப் போய் மற்ற முதலமைச்சர்களை குறை கூறுவது போலாகிவிட்டது.
இது தேவையற்ற தவிர்த்திருக்கவேண்டிய ஒன்று.

SA Chandrasekar- Updatenews360

அதுமட்டுமல்ல, நடிகர் சிம்புவின் படவிழாவில் கலந்துகொண்டு அவரையே கண்டித்திருப்பது, தமிழ் சினிமா வட்டாரத்திலும் சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது.

அவர் இந்த அரசியல் சர்ச்சையில் இருந்து தப்புவதற்கு ஒரேயொரு வழி மட்டுமே இருக்கிறது. அது நமது அரசியல்வாதிகள் அவ்வப்போது கூறுவதுபோல “எனது கருத்து தவறாக புரிந்து கொள்ளப்பட்டு விட்டது. அதற்காக வருந்துகிறேன்” என்று கூறி சமாளிப்பதுதான்! என அந்த அரசியல் விமர்சகர்கள் தெரிவித்தனர்.

எது எப்படியோ, சும்மா கிடந்த சங்கை ஊதிக் கெடுத்தானாம் ஆண்டி என்கிற கதையாக, எஸ் ஏ சந்திரசேகரின் நிலைமை ஆகிவிட்டது!

Views: - 302

0

0