பாஜகவின் நெருக்கடிக்குப் பணியாத அதிமுக : ஆட்சியில் பங்கு கேட்ட பாஜகவுக்கு 20 இடங்கள்தான்!!

6 March 2021, 6:34 pm
EPS - bjp - updatenews360
Quick Share

சென்னை : வரும் 2021 சட்டமன்றத் தேர்தலில் பாஜகவின் கடும் அழுத்தத்துக்கு சிறிதும் அசைந்து கொடுக்காமல், அந்தக் கட்சிக்கு 20 தொகுதிகளை மட்டுமே அதிமுக ஒதுக்கியுள்ளது. பாஜகவின் மிரட்டலுக்கு அதிமுக அடிபணிந்து கிடப்பதாக திமுகவும், அதன் கூட்டணிக் கட்சிகளும் செய்துவரும் பிரச்சாரத்தை முறியடிக்கும் வகையிலும், கூட்டணிக்குத் தலைமை யார் என்பதை மக்களுக்கு உணர்த்தும் வகையில் இருப்பதாக அதிமுக தொண்டர்கள் உற்சாகத்தில் மிதக்கிறார்கள்.

கடந்த 2019-ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் பாஜக அதிமுகவுடன் இணைந்தபோது, மத்தியில் ஆளும் கட்சி என்பதால் அதற்கு அதிக இடங்கள் ஒதுக்கப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், பாஜகவின் பலத்துக்கேற்ப 5 தொகுதிகளையே அதிமுக தந்தது. ஆட்சிக்கும், கட்சிக்கும் கடும் நெருக்கடி ஏற்பட்ட நிலையிலும் முதல்வர் எடப்பாடி பழனிசாமி பாஜகவை கட்டுக்குள் வைத்திருந்ததை அந்தத் தொகுதி பங்கீடு காட்டியது.

ஆனால், சட்டமன்றத் தேர்தல் நெருங்கிய நிலையில் பாஜக தனது பலத்தைக் காட்டவும், செல்வாக்கை அதிகரிக்கவும் பல்வேறு நடவடிக்கைகளில் ஈடுபட்டது. பாஜக மாநிலத் தலைவர் எல்.முருகன் தலைமையில் வேல்யாத்திரை நடத்தப்பட்டது. அடுத்து வரும் தேர்தலுக்குப் பிறகு தமிழ்நாட்டில் பாஜக பங்கு வகிக்கும் ஆட்சியே நடைபெறும் என்று பாஜக தலைவர்கள் கூறிவந்தனர். அதிமுக அறுதிப்பெரும்பான்மையுடன் வெற்றிபெறும் என்பதால், கூட்டணி ஆட்சி என்ற பேச்சுக்கே இடமில்லை என்று அமைச்சர் டி.ஜெயகுமார் அதற்கு திட்டவட்டமான பதிலை அளித்தார்.

கடந்த மூன்று சட்டமன்றத்தேர்தல்களில் பாஜக தனித்துப் போட்டியிட்டபோது அந்தக் கட்சிக்கு வெறும் 2 சதவீத வாக்குகளே கிடைத்துள்ளது. சென்ற 2016 சட்டமன்றத் தேர்தலில் பாஜகவுக்கு 2.84 சதவீத ஓட்டுக்களே கிடைத்தது. தமிழ்நாட்டில் இதுவரை கூட்டணி ஆட்சி அமைந்ததில்லை என்பதால் கூட்டணி ஆட்சி என்ற முழக்கத்துடன் தேர்தலை சந்திக்கும் எந்த அணியும் தோல்வி அடையும் என்ற நிலையில் பாஜகவின் கூட்டணி ஆட்சிக் கோரிக்கையை அதிமுக ஏற்கவில்லை.

பாஜக தலைவர்கள் தொடர்ந்து தமிழ்நாட்டில் பாஜக கூட்டணி ஆட்சி அமையும் என்று பேசி வந்தார்கள். தமிழ்நாட்டில் கடந்த 2006, 2011,2016 ஆகிய ஆண்டுகளில் நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தல்களில் எந்தக்கட்சியும் பாஜகவுடன் கூட்டணி வைக்க முன்வரவில்லை. பாஜகவுடன் கூட்டணி அமைத்தால் சிறுபான்மை மக்களின் வாக்குகளும், பாஜகவை கடுமையாக எதிர்ப்பவர்களின் ஓட்டுகளும் கிடைக்காது என்ற பயத்தில் பாஜகவை அனைத்துக்கட்சிகளும் நெருங்கவிடவில்லை.

