குடும்பத்தலைவிகளுக்குஅதிமுக இரட்டை தித்திப்பு : எடப்பாடியார் காட்டிய தேர்தல் அதிரடி!!

Author: Babu Lakshmanan
9 March 2021, 1:48 pm
LPG - updatenews360
Quick Share

மறைந்த முதல்வர் ஜெயலலிதா தமிழகத்தை சுமார் 14 ஆண்டுகாலம் ஆட்சி செய்து இருக்கிறார். அவருடைய காலத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட சமூக நலத்திட்டங்கள் நிறைவேற்றப்பட்டு உள்ளன. இந்தியாவில் எந்த மாநிலமும் செய்திராத சாதனைகளும் அதில் உண்டு.

குறிப்பாக, பெண்களின் நலனுக்காக அவர் கொண்டுவந்த பல்வேறு நலத்திட்டங்கள், இன்றளவும் வெளி மாநிலங்களிலும் பாராட்டி பேசப்படுகிறது. பின்பற்றவும் படுகிறது. ஒரு பெண், இன்னொரு பெண்ணின் பிரச்சினைகளை எளிதில் புரிந்துகொள்ள முடியும் என்பதால், ஜெயலலிதா பெண்கள் நலனில் அதிக அக்கறை காட்டினார்.

குறிப்பாக, சொல்லப்போனால் அவர் கொண்டு வந்த தொட்டில் குழந்தை திட்டம், அனைத்து மகளிர் காவல் நிலையம், ஏழைப் பெண்களின் திருமணத்துக்கு பண உதவியுடன் தாலிக்கு தங்கம், மகளிர் சுய உதவிக்குழுக்கள் உருவாக்கம், மகப்பேறு நிதியுதவி, அம்மா குழந்தைகள் பரிசு பெட்டகம், பேருந்து நிலையங்களில் பாலூட்டும் தாய்மார்களுக்கு தனி அறை, அலுவலங்களில் பணிபுரியும் பெண்களுக்கு 50 சதவீத மானிய விலையில் இருசக்கர வாகனம், கிராமப்புற வளர் இளம் பெண்களின் சுகாதாரத்தைப் பேண இலவச சானிட்டரி நாப்கின், அம்மா மகப்பேறு சஞ்சீவி திட்டம், வீரதீர சாகசச் செயல்களில் ஈடுபடும் பெண்களுக்கு கல்பனா சாவ்லா விருது, இப்படி பெண்களுக்கான ஏகப்பட்ட நலத்திட்டங்களை அடுக்கிக் கொண்டே போகலாம்.

இவை எல்லாவற்றிற்கும் சிகரமாக இருப்பது 1992-ல் ஜெயலலிதா கொண்டுவந்த தொட்டில் குழந்தை திட்டம்தான். பிறந்தவுடன் பெண் குழந்தைகளை கள்ளிப்பால் ஊற்றி கொல்லும் கொடூர பழக்கம் தமிழகத்தில் மதுரை, தேனி, திண்டுக்கல், தருமபுரி, விழுப்புரம், சேலம், திருவண்ணாமலை, வேலூர் ஆகிய மாவட்டங்களின் கிராமப்பகுதிகளில் அதிகம் காணப்பட்டது.

அப்படி பச்சிளம் பெண் குழந்தைகள் கொல்லப்படுவதை தடுத்து, அந்த குழந்தைகளை அரசே பாதுகாப்பாக வளர்க்க ஜெயலலிதா கொண்டு வந்த திட்டம்தான் தொட்டில் குழந்தை திட்டம். இதை ஐ.நா.சபை வெகுவாக பாராட்டியது. மேலும், ஒரு நல்ல திட்டத்தை செயல்படுத்தியதற்காக ஐ.நா சபையால் முதன்முதலாக பாராட்டப்பட்ட இந்திய பெண் முதல்வர் என்ற பெருமையும் ஜெயலலிதாவுக்கு மட்டுமே உண்டு.

இதெல்லாம் தமிழக மக்களுக்கு தெரிந்த விஷயம் தானே, இப்போது எதற்காக இவற்றை நினைவூட்ட வேண்டும் என்ற கேள்வி எழுகிறதல்லவா?

