மீண்டும் புதிய கட்சியா..? தந்தைக்கு தடை போட்ட நடிகர் விஜய்..!!

21 January 2021, 11:25 am
vijay - cover - updatenews360
Quick Share

தமிழ் சினிமாவில் நடிகர் ரஜினிக்கு இணையாக பேசப்படுபவர் விஜய் என்றால் அது மிகையல்ல. 46 வயதாகும் விஜய் தொடர்ந்து சூப்பர் ஹிட் படங்களை கொடுத்து வருகிறார். கடந்த சில வருடங்களாகவே அவருடைய ஒவ்வொரு படமும் ஏதாவது ஒரு சர்ச்சையில் சிக்கி அவருக்கு எளிதாக விளம்பரம் தேடித் தந்து விடுகிறது என்பதும் உண்மை.

1992-ம் ஆண்டு அவரது தந்தை எஸ்.ஏ. சந்திரசேகர் இயக்கிய நாளைய தீர்ப்பு படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமான விஜய் அதன்பிறகு 60-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்து விட்டார். ஒரு சில படங்களிலேயே பிரபலமாகி விட்டால் அந்த நடிகருக்கு ரசிகர் மன்றங்கள் உருவாகி விடுவது இயல்பானது.

அந்த வகையில் நடிகர் விஜய்க்கு 1993-ம் ஆண்டே ரசிகர் மன்றம் தொடங்கப்பட்டு விட்டது. இதற்கு அவருடைய தந்தை சந்திரசேகரின் பரிபூரண ஆசியும் இருந்தது. இந்த மன்றங்கள் தீவிர சமூக சேவையில் ஈடுபட்டதால் விஜய் மக்கள் இயக்கம் என்னும் அமைப்பாக 2009-ம் ஆண்டு உருமாற்றம் கண்டது.

அரசியல் படங்களையே தனது ஆரம்ப காலத்தில் இயக்கி வந்ததால் என்னவோ விஜய்யின் தந்தை எஸ்.ஏ.சந்திரசேகருக்கு 2010களில் அரசியல் ஆசை லேசாக துளிர்விட்டது. அப்போது, ஜெயலலிதா, கருணாநிதி என்னும் மிகப் பெரிய ஆளுமை சக்திகள் இருந்ததால் அவர் தனது அபிலாசைகளை கொஞ்ச காலம் மூட்டை கட்டி வைத்திருந்தார்.

தவிர, அவருக்கு எப்போதுமே ரஜினியுடன் தனது மகனை ஒப்பிட்டுப் பார்க்கும் சிந்தனை உண்டு என்று சினிமா வட்டாரத்தினர் கூறுவார்கள். 2017-ம் ஆண்டின் இறுதியில் ரஜினி நான் அரசியலுக்கு வருவேன் என்று அதிரடியாக அறிவித்தபோது, அதற்கு போட்டியாக விஜய் மக்கள் இயக்கத்தையும் தயார் படுத்த ஆரம்பித்தார், சந்திரசேகர்.

அதே நேரம் ரஜினியின் அறிவிப்பை அவர் சீரியஸாகவும் எடுத்துக் கொள்ளவில்லை. ரஜினி களமிறங்கினால் விஜய் மக்கள் இயக்கத்தையும் போட்டியாக களம் இறக்குவோம் என்று கூறி அமைதி காத்தார். கடந்த ஆண்டு நவம்பர் மாத தொடக்கத்தில் நடிகர் ரஜினி அரசியல் கட்சி தொடங்கப் போகிறார் என்ற பரபரப்பு செய்தி ஊடகங்களில் பல உலாவர ஆரம்பித்தது. இதற்கு பின்புதான் நடிகர் விஜய்யும் கட்சி தொடங்கி தேர்தலை சந்திப்பார் என்ற தகவல் ஊடகங்களில் பரப்பப்பட்டது. ஆனால் இதை விஜய் முற்றிலுமாக நிராகரித்தார்.