2006-ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் பாஜக 2.02 சதவீத வாக்குகளைப் பெற்றது. அடுத்த 2011-ஆம் ஆண்டு நடந்த தேர்தலில் அந்தக்கட்சி 2.22 சதவீத ஓட்டுகளை வாங்கியது. மத்தியில் பாஜக ஆட்சிக்கு வந்தபின் 2016-ஆம் நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜக 2.84 சதவீத வாக்குகளையே பெற்றது. தொடர்ந்து மூன்று தேர்தல்களில் இரண்டு சதவீத வாக்குகளையே பெற்ற பாஜக, தனது தீவிரமான இந்துத்வா பிரச்சாரத்தால் தமிழ்நாட்டில் இந்துத்வா அலை வீசுவதாகவும், பாஜக பெருமளவு வளர்ச்சி அடைந்துவிட்டது என்றும் பாஜக தலைவர்கள் கூறினர். பாஜக வாக்கு வங்கி கணிசமாக உயர்ந்துவிட்டதால், அதிமுக அணியில் 80 இடங்கள் வரை பெறுவோம் என்றும், கூட்டணி ஆட்சி அமைப்போம் என்றும் பாஜக கூறிவந்தது.

eps ops - updatenews360

முதல்வர் எடப்பாடி பழனிசாமியைத் தனது முதல்வர் வேட்பாளராக அதிமுக அறிவித்த பின்னும், அவரை கூட்டணியின் முதல்வர் வேட்பாளராக பாஜக அறிவிக்க மறுத்தது. குறைந்தது 80 தொகுதிகள் என்று கூறிவந்த பாஜக 50 முதல் 60 தொகுதிகள் கட்டாயம் பெறுவோம் என்று வெளிப்படையாகப் பேசிவந்தனர் பாஜக தலைவர்கள். இறுதியாக குறைந்தது 40 முதல் 45 தொகுதிகளை பாஜக பெரும் என்றும் கூறப்பட்டது. கூட்டணிக்கு அதிமுக தலைமை வகித்தாலும், பாஜகவுக்கு தொகுதிகள் கொடுப்பதில் திமுகவால் கறாராக இருக்கமுடியாது என்றும், பாஜக சொல்வதை அது கேட்டுத்தான் ஆக வேண்டும் என்ற நிலை இருப்பதாக திமுகவும் அதன் கூட்டணிக் கட்சிகளும் கூறிவந்தன.

மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவே நேரடியாகப் பேசுவதால் அவர் கேட்கும் இடங்களை அதிமுக கொடுத்துவிடும் என்றும் பரவலாகக் கூறப்பட்டது. ஆனால், யாரும் எதிர்பாராத வகையில் பாஜகவுக்கு 20 இடங்கள்தான் ஒதுக்கப்பட்டுள்ளது. எந்த வகையிலும் பாஜகவின் நெருக்கடிக்கு அதிமுக பணியாது என்பதை வார்த்தைகள் இல்லாமலே செயலால் அதிமுக உணர்த்தியுள்ளதாக கட்சியின் தொண்டர்கள் கருதுகிறார்கள்.

bjp-aiadmk - updatenews360

இருபது ஆண்டுகளுக்கு முன்பே திமுகவுடன் பாஜக 2001-ஆம் ஆண்டு கைகோர்த்தபோது பாஜகவுக்கு 21 தொகுதிகள் தரப்பட்டது. ஆனால், இந்த 20 ஆண்டுகளில் பாஜக வளர்ச்சி அடைந்து இருப்பதாகச் சொல்லப்படும் நிலையில், தொடர்ந்து இரண்டு முறை நாடாளுமன்றத் தேர்தலில் வென்று மத்தியில் பாஜக ஆட்சி நடைபெறும் சூழலில், அதைவிடக் குறைவாகவே பாஜகவுக்கு தொகுதிகள் கிடைத்துள்ளன.

இந்தத் தொகுதி பங்கீடு தேவையான நேரத்தில் அதிமுக உறுதியாக இருக்கத் தயங்காது என்பதை சிறுபான்மையினருக்கும், தமிழ்நாட்டு மக்களுக்கும், பாஜக எதிர்ப்பாளர்களுக்கும் உணர்த்துவதாக அமைந்துள்ளது. கூட்டணியில் இரண்டாவது பெரிய கட்சி பாமகதான் என்பதையும், பாஜகவுக்கு கூட்டணியில் மூன்றாவது இடந்தான் என்பதையும் இந்த உடன்பாடு தெளிவுபடுத்தியுள்ளது.

Views: - 24

0

0