நான் நல்லா இருக்கேன்… செவிலியர்களுடன் படம் பார்த்த நடிகர் விஜயகாந்த்…!!!

Author: Udhayakumar Raman
5 September 2021, 3:22 pm
Quick Share

செவிலியர்களுடன் சத்ரியன் படம் பார்த்ததாக தேமுதிக பொதுச் செயலாளர் விஜயகாந்த் தெரிவித்துள்ளார்

தேமுதிக பொதுச் செயலாளர் விஜயகாந்த் கடந்த சில ஆண்டுகளாகவே உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்டுள்ளார். அமெரிக்கா, சிங்கப்பூர் உள்ளிட்ட நாடுகளுக்கு சென்று சிகிச்சை பெற்று திரும்பிய அவர், தீவிர அரசியலில் இருந்து ஒதுங்கி வீட்டிலேயே தங்கி ஓய்வெடுத்து வருகிறார்.கடந்த ஒன்றரை ஆண்டுகளாக கொரோனா பரவல் காரணமாக வெளிநாட்டு பயணங்களை தவிர்த்து வந்த விஜயகாந்த், சென்னையில் உள்ள மருத்துவமனையில் அவ்வப்போது வழக்கமான பரிசோதனைகளை மேற்கொண்டு வந்தார்.இதனிடையே, கடந்த மாதம் 30ஆம் தேதி தனது இளைய மகன் சண்முக பாண்டியன் மற்றும் 2 உதவியாளர்களுடன் சிகிச்சைக்காக விஜயகாந்த் துபாய் புறப்பட்டு சென்றார். அப்போது அவரது உதவியாளர்கள் வீல் சேரில் வைத்து விஜயகாந்தை வேகமாக தள்ளிக் கொண்டே விமான நிலையத்திற்குள் நுழைந்தனர்.

இந்த காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியாகி அவரது தொண்டர்களிடம் சோகத்தை ஏற்படுத்தியது.இந்த நிலையில், தான் நலமாக உள்ளதாக விஜயகாந்த் தெரிவித்துள்ளார். இதுகுறித்து தனது ட்விட்டர் பக்கத்தில், “நான் நல்ல உடல் நலத்துடன் உள்ளேன். நான் நடித்த ‘சத்ரியன்’ திரைப்படத்தை, எனது சிகிச்சைக்கு உதவிபுரியும் செவிலியர் சகோதரிகளுடன் பார்த்த போது எடுத்த படம்” என்று குறிப்பிட்டு புகைப்படம் ஒன்றையும் பதிவிட்டுள்ளார். அந்த புகைப்படத்தில் கால் மேல் கால் போட்டு விஜயகாந்த் கெத்தாக உட்கார்ந்துள்ளார். இதனை பார்க்கும் அவரது ரசிகர்களும், தொண்டர்களும் உற்சாகமடைந்துள்ளனர்.முன்னதாக, பாஸ்போர்ட் பிரச்சினை காரணமாக விஜயகாந்துடன் அவரது மனைவி பிரேமலதா விஜயகாந்த் துபாய் செல்ல முடியாமல் போனது. இதுதொடர்பான வழக்கில் அவரது பாஸ்போர்ட்டை ஒப்படைக்க நீதிமன்றம் உத்தரவிட்டதையடுத்து, அவரும் துபாய் புறப்பட்டு சென்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

Views: - 244

3

0