இந்த நிலையில்தான் அகில இந்திய தளபதி விஜய் மக்கள் இயக்கம், விஜய் மக்கள் இயக்கம், தளபதி விஜய் மக்கள் கட்சி என்கிற 3 பெயர்களில் ஏதாவது ஒரு பெயரில் கட்சி தொடங்க இந்திய தலைமை தேர்தல் ஆணையத்தில் அனுமதி கேட்டு எஸ்.ஏ. சந்திரசேகர் விண்ணப்பித்து இருப்பதாக தகவல்கள் வெளியானது. இக்கட்சிக்கு அவரே பொதுச் செயலாளர் என்றும், மனைவி ஷோபா பொருளாளர் என்றும் குறிப்பிடப்பட்டிருந்தது.

இந்த தகவல் பொது வெளியில் வந்த பொழுது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. தனது பெயரில் கட்சி தொடங்கக் கூடாது என்று தந்தையை விஜய் அறிவுறுத்தினார். இதைத்தொடர்ந்து, அவரது தாயார் ஷோபா, என்னிடம் விளக்கி சொல்லாமலேயே ஏதோவொரு விண்ணப்பத்தில் என் கணவர் கையெழுத்து வாங்கி சென்று விட்டார். அது எதற்கு என்பது இப்போதுதான் எனக்கு தெரிய வருகிறது. அதனால் நான் கட்சி பொருளாளர் பதவியில் இருந்து விலகிக் கொள்கிறேன். எனக்கும், கணவர் தொடங்கு கட்சிக்கும் எந்தவித சம்பந்தமும் இல்லை என்று ஒரு போடு போட்டார்.

குடும்பத்தில் குழப்பம் உருவானதால் சந்திரசேகர் அரசியல் கட்சி தொடங்கும் தனது ஆசையை தற்காலிகமாக ஒத்தி வைத்தார். சினிமாவில் தான் வளர்த்துவிட்ட மகனே தன்னை இப்படி தர்ம சங்கடத்துக்கு உள்ளாக்குவார் என்று எஸ் ஏ சந்திரசேகர் ஒருபோதும் நினைத்திருக்க மாட்டார்.

ஆனால் இதன் பின்னணியில் என்ன இருந்து இருந்தது என்பதை அவர் நிச்சயம் யூகித்து இருப்பார். அதே நேரத்தில் அவருக்கு இன்னொரு குழப்பமும் வந்தது. “நான் இதற்கு முன்பு எத்தனையோ முறை விஜய் அரசியலுக்கு வருவார், வருவார் என்று சொல்லியிருக்கிறேன். அப்போதெல்லாம் அதை பெரிதாக எடுத்துக் கொள்ளாதவர்கள், இப்போது ஏன் இதை பூதாகர பிரச்சனையாக உருவாக்குகிறார்கள்?” என்று வெள்ளந்திபோல் கேட்கிறார், சந்திரசேகர்.

விஜய் பெயரில் அரசியல் கட்சி தொடங்குவது யாருக்கோ பெரும் பாதிப்பை ஏற்படுத்தப் போகிறது என்பதை மட்டும் அவரால் உணர்ந்து கொள்ள முடிந்தது. மகனுக்கு அரசியல் பிரமுகர்கள் மறைமுக மிரட்டல் விடுக்க வாய்ப்பிருக்கிறது என்றும் அவர் புரிந்து கொண்டார்.

இதுகுறித்து தமிழ் திரையுலகினர் கூறும்போது, “விஜய் மக்கள் இயக்கம் சாதி மத பேதமின்றி அனைத்து மக்களுக்கும் சேவையாற்றி வருகிறது. ஆனால் கிறிஸ்தவரான விஜய் சிறுபான்மையினருக்கே இதில் அதிக முன்னுரிமை கொடுக்கிறார் என்று கூறப்படுவதுண்டு. எனவே அவர் அரசியல் கட்சி தொடங்கினால் சிறுபான்மையினர் ஓட்டுகளை பிரித்து தங்களுடைய வெற்றிவாய்ப்பை சிதறச் செய்து விடுவார் என்று கருதி அவருக்கு சில அரசியல் கட்சிகள் நெருக்கடி அளித்திருக்கலாம். எனவேதான் தனது தந்தைக்கு ஏதாவது ஒன்று ஆகி விடக்கூடாது என தனது தந்தைக்கும், தனக்கும் இதில் எந்த தொடர்பும் இல்லை என்று விஜய் மறுத்து வருகிறார்” என்கின்றனர்.

