இரு கூட்டணியிலும் பேச்சுவார்த்தை இழுபறி : முடிவுக்கு வராத தொகுதி பங்கீடு!!

3 March 2021, 11:07 am
ADMK - dmk - updatenews360
Quick Share

தேர்தல் என்றாலே திடீர் திருப்பங்களுக்கும் பரபரப்புகளுக்கும் ஒரு போதும் பஞ்சம் இருக்காது. அதுவும் தமிழக சட்டப்பேரவை என்றால் தேர்தல் சொல்லவேண்டியதே இல்லை. மணிக்கு மணி, நிமிடத்திற்கு நிமிடம் கள நிலவரம் விறுவிறுப்புடன் மாறிக்கொண்டே இருக்கும். அது அரசியல் ஆர்வலர்களை மட்டுமின்றி பொதுமக்களின் இதயத் துடிப்பையும் தாறுமாறாக எகிற வைக்கும்.

அதுபோன்ற ‘திக் திக்’ காட்சிகள்தான் தமிழக அரசியல் நாடக மேடையில் கடந்த சில நாட்களாக அரங்கேறி வருகிறது.

Sunil arora - updatenews360

பிப்ரவரி 25-ம் தேதி தமிழக சட்டப்பேரவைக்கு தலைமை தேர்தல் கமிஷன் தேர்தல் தேதியை அறிவித்தது. இதனால் அரசியல் கட்சிகள் சுறுசுறுப்பு அடைந்தன. ஏற்கனவே அதிமுகவும், திமுகவும் 2019 நாடாளுமன்ற தேர்தலின்போது அமைத்த கூட்டணியை அப்படியே தக்க வைத்துக் கொண்டிருந்ததால் தொகுதி பங்கீடு எந்த சிக்கலும் இன்றி சுமுகமாக முடிந்துவிடும் என்றே எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால் தொகுதி பங்கீடு என்பது அவ்வளவு சுலபமான காரியம் அல்ல என்பதை கடந்த 4 நாட்களாக நடந்துவரும் அரசியல் நகர்வுகள் மூலம் நன்றாக புரிந்துகொள்ள முடிகிறது. அதிமுக கூட்டணியிலும், திமுக கூட்டணியிலும் இடம் பெற்றுள்ள கட்சிகள் அந்த அளவிற்கு கண்களுக்குள் விரலை விட்டு ஆட்டம் காட்டி வருகின்றன.

இதில் ஆச்சரியமளிக்கும் விஷயம் என்னவென்றால் அதிமுக அரசு, மிகவும் பிற்பட்டோர் பட்டியலில் உள்ள வன்னியர்களுக்கு
20 சதவீத உள் இட ஒதுக்கீட்டை வழங்கினால் மட்டுமே அதிமுக அணியில் நீடிப்போம். தொகுதி பங்கீடு பற்றியும் பேசுவோம் என்று பாமக தலைவர் டாக்டர் ராமதாஸ் 2 மாதமாக கடுமை காட்டி வந்தார்.

அவரை அதிமுக அமைச்சர்கள் பலமுறை தைலாபுரம் தோட்டம் சென்று சந்தித்து சமாதானம் பேசிய பிறகும் கூட ராமதாஸ் அசைந்து கொடுக்கவில்லை. இதைத்தொடர்ந்து, அதிமுக அரசு சட்டப்பேரவையில் வன்னியர்களுக்கு 10.5 சதவீத உள் இட ஒதுக்கீடு வழங்க வகை செய்யும் சட்ட மசோதாவை கடந்த 25-ந் தேதி மாலையில் தாக்கல் செய்து அதை உடனடியாக நிறைவேற்றவும் செய்தது.

admk - pmk - updatenews360

மறுநாளே, அதிமுக அணியில் நீடிப்பதை பாமக உறுதி செய்ததுடன் 23 தொகுதிகளில் போட்டியிட சம்மதம் தெரிவித்து அதற்கான ஒப்பந்தத்திலும் கையெழுத்திட்டது. இப்படியொரு திடீர் திருப்பம் ஏற்படும் என்று யாருமே எதிர்பார்த்திருக்க மாட்டார்கள்.

