சசிகலாவால் கட்சிக்குள் குளறுபடி : இபிஎஸ்க்கு எதிராக தாறுமாறு பேச்சு… அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட முக்கிய நிர்வாகி..!!!

Author: Babu Lakshmanan
28 October 2021, 5:40 pm
Quick Share

சென்னை : அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக பேசிய முக்கிய நிர்வாகி ஒருவர் கட்சியில் இருந்து அதிரடியாக நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

அதிமுக பொன்விழா ஆண்டிற்கு பிறகு அக்கட்சியில் சசிகலாவால் குழப்பம் நிலவி வருகிறது. அதிமுகவில் எப்படியாவது இணைந்து கொள்ள வேண்டும் என்று அவரும் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறார். தற்போது, அவர் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வத்தை கேடயமாக பயன்படுத்தி வருகிறார்.

sasikala- ops - updatenews360

அதிமுகவில் சசிகலாவிற்கு இடமில்லை என்று அண்மையில் ஓபிஎஸ், இபிஎஸ் தலைமையில் நடந்த மூத்த நிர்வாகிகளின் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது. ஆனால், அதிமுகவில் சசிகலாவை சேர்ப்பது குறித்து நிர்வாகிகள் கலந்து பேசி முடிவு எடுப்பார்கள் என ஓ.பன்னீர்செல்வம் கூறியது அதிமுகவில் சலசலப்பை ஏற்படுத்தி வருகிறது.

இபிஎஸ் இதுவரை அது பற்றி வாய்திறக்காத நிலையில், முன்னாள் அமைச்சர்கள் ஜெயக்குமார் – செல்லூர் ராஜு ஆகியோர் வார்த்தைப் போரில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதனிடையே, சசிகலா தொடர்பாக அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் பேசியதில் தவறில்லை என்றும், அவர் நினைத்தால் எடப்பாடி பழனிசாமியையே கட்சியில் இருந்து நீக்கலாம் என்றும், அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட புகழேந்தி கொளுத்திப் போட்டார்.

EPS OPS - Updatenews360

அதேவேளையில், சென்னையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த அதிமுக சிறுபான்மையினர் நலப் பிரிவு துணைச்செயலாளர் பஷிர், எடப்பாடி பழனிசாமியை கட்சியை விட்டு நீக்க வேண்டும் என்றும், இஸ்லாமியர்களுக்கு துரோகம் விளைவித்தவர் எடப்பாடி பழனிசாமி என்று பேசி வந்தார்.

இந்த நிலையில், செய்தியாளர்களிடம் பேசிக் கொண்டிருந்த போதே, பஷிரை கட்சியில் இருந்து நீக்கம் செய்து ஓபிஎஸ் – இபிஎஸ் உத்தரவிட்டுள்ளனர். கட்சியின் பெயருக்கு கலங்கம் ஏற்படுத்தும் விதமாக செயல்பட்ட பஷிரை கட்சியில் இருந்து நீக்குவதாகவும், அவரிடம் யாரும் தொடர்பு வைத்துக் கொள்ளக் கூடாது என்றும் தெரிவித்துள்ளனர்.

அதிமுகவின் நிர்வாகிகளை தன்வசப்படுத்தி வரும் சசிகலாவால், இன்னும் சில நிர்வாகிகள் தலைமைக்கு எதிராக பேசினால் ஆச்சர்யப்படுவதற்கு இல்லை.

Views: - 233

0

0