இது பற்றியெல்லாம் அதிகம் கவலைப்படாத எஸ்.ஏ.சந்திரசேகர், தான் அரசியல் கட்சி தொடங்குவதில் மிகவும் உறுதியாக இருக்கிறாராம்.

இதற்கிடையே முதன்முதலாக எஸ்ஏ சந்திரசேகர் தாக்கல் செய்த மனுவின் அடிப்படையில் அவர் குறிப்பிட்டிருந்த 3 பெயர்களில் ஒரு பெயரை கட்சியின் பெயராக பதிவு செய்துகொள்ள அவருக்கு அனுமதி அளிக்க அண்மையில் தேர்தல் ஆணையம் முடிவு செய்தது. இந்தத் தகவல் நடிகர் விஜய்க்கு தெரியவந்ததும் ரொம்பவே அதிர்ந்து போனார். உடனடியாக தேர்தல் ஆணையத்திடம் ஒரு கோரிக்கையை வைத்தார்.

அந்த கோரிக்கை மனுவில் “எனது பெயரில் யாரும் கட்சி தொடங்க தலைமை தேர்தல் ஆணையம் அனுமதி வழங்கக்கூடாது. அது பிரபல நடிகரான எனது புகழுக்கு மிகவும் களங்கத்தை ஏற்படுத்தும். இதையும் மீறி அனுமதிக்கப்பட்டால் இதுதொடர்பாக நீதி தேடி கோர்ட்டுக்கு செல்வேன் “என்று கேட்டுக்கொண்டிருந்தார். இதை ஏற்றுக்கொண்ட தலைமை தேர்தல் ஆணையம் சந்திரசேகருக்கு அளிக்க இருந்த கட்சியின் பெயரை கடைசி நிமிடத்தில் நிறுத்தி வைத்துவிட்டது.

மேலும் இதுபற்றிய தகவல் எஸ்ஏ சந்திரசேகருக்கு தெரிவிக்கப்பட்டு அதில் விஜய் என்று பெயர் இல்லாத வேறு 3 பெயர்களை குறிப்பிட்டு மீண்டும் விண்ணப்பிக்கும்படி கேட்டுக் கொண்டு இருக்கிறது.

இதுகுறித்து தலைமை தேர்தல் ஆணைய வட்டாரங்கள் கூறுகையில் “நடிகர் விஜய் விடுத்த கோரிக்கையில் நியாயம் இருக்கிறது. எனவே அவருடைய தந்தை சந்திரசேகருக்கு அளிக்க இருந்த அகில இந்திய தளபதி விஜய் மக்கள் இயக்கம் என்னும் கட்சியின் பெயர் பதிவு செய்யப்படுவது நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது” என்று தெரிவித்தன.

இதுபற்றி தனது நெருங்கிய நண்பர் ஒருவரிடம் விஜய் கூறுகையில், “நானும் கட்சி தொடங்க வேண்டாம் என்று அப்பாவிடம் பலமுறை மன்றாடி கேட்டுவிட்டேன். ஆனால் அப்பா கேட்பதாக இல்லை. அவரால் எனக்கும் சிக்கல் வந்துவிடும் போலிருக்கிறது.
அப்பாவால் குடும்பத்திலும் நிம்மதி இல்லாமல் போய்விட்டது”
என்று வேதனைப்பட்டு இருக்கிறார்.

மேலும் அந்த நண்பரிடம்,” கட்சிகளுக்குள் இந்த முறை பெரிய அளவில் மோதல் நடக்கும். அதற்குள் சிக்கிக் கொண்டு எனது தந்தை அவமானப்பட்டு விடக்கூடாது என்பதற்காகத்தான் அவருக்கு இப்படி தடை போடுகிறேன். ஆனால் அதை புரிந்து கொள்ளாமல் அப்பா பிடிவாதம் காட்டுகிறார்” என்றும் விஜய் கவலைப்பட்டுள்ளார்.

தந்தையை சமாதானப்படுத்தும் முயற்சியில் விஜய் மனம் தளராமல் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறார். இந்த விவகாரத்தில் கண்ணா நீயும்…நானுமா?… என்று மகனுடன் எஸ்.ஏ. சந்திரசேகர் மோதிப் பார்ப்பாரா? என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

Views: - 0

0

0