நிச்சயம் காரணம் உண்டு.

2016 இறுதியில் ஜெயலலிதா மறைந்த பிறகு அவர் அமைத்த அதிமுக அரசையும், கட்சியையும் இன்றளவும் கட்டிக் காத்து வருபவர்கள் முதல்வர் எடப்பாடி பழனிசாமியும், துணை முதல்வர் ஓ. பன்னீர்செல்வமும்தான். ஜெயலலிதா பாணியிலேயே அவர்கள் வருகிற சட்டப்பேரவை தேர்தலை சந்திக்க ஆயத்தமாகி விட்டார்கள். பெண்களுக்காக எண்ணிலடங்கா நலத்திட்டங்களை ஜெயலலிதா செயல்படுத்தியதுபோலவே, அவருடைய வழியில்
இவர்களும் முனைப்பு காட்டுகின்றனர்.

அதன் ஒரு அம்சம்தான் உலக மகளிர் தினமான மார்ச் 8-ம் தேதி அன்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி தேர்தல் வாக்குறுதியாக மகளிர் அனைவரும் மனநிறைவு கொள்ளும் விதமாக, ஆண்டுக்கு சமையல் எரிவாயு சிலிண்டர் 6 இலவசம், தமிழ்நாட்டில் அனைத்து இல்லங்களிலும் பொருளாதார சமநிலையை ஏற்படுத்த குடும்பத் தலைவிகளுக்கு மாதம் 1500 ரூபாய் என்று இருபெரும் சரித்திர சாதனை படைக்கும் வாக்குறுதிகளை அறிவித்தார்.

அதற்கு பொருத்தமாக அவர் உலக மகளிர் தினத்தை தேர்ந்தெடுத்தது, தமிழக பெண்கள் மத்தியில் மட்டுமல்லாமல் பிற மாநில பெண்களையும் வியப்பின் உச்சிக்கே கொண்டு சென்றுள்ளது. இந்த இரண்டுமே இந்தியாவின் முன்னோடி நலத்திட்டங்கள் என்பதில் எந்த சந்தேகமும் கிடையாது. ஒரு குடும்பத்தில் ஓராண்டுக்கு 9 முதல் 12 சமையல் எரிவாயு சிலிண்டர்களை குடும்பத்தலைவிகள் பயன்படுத்துகின்றனர். இதற்காக அவர்கள் ஆண்டுக்கு சுமார் 6 ஆயிரம் ரூபாய் முதல் 9 ஆயிரம் வரை செலவும் செய்கின்றனர்.

அதேநேரம், நகர்ப்புறங்களிலும், கிராமப்புறங்களிலும் வசிக்கும் லட்சக்கணக்கான குடும்பங்களில் பெண்கள் அன்றாட செலவை சமாளிப்பதற்குள் படாதபாடு படுகிறார்கள். அவர்களுக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி அதிமுகவின் தேர்தல் வாக்குறுதியாக அளித்துள்ள மாதம் 1,500 ரூபாய் என்பது பெரும் வரப்பிரசாதமாக அமையும்.

அதிமுகவை வழிநடத்தும் இரட்டை தலைவர்களான முதல்வர் எடப்பாடி பழனிசாமியும், துணை முதல்வர் ஓ. பன்னீர்செல்வமும் இந்த இரட்டை ஆச்சரிய வெகுமதிகளை அளித்திருக்கின்றனர். முதல்வரின் இந்த தேர்தல் வாக்குறுதிகள் குறித்தும் மகளிர் அமைப்பினர் உற்சாகமும், மகிழ்ச்சியும் தெரிவித்தனர்.

அவர்கள் கூறும்போது, “முதல்வர் ஒரே நேரத்தில், இப்படி பெண்களுக்கு இரு பெரிய நலத்திட்டங்களை அறிவிப்பார் என்று நாங்கள் எதிர்பார்க்கவே இல்லை. ஏற்கனவே கொரோனா பரவல் காலத்தில் குடும்ப அட்டைதாரர்களுக்கு ரூ.1000 வழங்கியது, பொங்கல் பண்டிகையை மகிழ்ச்சியுடன் கொண்டாடுவதற்கு பரிசாக குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்புடன்
2500 ரூபாய் அளித்ததால் முதல்வர் நிச்சயம் தேர்தல் வாக்குறுதியாக பெண்களுக்கு உதவும் வகையில் சிறப்பான திட்டங்களை அறிவிப்பார் என்று எதிர்பார்த்தோம். அதை முதல்வர் எடப்பாடி பழனிசாமி அப்படியே பூர்த்தி செய்திருக்கிறார்.

