கூடுதல் தொகுதிகளுக்கு குறிவைக்கும் கட்சிகள் : அ.தி.மு.க.வுடன் அதிரடி பேரத்துக்குத் தயாராகும் கூட்டணித் தலைவர்கள்..!

5 September 2020, 2:15 pm
pmk - admk - updatenews360
Quick Share

சென்னை: தமிழ்நாட்டில் சட்டமன்றத் தேர்தலுக்கு 6 மாதங்களே இருக்கும் நிலையில், ஆளும் அ.தி.மு.க.வின் கூட்டணிக் கட்சிகள் கூடுதல் தொகுதிகளைக் குறிவைத்து கடும் நெருக்கடி கொடுக்கத் தயாராகி வருகின்றன. மூன்றாவது அணி, தனித்துப் போட்டி ஆகிய முழக்கங்களை முன்வைத்து அதிமுகவுடன் கடுமையாக பேரம் பேச வியூகங்களை வகுத்து வருகின்றன.

கடந்த 2019 நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் ஆளுங்கட்சிக் கூட்டணியில் 7 இடங்களில் போட்டியிட்ட பா.ம.க., அக்கட்சியின் இளைஞர் அணித்தலைவர் அன்புமணி ராமதாசை முதலமைச்சர் வேட்பாளராக்குவோம் என்று பேசத் தொடங்கியுள்ளது. நாளை கூடவிருக்கும் பா.ம.க. சிறப்புப் பொதுக்குழுவில் ‘அன்புமணி முதலமைச்சர் வேட்பாளர்’என்னும் முழக்கம் மீண்டும் உயிர்பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. 2016-ல் நடைபெற்ற சட்டமன்றத்தேர்தலில் தனித்துப் போட்டியிட்ட பாமக அன்புமணியை முதலமைச்சர் வேட்பாளராக முன்னிறுத்தி ‘மாற்றம் முன்னேற்றம் அன்புமணி’ என்ற முழக்கத்துடன் மக்களை சந்தித்தது. அத்தேர்தலில் பா.ம.க. 5 சதவீதத்துக்கு அதிகமான வாக்குகளைப் பெற்றது. வட மாவட்டங்களில் தனது செல்வாக்கை மீண்டும் காட்டியிருந்தது. மாநில முழுவதும் 23 லட்சத்துக்கு மேற்பட்ட ஓட்டுகளை வாங்கியிருந்தது.

2019-ல் நடந்த நாடாளுமன்றத் தேர்தலில் களமிறங்கிய 7 தொகுதிகளிலும் தோற்றது. ஆனாலும், அதே நேரத்தில் நடைபெற்ற 22 சட்டமன்றத் தேர்தல்களில் 9 இடங்களில் அ.தி.மு.க. வெற்றிபெற்று ஆட்சியைத் தக்கவைத்துக் கொண்டதில் பா.ம.க.வின் பங்கு முக்கியமானதாகக் கருதப்படுகிறது. குறிப்பாக அரூர், பாப்பிரெட்டிபட்டி, சோளிங்கர் ஆகிய தொகுதிகளில் பாமகவின் வாக்குகள் அ.தி.மு.க.வின் வெற்றியை உறுதி செய்தது.

வரும் 2021 சட்டமன்றத்தேர்தலிலும் பா.ம.க.வின் பங்கு முக்கியமானதாக இருக்கும் என்று கருதப்படுகிறது. வட தமிழகத்தில் இருக்கும் செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர், தர்மபுரி, கிருஷ்ணகிரி, வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, கடலூர் ஆகிய மாவட்டங்களிலும், காவிரி டெல்டா மாவட்டங்களில் அரியலூர், நாகப்பட்டினம் மாவட்டங்களிலும், கொங்குப்பகுதியில் சேலம் மாவட்டத்திலும் தேர்தல் முடிவுகளை மாற்றுவதில் பா.ம.க. முக்கிய பங்கு வகிக்கும் என்று கருதப்படுகிறது.

