திமுகவுக்கு எதிராக 734 எம்எல்ஏக்கள் வெற்றி… அதிக ‘ஸ்ட்ரைக் ரேட்’ கொடுத்த அதிமுக : மீண்டும் சரித்திர சாதனை படைக்க வாய்ப்பு!

22 April 2021, 3:46 pm
ADMK strike rate - updatenews360
Quick Share

கடந்த 6-ம் தேதி நடந்து முடிந்த தேர்தல் தமிழக சட்டப் பேரவைக்கான 16-வது தேர்தலாகும்.1952, 1957, 1962 ஆகிய மூன்று தேர்தல்களிலும் காங்கிரஸ் வெற்றி பெற்றது. முதல் தேர்தல் காங்கிரஸ் குறுக்கு வழியில் ஆட்சிக்கு வந்த ஒன்று. அப்போது ஆந்திராவின் பெரும்பகுதி மற்றும் கர்நாடகா, கேரளாவின் சிறு பகுதிகள் சென்னை மாகாணத்துடன் இணைந்திருந்தன.

375 உறுப்பினர்களைக் கொண்ட சென்னை மாகாண சபைக்கு நடந்த முதல் தேர்தலில் காங்கிரசுக்கு 152 இடங்களே கிடைத்தது. கம்யூனிஸ்டு கட்சி தலைமையிலான ஐக்கிய முன்னணியும், சுயேச்சைகளும் 223 இடங்களில் வெற்றி பெற்றனர்.

ஐக்கிய முன்னணி ஆட்சி அமைக்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அந்தக் கூட்டணியில் இருந்த சில கட்சிகளையும், பல சுயேச்சைகளையும் பதவி ஆசை காண்பித்து, வளைத்துபோட்டு கடைசி நேரத்தில் காங்கிரஸ் ஆட்சி அமைத்து விட்டது. இந்தியாவின் கடைசி கவர்னர் ஜெனரலான ராஜாஜி அப்போது முதல்வரானார்.

மொழிவாரியாக மாநிலங்கள் பிரிக்கப்பட்ட பின்பு 1957, 1962-ம் ஆண்டுகளில் தமிழ்நாட்டில் நடந்த தேர்தல்களில் காங்கிரஸ் வெற்றி பெற்றது. இதை ஹாட்ரிக் வெற்றி என்று கூற இயலாது.
ஏனென்றால் 1952-ல் முதல் முறையாக காங்கிரஸ் வென்றபோது அது தனிப்பட்ட முறையில் மெஜாரிட்டி பெறவில்லை. தவிர குறுக்கு வழியில்தான் ராஜாஜி முதல்வர் பதவிக்கு வந்தார்.

1967-ல் அண்ணா தலைமையிலான திமுக முதல் முறையாக தமிழ் நாட்டில் ஆட்சியை கைப்பற்றியது. அண்ணாவின் மறைவுக்குப் பின்பு 1971-ல் நடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் கருணாநிதி தலைமையிலான திமுக வென்று ஆட்சியை தக்க வைத்துக் கொண்டது.

கட்சியின் கணக்கு விவரங்களை வெளிப்படையாக கேட்டதால் 1972-ம் ஆண்டு திமுகவிலிருந்து நீக்கப்பட்ட எம்ஜிஆர், தொடங்கிய அதிமுக கடுமையான சவாலை திமுகவுக்கு அளித்தது. 1977-ல் எம்ஜிஆர் தலைமையிலான அதிமுக முதல்முறையாக ஆட்சியைக் கைப்பற்றியது. அதன் பிறகு நடந்த அத்தனை சட்டப்பேரவை தேர்தல்களிலும் விறுவிறுப்புக்கும், பரபரப்புக்கும் பஞ்சமே கிடையாது.

எம்ஜிஆர் 1980 மற்றும் 1984 தேர்தல்களில் வெற்றி பெற்று ‘ஹாட்ரிக்’ சாதனை படைத்தார்.
1987 டிசம்பரில் அவர் மறைந்த பிறகு அதிமுக இரண்டாக பிளவுபட்டது.

அதைத்தொடர்ந்து 1989-ல் நடந்த தேர்தலில் 13 ஆண்டுகளுக்கு பிறகு கருணாநிதி தலைமையிலான திமுக மீண்டும் ஆட்சியைக் கைப்பற்றியது. ஜெயலலிதா தலைமையில் அதிமுக ஒன்றுபட்டபோது 1991-ல் நடைபெற்ற தேர்தலில் அதிமுக பெரும் வெற்றி கண்டது. 1977 முதல் அதிமுகவும், திமுகவும் 10 முறை சட்டப்பேரவை தேர்தல்களை சந்தித்துள்ளன.