அதேநேரம் கடந்த நவம்பர் மாதமே அதிமுக கூட்டணியில் இணைந்து போட்டியிடுவதை உறுதி செய்த பாஜக இதுவரை தொகுதி பங்கீடு பேச்சை முடிவுக்கு கொண்டு வராமல் இழுத்தடித்து வருகிறது. இத்தனைக்கும் கடந்த மூன்று நாட்களுக்கு முன்பு மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா சென்னை வந்தபோது, தொகுதி பங்கீடு பற்றி முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் ஆகியோருடன் விரிவாக ஆலோசனை நடத்தினார். பங்கீட்டை விரைந்து முடியுங்கள் என்று இரு கட்சி தலைவர்களிடமும் கூறிவிட்டு சென்றார்.

ஆனாலும் தொகுதி பங்கீடு பேச்சில் இதுவரை எந்த முன்னேற்றமும் இல்லாமல் இழுபறி நிலையே நீடிக்கிறது. அதிமுகவுக்கு மிகுந்த செல்வாக்கு உள்ள கொங்கு மண்டலத்தில் பாஜக 10 தொகுதிகளை கேட்பதுதான் இந்த முட்டுக்கட்டைக்கு காரணம் என்கிறார்கள். அதிமுகவோ 3 தொகுதிகளுக்கு மேல் ஒதுக்க தயங்குகிறது. எப்படியும் இன்னும் ஓரிரு நாட்களில் தொகுதி பங்கீடு சுமுகமாக முடிந்துவிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பாஜகவுக்கு 21 முதல் 25 தொகுதிகள் வரை ஒதுக்கப்படலாம்.

பாஜகவுடன் அதிமுக தொகுதிப் பங்கீடு பேச்சு நடத்திக் கொண்டிருந்த நேரத்தில், அமமுக தரப்பு ஒரு கதையை ஜோடித்து அதை ஊடகங்களுக்கு பரப்பி விட்டதாக சொல்லப்படுகிறது.

அதாவது அதிமுக கூட்டணியில் அமமுகவை இணைக்க பாஜக கடும் நெருக்கடி அளித்து வருவதாகவும், அதனால்தான் இரு கட்சிகளின் தொகுதி பங்கீடு பேச்சு இழுத்துக் கொண்டே போகிறது என்றும் கூறப்பட்டது. தினகரனின் தீவிர ஆதரவாளர்களோ இன்னும் ஒருபடி மேலே போய் பாஜக 36 தொகுதிகளை அதிமுகவிடம் பெற்று அதில்18 தொகுதிகளை உள் இட ஒதுக்கீடாக அமமுகவுக்கு தருமென்று இன்னொரு கதையை ஜோடித்தும் உலவவிட்டனர். தமிழக பாஜக தலைவர்களோ அப்படி எந்த ஒரு திட்டமும் தங்களிடம் இல்லை என்று கூறி கதை கட்டியவர்களுக்கு தக்க பதிலடியும் கொடுத்தனர்.

இன்னொருபக்கம், தேமுதிக அங்கு போகும்…இங்கு போகும்…டிடிவி தினகரனின் அமமுகவில் சரணடையும் என்று கடந்த 2 நாட்களாக ஒரு பூடக தகவல் வெளியாகி ஊடகங்களை ஒரு கலக்கு கலக்கியது.

DMDK - updatenews360

மேலும் அக்கட்சியின் துணைப் பொதுச் செயலாளர் சுதீஷ், தேமுதிக 234 தொகுதிகளிலும் தனித்துப் போட்டியிடும் என்று ஒரு டுவிட் போட அரசியல் களம் அனல் பறந்தது. பின்னர் அதிமுக தலைவர்களுடன் இரண்டாம் கட்ட பேச்சு வார்த்தையிலும் தேமுதிக ஈடுபட்டது. இதுவும் இழுபறியிலேயே முடிந்துள்ளது.

திமுக கூட்டணியின் நிலையோ இன்னும் மோசம். இதுவரை அந்த கூட்டணியில் கொடுத்த இடங்களை வாங்கிக் கொண்ட இந்திய யூனியன் முஸ்லிம் லீக், மனிதநேய மக்கள் கட்சி தவிர வேறு எந்தக் கட்சியும் முதல் கட்ட தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தையில் திருப்தி அடைந்ததாக தெரியவில்லை.