குறிப்பாக, சேலம் மாவட்டம் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியின் சொந்த மாவட்டமாகும். 2016-ல் தனித்துப் போட்டியிட்ட பா.ம.க. சேலம் மாவட்டத்தில் மட்டும் மூன்று இலட்சத்துக்கும் மேற்பட்ட வாக்குகளைப் பெற்றது. முதலமைச்சர் பழனிசாமியின் எடப்பாடி தொகுதியில் பா.ம.க. எப்போதுமே வலிமையான கட்சியாக இருப்பதால், அவரது வெற்றிக்கு பா.ம.க.வின் தேவை அதிகமாக இருக்கும் என்பது பா.ம.க. தலைவர்களின் கணக்கு. எடப்பாடி தொகுதியில் 1991-ல் தனித்து களங்கண்ட பா.ம.க. 25.03 சதவீத வாக்குகளையும், மீண்டும் 1996-ல் தனித்துப் போட்டியிட்டு 37.68 சதவீத ஓட்டுகளையும் பெற்றது. 2016-ல் தனித்து களம் இறங்கியபோதும் அ.தி.மு.க.வுக்கு அடுத்தபடியாக 25.12 சதவீத வாக்குகளை அக்கட்சி வாங்கியுள்ளது. முதலமைச்சர் தொகுதியின் அவருக்குப் போட்டியே பா.ம.க.தான் என்ற நிலையில், பா.ம.க. கூட்டணி அவருக்கு 2021 சட்டமன்றத்தேர்தலில் வெற்றியை உறுதியாக்கும் என கணிக்கப்படுகிறது.

அ.தி.மு.க. கூட்டணிக்கும் முதலமைச்சரின் மாவட்டத்திலும், முதலமைச்சரின் சொந்தத் தொகுதியிலும் பா.ம.க. கூட்டணியால் அ.தி.மு.க.வுக்கு ஏற்படும் வெற்றி வாய்ப்புகளையும், தனது முக்கியத்துவத்தையும், பா.ம.க. தலைவர்கள் உணர்ந்தே இருக்கிறார்கள். இந்த வலிமையைக் காட்டி 2021 தேர்தலில் தங்கள் கட்சிக்கு 80 இடங்களைப் பெறுவதற்கு பா.ம.க. முயலும் என்று தெரிகிறது. அத்தொகுதிகளில் பெரும்பானவற்றில் வென்றுவிட்டால் தமிழ்நாட்டில் ஆட்சியில் பங்கு வகிக்கும் வாய்ப்பும் பா.ம.க.வுக்குக் கிடைக்கும் என்பதே அக்கட்சித்தலைவர்களின் தேர்தல் கணக்கு.

அ.தி.மு.க. போன்ற மிகப்பெரிய கட்சி தங்களுக்கு 80 இடங்களை எளிதாகத் தந்துவிடாது என்பது பா.ம.க. தலைவர்களுக்குத் தெரியாததல்ல. இதற்கு முன்பு தி.மு.க., அ.தி.மு.க. போன்ற முக்கிய கட்சிகளுடன் கூட்டணி அமைத்தபோது, பா.ம.க.வுக்கு 27 முதல் 30 இடங்களே தரப்பட்டன. ஆனால், தற்போதைய சூழலில் ஜெயலலிதா, கருணாநிதி போன்ற ஆளுமைகள் இல்லாத நிலையில் பா.ம.க.வின் முக்கியத்துவம் அதிகரித்துள்ளதாக அக்கட்சியின் தலைவர்கள் கருதுகிறார்கள். நாடாளுமன்றத்தேர்தலில் தி.மு.க. கூட்டணி 38 இடங்களில் வெற்றிபெற்ற நிலையில், அ.தி.மு.க.வுக்கு பா.ம.க.வின் தயவு தேவைப்படுவதாகவும் அவர்கள் உறுதியாக நம்புகின்றனர். பா.ம.க.வுக்கு தனித்து போட்டியிவது மட்டுமன்றி பா.ஜ.க.வுடன் சேர்ந்து மூன்றாவது அணி அமைக்கும் வாய்ப்பும் இருப்பதாக அக்கட்சி நினைக்கிறது.

pmk-aiadmk-alliance- updatenews360

அ.தி.மு.க. அணியில் அடுத்த இடத்தில் 5 நாடாளுமன்றத் தொகுதிகளில் போட்டியிட்ட பா.ஜ.க.வும், தம் பங்குக்கு தாமே கூட்டணிக்குத் தலைமை வகிப்போம் என்று கூறிவருகிறது. பா.ஜ.க.வின் மாநிலத் துணைத்தலைவர் வி.பி. துரைசாமி சொன்னதை பா.ஜ.க. தலைவர்கள் யாரும் இதுவரை மறுக்கவில்லை. நட்சத்திர நாயகன் ரஜினிகாந்துடன் இணைந்தோ, பா.ம.க., தே.மு.தி.க. போன்ற கட்சிகளுடன் சேர்ந்தோ மூன்றாவது அணி அமைக்கும் திட்டம் பா.ஜ.க.விடம் இருப்பதாக அக்கட்சியின் ஊடகங்களிடம் தகவல்களைத் தெரிவித்து வருகிறார்கள். ஆனால், அ.தி.மு.க.வைப் பொறுத்தவரையில் பா.ம.க.வுக்குத் தரும் மதிப்பை பா.ஜ.க.வுக்குத் தரும் வாய்ப்பு குறைவு.

