கொரோனா அதிகரிப்பு எதிரொலி: கோவைக்கு நாளை முதல் கூடுதல் கட்டுப்பாடுகள்…ஆட்சியர் அறிவிப்பு..!!
Author: Rajesh1 August 2021, 8:22 am
கோவை: கோவை மாவட்டத்திலும், கோவைக்கு அருகில் உள்ள கேரளாவிலும் கொரோனா தொற்று அதிகரித்து வரும் காரணத்தால் நாளை முதல் கோவைக்கு கூடுதல் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் விடுத்துள்ள அறிவிப்பில் கூறியிருப்பது, கோவை மாவட்டத்தில் உள்ள அத்தியாவசிய கடைகளான பால், மருந்தகம், காய்கறி கடைகள் தவிர மற்ற கடைகள் காலை 10 மணி முதல் மாலை 5 வரை மட்டுமே செயல்பட அனுமதிக்கப்படும்.
கோயம்புத்தூர் மாநகராட்சி எல்லைக்குட்பட்ட கிராஸ்கட் சாலை, 100 அடி சாலை, காந்திபுரம் 5,6,7வது தெருக்கள், ஒப்பணக்கார வீதி, ராமமூர்த்தி சாலை, சாரமேடு சாலை (ராயல் நகர் சந்திப்பு), ரைஸ் மில் சாலை, என்.பி.இட்டேரி சாலை, எல்லை தோட்ட சந்திப்பு, துடியலூர் சந்திப்பு ஆகிய தெருக்களில் இயங்கும் அத்தியாவசிய கடைகளான பால், மருந்தகம், காய்கறி கடைகள் தவிர மற்ற கடைகள் அனைத்தும் ஞாயிற்றுக்கிழமைகளில் இயங்க தடை விதிக்கப்படுகிறது.
மாவட்டத்தில் உள்ள அனைத்து உணவகங்களும் காலை 8 மணி முதல் மாலை 5 மணி வரை 50 சதவீத வாடிக்கையாளர்களுடன் அமர்ந்து சாப்பிட அனுமதிக்கப்படுகிறது.
மாலை 5.00 மணி முதல் இரவு 9.00 மணி வரை பார்சல் சேவைக்கு மட்டும் அனுமதி அளிக்கப்படுகிறது. கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து மார்க்கெட்டுகளில் மொத்த விற்பனை நிலையங்களுக்கு மட்டும் அனுமதி, சில்லரை விற்பனைக்கு அனுமதியில்லை மற்றும் 50 சதவிகித கடைகள் சுழற்சி முறையில் இயங்க அனுமதிக்கப்படும்.
சம்பந்தப்பட்ட உள்ளாட்சி அமைப்புகள் இதனை கண்காணிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. கேரள-தமிழ்நாடு மாநில எல்லைகள் அனைத்தும் சோதனைச்சாவடி அமைத்து கண்காணிக்கப்பட்டு வருகிறது. மேற்படி சோதனைச்சாவடி வழியாக கோயம்புத்தூர் மாவட்டத்திற்குள் வரும் பயணிகள் அனைவரும் 72 மணி நேரத்திற்குள் எடுக்கப்பட்ட RTPCR பரிசோதனை மேற்கொள்ளப்பட்ட கோவிட் இன்மை சான்று அல்லது கொரோனா தடுப்பூசி (2 தவனைகள்) செலுத்தப்பட்டதற்கான சான்று கண்டிப்பாக உடன் வைத்திருக்க வேண்டும்.
மேற்கண்ட சான்றுகள் இல்லையெனில் சோதனைச்சாவடிகளிலேயே Random RTPCR பரிசோதனை
மேற்கொள்ளப்படும். மக்கள் அனைவரும் தமிழ்நாடு அரசால் அறிவிக்கப்பட்டுள்ள அனைத்து கொரோனா தடுப்பு நிலையான இயக்க நடைமுறைகளை பின்பற்றி மாவட்ட நிர்வாகத்திற்கு ஒத்துழைப்பு அளித்திட வேண்டும்.
இவ்வாறு ஆட்சியர் அறிவித்துள்ளார்.
0
0