விண்ணுலகில் சேவையை தொடர புறப்பட்டார் சின்ன கலைவாணர் : 72 குண்டுகள் முழங்க உடல் தகனம்..!!

17 April 2021, 6:26 pm
vivek - last - updatenews360
Quick Share

சென்னை : மாரடைப்பால் காலமான நடிகர் விவேக்கின் உடல், 72 குண்டுகள் முழங்க காவல்துறை மரியாதையுடன் தகனம் செய்யப்பட்டது.

நகைச்சுவை நடிகரும், சமூக ஆர்வலருமான நடிகர் விவேக் மாரடைப்பு காரணமாக நேற்று சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பெற்று வந்த அவர், இன்று அதிகாலை உயிரிழந்தார். அவரது மறைவிற்கு திரையுலக பிரபலங்கள், அரசியல் தலைவர்கள் மற்றும் ரசிகர்கள் அஞ்சலி செலுத்தினர்.

Vivek -Updatenews360

ரசிகர்கள், பொதுமக்கள், திரையுலகினர் மற்றும் அரசியல் தலைவர்களின் கண்ணீர் மல்க அஞ்சலிக்கு பிறகு, மாலையில் நடிகர் விவேக்கின் இறுதி ஊர்வலம் தொடங்கியது. ஊர்வலத்திற்கான அமரர் ஊர்தியில் உடலை ஏற்றுவதற்கு முடியாத அளவில் ரசிகர்களின் கூட்டம் அலைமோதியது. விருகம்பாக்கத்தில் அவரது வீட்டில் இருந்து, மேட்டுக்குப்பம் பகுதியில் உள்ள மின்மயானம் வரையில் விவேக்கின் உடல் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டது. அவரது ரசிகர்கள் மற்றும் பொதுமக்கள், அவருக்கு மரியாதை செலுத்தும் மரக்கன்றுகளை ஊர்வலத்தில் எடுத்துச் சென்றனர்.

vivek - police respect - updatenews360

பின்னர், மேட்டுக்குப்பம் மின்மயானத்தில் விவேக்கின் உடலுக்கு காவல்துறையின் மரியாதை நிகழ்த்தப்பட்டது. 24 குண்டுகள் என போலீசார் 3 முறை மேல்நோக்கி சுட்டனர். இதைத் தொடர்ந்து, நடிகர் விவேக்கின் உடலுக்கான இறுதிச்சடங்குகளை அவரது இளைய மகள் தேஜஸ்வி செய்தார். பிறகு, அவரது உடல் எரியூட்டப்பட்டது.

பூலோகத்தில் திரையில் மட்டுமல்லாது நிஜத்திலும் பல்வேறு சேவைகளை ஆற்றி வந்த நடிகர் விவேக், இனி விண்ணுலகத்தில் தனது சேவையை ஆற்ற உள்ளதாக ரசிகர்கள் கண்ணீர் கூறினர்.

Views: - 27

0

0