மத்திய அமைச்சரவையில் இடம்பெறப்போகும் அதிமுக : யார் அந்த எம்.பி…. பரிசீலனையில் வழிகாட்டுதல் குழு..!!!

Author: Babu
10 October 2020, 5:39 pm
admk - bjp - updatenews360
Quick Share

கடந்த 2019ம் ஆண்டு மே 30ம் தேதியன்று அமைக்கப்பட்ட புதிய அமைச்சரவையுடன் பிரதமர் மோடி, மத்தியில் தனது 2வது ஆட்சியைத் தொடங்கினார். அதில், 24 கேபினட் அமைச்சர்கள், 9 இணை அமைச்சர்கள் (தனிப் பொறுப்பு), 23 இணை அமைச்சர்கள் உள்பட 57 அமைச்சர்கள் இடம்பெற்றிருந்தனர். பா.ஜ.க. தலைமையிலான கூட்டணியில் அங்கம் வகித்து வரும் கட்சிகளான சிவசேனா, சிரோன்மணி அகாலிதளம், லோக் ஜனசக்தி, இந்திய குடியரசு கட்சிகளுக்கு மத்திய அமைச்சரவையில் இடம் அளிக்கப்பட்டிருந்தது.

பிரதமர் மோடியின் அரசு ஒன்றரை ஆண்டுகளை கடந்து ஆட்சி செய்து வரும் நிலையில், இதுவரையில் மத்திய அமைச்சரவை விரிவாக்கமோ, மாற்றமோ செய்யப்படவில்லை.

Modi_UpdateNews360

இந்த சூழலில், மகாராஷ்டிரா சட்டப்பேரவை தேர்தலில் ஏற்பட்ட மோதலினால், பாஜகவின் கூட்டணியில் இருந்து சிவசேனா விலகியது. இதனால், அக்கட்சியின் சார்பில் மத்தி அமைச்சராக இருந்து வந்த அரவிந்த் சாவந்த் பதவியை ராஜினாமா செய்தார். இதேபோல, வேளாண் திருத்த சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து, அண்மையில் பாஜக கூட்டணியில் இருந்து சிரோன்மணி அகாலிதளம் விலகியதால், அக்கட்சியின் சார்பில் மத்திய அமைச்சர் பொறுப்பு வகித்து வந்த ஹர்சிம்ரத் கவுர் பாதலும் அதனை துறந்தார்.

அதேவேளையில், கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டிருந்த மத்திய ரயில்வே இணை அமைச்சர் சுரேஷ் அங்காடியும் சிகிச்சை பலனின்றி காலமானார். இதனால், அமைச்சரவையில் மேலும் ஒரு பதவி காலியானது. இதனை தொடர்ந்து, இருதய அறுவை சிகிச்சை செய்து கொண்ட மத்திய நுகர்வோர் பாதுகாப்புத்துறை அமைச்சர் ராம்விலாஸ் பாஸ்வானும் நேற்று முன்தினம் காலமானார். இதன்மூலம், மத்திய அமைச்சரவையில் கூட்டணி கட்சிகளின் பிரதிநிதித்துவ காலியிடம் அதிகரித்தது. மேலும், இரு அமைச்சர்களின் மறைவு மற்றும் இரு அமைச்சர்களின் விலகலால், மொத்தம் 4 அமைச்சர்களின் பதவிகள் காலியாக உள்ளன.

இதனால், அமைச்சர்கள் நரேந்திரசிங் தோமர், ரவிசங்கர் பிரசாத், ஹர்ஷ்வர்தன், பியூஷ் கோயல், பிரஹ்லாத் ஜோஷி, பிரகாஷ் ஜவடேகர் உள்ளிட்ட அமைச்சர்கள் கூடுதல் பொறுப்புகளை கவனித்து வருகின்றனர். மேலும், கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைகளினால், பணிச்சுமை அதிகரித்துள்ளதால், மத்திய அமைச்சர்கள் சலிப்படைந்துள்ளதாகக் கூறப்படுகிறது. எனவே, அமைச்சரவையை விரைந்து விரிவாக்கம் செய்ய வேண்டும் என பிரதமர் மோடிக்கு, அமைச்சர்கள் அழுத்தம் கொடுத்து வருவதாகக் கூறப்படுகிறது.

இதனிடையே, வேளாண் திருத்த சட்ட மசோதாவிற்கு எதிர்ப்பு தெரிவித்து கூட்டணி கட்சிகள் வெளியேறி வரும் நிலையில், தொடர்ந்து ஆதரவு கொடுத்து வரும் அதிமுகவை அமைச்சரவையில் இடம்பெறச் செய்ய பிரதமர் மோடி முடிவு செய்துள்ளதாகக் கூறப்படுகிறது. எனவே, ரவீந்திநாத், வைத்தியலிங்கம், கேபி முனுசாமி, தம்பித்துரை ஆகியோரின் பெயர்கள் மத்திய அமைச்சரவை இடம்பெறச் செய்வதற்கான போட்டியில் பரிசீலனை செய்யப்பட்டு வருகிறது. விரைவில் இதற்கான அறிவிப்புகள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Views: - 51

0

0