இந்த நிலையில் இரண்டாம் கட்ட பேச்சுக்கு திடீரென காங்கிரசுக்கு திமுக அழைப்பு விடுக்க தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ். அழகிரியும் அக்கட்சியின் மூத்த தலைவர்கள் சிலரும் திமுக தொகுதி பங்கீட்டு குழுவினருடன் பேச்சுவார்த்தை நடத்தினர். சுமார் 30 நிமிடங்கள் இந்தப் பேச்சு நடந்தது.

அதன் பின் செய்தியாளர்களைச் சந்தித்த அழகிரி பேச்சுவார்த்தை சுமுகமாகவும், சிறப்பாகவும், வெற்றிகரமாகவும் அமைந்ததாக தெரிவித்தார். 2 நாட்களுக்கு பிறகு மீண்டும் திமுகவுடன் பேச்சு நடத்துவோம் என்றும் தெரிவித்தார். முந்தைய பேச்சுவார்த்தையின்போது 16 தொகுதிகள் தருவதாக கூறிய திமுக, இரண்டாம் சுற்றுப் பேச்சில் 20 தொகுதிகள் ஒதுக்குவதாக கூறியிருக்கிறது. ஆனால் இது காங்கிரசுக்கு ஏற்புடையதாக இல்லை என்று தெரியவருகிறது. ராகுல்காந்தி ஏற்கனவே கேட்ட 41தொகுதியிலிருந்து சற்று கீழே இறங்கி வந்து 36 தொகுதிகள் கேட்டதாக கூறப்படுகிறது.

Rahul_Gandhi_UpdateNews360

இதனால் திமுக கூட்டணியில் இன்னும் 2 நாட்களுக்கு இழுபறி நீடிக்கும் என்று எதிர்பார்க்கலாம். அதேபோல் திமுகவுடன் முதல் சுற்று தொகுதி பங்கீடு பேச்சை முடித்துவிட்டு வந்த மதிமுக, விசிக, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட் தலைவர்கள் ஒருவர் முகத்திலும் தெளிவை காண முடியவில்லை. மகிழ்ச்சியும் தென் படவில்லை.

இந்த நான்கு கட்சிகளுமே தலா 12 தொகுதிகளை கேட்டதாகவும் அதற்கு திமுக தரப்பில் தலா 5 தொகுதிகள் வரை தருவதாகவும் கூறப்பட்டு இருக்கிறது. இதையடுத்து திமுகவுடன் தொடர்ந்து பேசுவோம் என விசிக தலைவர் திருமாவளவன் கூறியிருக்கிறார்.

மதிமுக பொதுச்செயலாளர் வைகோவோ குறைந்த பட்சம்
10 தொகுதிகளை எதிர்பார்க்கிறார். தனிச் சின்னத்தில்தான் போட்டியிடுவோம் என்றும் அவர் உறுதிபட தெரிவித்தார். இதையடுத்து அவரை திமுக தலைவர்கள் சமாதானப்படுத்தும் முயற்சியிலும் ஈடுபட்டு வருகின்றனர். இப்படி திமுக கூட்டணியில் உள்ள 5 முக்கிய கட்சிகளும் சொல்லி வைத்தாற் போல் முரண்டு பிடிப்பதால் ஸ்டாலின் அரண்டு தான் போயிருக்கிறார்.

dmk_alliance - updatenews360

அடுத்த சுற்று பேச்சு இன்னும் 2 நாட்களுக்குள் முடியாவிட்டால் அது அதிமுக – திமுக கூட்டணி இரண்டுக்குமே பெரும் தலைவலியாக அமைந்து விடும். ஏனென்றால், அடுத்து தொகுதிகளை பிரித்து ஒதுக்குவது என்னும் இன்னொரு பெரும் இடியாப்ப சிக்கலும் இருக்கிறது.

இதனால் நேர்காணலை முடித்து பிரதான கட்சிகள் வேட்பாளர் பட்டியலை வெளியிடுவது தாமதமாகிக் கொண்டே போகும்.
இதுபோன்ற நெருக்கடியை பயன்படுத்தி கூடுதல் தொகுதிகள் கேட்டு பேரம் பேசுவது கூட்டணி கட்சிகளின் வாடிக்கை என்பதும் குறிப்பிடத்தக்கது.

அடுத்து வரும் இரு நாட்களும் அதிமுகவுக்கும், திமுகவுக்கும் அக்கினி பரீட்சையாக இருக்கும் என்பதில் எந்த சந்தேகமும்
இல்லை!

Views: - 19

0

0