இதில் அதிமுக 7 முறையும், திமுக 3 முறையும் வென்றுள்ளன. 1989-ல் அதிமுக பிளவுபட்ட நிலையில் தேர்தலை சந்தித்தாலும் கூட அதிமுக ஜெயலலிதா அணி, அதிமுக ஜானகி அம்மாள் அணி என்று தேர்தல் கமிஷன் பிரித்ததன் அடிப்படையில்தான் இந்த தேர்தல் நடந்தது குறிப்பிடத்தக்கது.

2006 தேர்தலை பொறுத்தவரை திமுக கூட்டணி ஆட்சியை கைப்பற்றியபோதிலும் திமுகவுக்கு தனி மெஜாரிட்டி கிடைக்கவில்லை. அக்கட்சி 96 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றது, குறிப்பிடத்தக்கது.

இந்த 10 தேர்தல்களில் அதிமுகவும், திமுகவும் நேருக்கு நேராக மோதி வெற்றி பெற்ற தொகுதிகளை மட்டுமே கணக்கில் எடுத்துக் கொண்டு ஒப்பிட்டு பார்த்தால் அதிமுகவின் கையே ஓங்கி இருப்பது தெரிய வருகிறது.

அதிமுக சார்பில் போட்டியிட்டவர்கள் திமுக வேட்பாளர்களுடன் மோதியதில் மொத்தம் 734 எம்எல்ஏக்கள் சட்டப்பேரவைக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளனர். திமுக சார்பில் அதிமுகவுக்கு எதிராக இப்படி தேர்வு செய்யப்பட்டோர் 406 பேர்தான். இதன்படி அதிமுகவின் வெற்றிவிகித ‘ஸ்ட்ரைக் ரேட்’ 64.9 சதவீதம். இது,திமுகவுக்கு 35.1 சதவீதம்தான்.

அதேபோல் அதிமுக இந்த 10 தேர்தல்களிலும் 60 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஓட்டுகள் வித்தியாசத்தில் 43 முறை வெற்றியை ருசித்து உள்ளது. திமுக இதுபோன்ற வெற்றியை 17 முறை மட்டுமே பெற்றிருக்கிறது. இதேபோல் இன்னொரு புள்ளிவிவரம் ஆச்சரியம் அளிப்பதாக உள்ளது. 1500க்கும் குறைவான வாக்குகள் வித்தியாசத்தில் அதிமுக 30 தொகுதிகளிலும் 17 தொகுதிகளில் திமுகவும் வெற்றி கண்டிருக்கிறது.

குறைந்த வாக்குகள் வித்தியாசத்தில் பல தொகுதிகளில் வென்றாலும் கூட 2016-ல் அதிமுக ஆட்சியை கைப்பற்றி உள்ளது. இதேபோல் கடந்த10 தேர்தல்களிலும் அதிமுக, திமுகவுடன் நேருக்கு நேர் மோதி வாங்கிய சாரசரி ஓட்டு 44.6 சதவீதம் ஆகும். திமுக வாங்கிய சராசரி ஓட்டு 39.3. சதவீதம். இப்படி கடந்த கால 10 தேர்தல்களின் அடிப்படையில் பார்த்தால், அனைத்து அம்சங்களிலும் அதிமுகவின் கையே ஓங்கி இருப்பதை காணமுடியும்.

எனவே 2021 சட்டப் பேரவை தேர்தலிலும் வெற்றி பெற்று அதிமுக 2-வது முறையாக ‘ஹாட்ரிக்’ சாதனை படைக்கும் வாய்ப்புகளே பிரகாசமாக தென்படுகிறது.

ஏனென்றால் அதுபோன்றதொரு நிலையை அடைவதற்கு மிக அருகில் உள்ள கட்சியாக அதிமுகதான் இருக்கிறது.

இதுபற்றி அரசியல் விமர்சகர்கள் கூறும்போது, “முந்தைய 10 தேர்தல்களுடன் 2021 தேர்தலை ஒப்பிட்டு பார்ப்பதை சிலர் தவறு என்று கூறலாம். ஏனென்றால் அப்போது எம்ஜிஆர், கருணாநிதி, ஜெயலலிதா மூவரும் உயிருடன் இருந்தனர். இப்போது அவர்கள் இல்லையே என்று வாதிடலாம். ஆனால் தேர்தல் என்று வந்துவிட்டால் அதிமுகவும், திமுகவும் நேருக்கு நேர் தொகுதிகளில் மல்லுக்கட்டும்போது அனல் பறக்கும். இதில் பெரும்பான்மையான தொகுதிகளில் அதிமுகவின் கையே பலமடங்கு ஓங்கி இருப்பதை புள்ளி விவரங்கள் மூலம் அறிந்துகொள்ள முடிகிறது. இந்த அடிப்படை கட்டமைப்பில் அதிக மாற்றங்கள் ஏற்படுவதற்கு வாய்ப்பு இல்லை. எனவே மீண்டும் அதிமுக ஆட்சியை கைப்பற்றுவதற்குத்தான் வாய்ப்புகள் அதிகம் உள்ளது” என்றனர்.

Views: - 154

1

1