நாடாளுமன்றத் தேர்தலில் மிகப்பெரிய தோல்விக்குப் பிறகு நடைபெற்ற வேலூர் நாடாளுமன்ற இடைத்தேர்தலிலும் விக்கிரவாண்டி, நாங்குநேரி சட்டமன்ற இடைத்தேர்தலிலும் பா.ஜ.க.வை, அ.தி.மு.க. தலைவர்கள் தேர்தல் பிரச்சாரத்துக்கு அழைக்கவில்லை. வேலூரில் அ.தி.மு.க. குறைந்த ஓட்டு வித்தியாசத்தில் தோற்றது. விக்கிரவாண்டியிலும் நாங்குநேரியிலும் அ.தி.மு.க. வென்றது. பா.ஜ.க.வுடன் கூட்டணி அமைத்ததே நாடாளுமன்றத் தேர்தலில் மிகப்பெரிய தோல்விக்குக் காரணம் என்று அ.தி.மு.க.வின் முக்கிய தலைவர்கள் கருதுகிறார்கள்.

பாஜகவுடன் விலகி நின்றதே வேலூரிலும் பின்னர் நடைபெற்ற இடைத்தேர்தல்களிலும் அ.தி.மு.க.வுக்கு நன்மையாக முடிந்தது என்றும் அ.தி.மு.க. தொண்டர்களும் நினைக்கிறார்கள். அ.தி.மு.க.வுக்கு பா.ஜ.க. தேவையற்ற சுமையெனவும் ஆளுங்கட்சித் தலைவர்களும், தொண்டர்களும் எண்ணும் நிலையில், பா.ஜ.க.வுடன் உறவு முறிந்தால் அதிமுக மகிழ்ச்சியே அடையும். ஆனால், பா.ஜ.க.வை அ.தி.மு.க. கண்டுகொள்ளவில்லையென்றால், அ.தி.மு.க.வில் இருக்கும் பா.ஜ.க. ஆதரவாளர்களை வைத்து பா.ஜ.க. கடும் நெருக்கடி தர வாய்ப்புகள் உண்டு.

மற்றொரு கூட்டணிக் கட்சியான தே.மு.தி.க.வும் தனித்துப்போட்டி என்று பேசிவருகிறது. அக்கட்சித்தலைவர் விஜயகாந்தின் மனைவி பிரேமலதா தனித்துப் போட்டியிடவே தொண்டர்கள் விரும்புவதாக தலைவரின் பிறந்தநாளில் பேட்டி அளித்தார். விஜயகாந்த் ‘கிங்’காக இருப்பதையே தொண்டர்கள் ஆசைப்படுவதாக அவர் கூறினார். தே.மு.தி.க.வும் அ.தி.மு.க.வுக்கு பெரிய அளவு நெருக்கடி கொடுக்க முடியாது என்று கருதப்படுகிறது. கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் களம் இறங்கிய 4 தொகுதிகளில் 2 இடங்களில் தே.மு.தி.க. டெபாசிட் தொகை இழந்தது. அக்கட்சியால் பெரிய அளவு பயனில்லை என்றுதான் அ.தி.மு.க. தலைவர்கள் எண்ணமிடுகின்றனர். அ.தி.மு.க.வால் உதாசீனப்படுத்தப்பட்டால் மூன்றாவது அணி அமைக்கப்போவதாக தே.மு.தி.க தலைவர்கள் கூறிவருகின்றனர். இன்னொரு கூட்டணிக்கட்சியான த.மா.கா. இதுவரை அமைதியாக இருந்து வருகிறது.


தமிழ்நாட்டில் இதுவரை மூன்றாவது அணி வெற்றிகரமாக அமைந்ததில்லை. ஆனாலும், தனித்துப்போட்டி என்றும், மூன்றாவது அணியென்றும் முழக்கமிடுவது அ.தி.மு.க.வுக்கு முடிந்த அளவு நெருக்கடி தந்து கூடுதல் இடங்களைப்பெறும் உத்தியாகப் பார்க்கப்படுகிறது.

Views: - 0

0

0