சமையல் எரிவாயு சிலிண்டர் விலை கடந்த 2 மாதத்தில் மட்டும் ஒரு சிலிண்டருக்கு 100 ரூபாய்க்கு மேல் அதிகரித்துவிட்டது. இனியும் விலை உயர்ந்தால் என்ன செய்வது என்று பரிதவித்த நிலையில் முதல்வரின் முத்தான அறிவிப்பு எங்களுக்கு வரப்பிரசாதமாக அமைந்துள்ளது. ஏனென்றால் சில குடும்பங்களில் வருடத்திற்கு 6 சிலிண்டர்கள்தான் தேவைப்படும். இனிமேல் இந்த 6 சிலிண்டர்களும் விலையில்லாமல் கிடைக்கும். இது குடும்பத் தலைவிகளுக்கு பெரும் சுமையை குறைப்பதாக அமைந்துள்ளது.

அதேநேரம் மாதாந்திர செலவுகளுக்கு இனி வீட்டில் யாருடைய கையையும் எதிர்பார்த்திருக்க வேண்டிய அவசியமும் இல்லை. இந்த இரண்டு அறிவிப்புகளுமே குடும்பத் தலைவிகளுக்கு மனநிறைவைத் தரும் விஷயங்கள். கோடிக்கணக்கான குடும்பங்களில் முதல்வர் நம்பிக்கை ஒளியை பாய்ச்சி இருக்கிறார். அடுத்து அமையும் அதிமுக ஆட்சியில் இனி ‘கேஸ்’சும், ‘கேஷ்’சும் கை நிறைய கிடைக்கும் என்பதை நினைக்கும்போதே மனம் சந்தோச வானில் பறக்கிறது.

சொன்னதை மட்டுமல்ல சொல்லாததையும் செய்து காட்டுவோம் என்கிற ஜெயலலிதாவின் வார்த்தைகளை அப்படியே முதல்வர் எடப்பாடி பழனிசாமி பின்பற்றுகிறார். ஜெயலலிதா வழியில் ஆட்சி நடத்தும் அவர் ஜெயலலிதாவை போலவே பெண்களின் கஷ்டத்தை புரிந்துகொண்டு அதை தீர்ப்பதற்காக மிகுந்த அக்கறையுடன் செயல்பட்டு வருகிறார் என்பதை இந்த அறிவிப்புகள் மூலம் உணர முடிகிறது. நிச்சயம் இதன் பலன்களை தமிழகத்திலுள்ள அத்தனை குடும்பங்களிலும் காண இயலும்” என்று மகளிர் அமைப்பினர் தங்களின் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.

அதிமுகவின் மூத்த நிர்வாகிகள் கூறும்போது, “அதிமுக அரசு இந்த வாக்குறுதிகளை நிச்சயம் நிறைவேற்றும். திமுகவைப் பொறுத்தவரை 2006-ல் நிலம் இல்லாத ஏழை விவசாயிகளுக்கு
2 ஏக்கர் தரிசு நிலம் வழங்கப்படும் என்று வாக்குறுதி அளிக்கப்பட்டது. அதை அவர்கள் நிறைவேற்றவே இல்லை. ஆனால் அதிமுக அரசு சொல்லாமலேயே பொங்கல் பரிசு ரூ.2500 அறிவித்தது. எனவே அதிமுகவின் தேர்தல் வாக்குறுதிகளைத்தான் தமிழக மக்கள் நம்புவார்கள்” என்றனர்.

அதிமுகவின் தேர்தல் அறிக்கையில் இன்னும் பல நலத் திட்டங்கள் அறிவிக்கப்படும் என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி கூறியிருக்கிறார். அந்த வாக்குறுதிகளும் நிச்சயமாக
தமிழக மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதாக இருக்கும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை!

Views: - 134

0

0