அதிமுகவில் டிசம்பருக்குள் உட்கட்சி தேர்தல் : ஒற்றை தலைமைக்கு வாய்ப்பு..? முந்தப்போவது ஓபிஎஸ்ஸா..? இபிஎஸ்ஸா…?

15 July 2021, 2:12 pm
eps ops - updatenews360
Quick Share

சென்னை : அதிமுகவில் டிசம்பர் மாதத்திற்குள் உட்கட்சி தேர்தல் நடத்தப்படுவதாக உறுதியளிக்கப்பட்டுள்ளது என்று சென்னை உயர்நீதிமன்றத்தில் தேர்தல் ஆணையம் பதிலளித்துள்ளது.

பொதுவாக அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகள் பொதுக்குழு, செயற்குழு ஆண்டுக்கு ஒருமுறையாவது கூட்ட வேண்டும், உட்கட்சி தேர்தலை நடத்தி நிர்வாகிகளை தேர்வு செய்ய வேண்டும் உள்ளிட்ட பல்வேறு விதிமுறைகள் உள்ளன. ஆனால், அதிமுகவில் உட்கட்சி தேர்தலை நடத்தாமல் நியமிக்கப்பட்டு வருவதாகவும், எனவே, உட்கட்சி தேர்தலை நடத்தாமல் செய்யப்படும் நியமனங்களுக்கு தடை விதிக்க வேண்டும் என்று திண்டுக்கல் மாவட்டத்தை சேர்ந்த சூரியமூர்த்தி என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்தார்.

Chennai High Court - Updatenews360

அந்த மனுவில் கூறியிருப்பதாவது :- அதிமுகவின் பொதுச் செயலாளராக இருந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா மறைவிற்கு பிறகு அக்கட்சியின் உட்கட்சி தேர்தல் முறையாக நடத்தப்படவில்லை. கட்சியின் சட்டத்திட்டங்களின்படி அனைத்து அடிப்படை உறுப்பினர்கள் வாக்களித்து பொதுச்செயலாளர் பதவியைத் தேர்ந்தெடுக்க வேண்டும். ஆனால் தற்போது அது போன்று அதிமுகவில் இல்லை.

மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்தின்படி தேர்தல் ஆணையத்தால் அங்கீகரிக்கப்பட்ட கட்சிகளுக்கு உட்கட்சி தேர்தல் கட்டாயம் நடத்தப்பட வேண்டும். அதிமுக சார்பில் 2014ஆம் ஆண்டிற்கு பிறகு உட்கட்சி தேர்தல் நடத்தி நிர்வாகிகளை நியமிக்கவில்லை. சர்வாதிகாரப் போக்குடன் கட்சி தலைமை நிர்வாகிகளை நியமித்து வருகிறது. இது அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் விதிகளுக்கு எதிரானது.இதுதொடர்பாக இந்திய தேர்தல் ஆணையத்திடம் நான் பலமுறை புகார் அளித்தும், அந்தப் புகார்களுக்கு இதுவரை எந்தவிதமான பதிலும் இல்லை. எனவே அதிமுக உட்கட்சி தேர்தலை நடத்தாமல் நிர்வாகிகள் நியமனத்திற்கு தடை விதிக்க வேண்டும், என்று குறிப்பிட்டிருந்தார்.

Admk - Updatenews360

இந்த வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வரும் போது, அதிமுகவை ஏன் எதிர்மனுதாரராக சேர்க்கவில்லை என்று நீதிபதி கேள்வி எழுப்பினார். அப்போது, தேர்தல் ஆணையம் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் நிரஞ்சன் ராஜகோபால் பதில் மனு ஒன்றை தாக்கல் செய்தார். அதில், அதிமுகவின் உட்கட்சி தேர்தலை வருகிற டிசம்பர் மாதத்திற்குள் முடித்து விடுவதாக அக்கட்சியின் சார்பில் உறுதியளிக்கப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டிருந்தது.

இதையடுத்து நீதிபதி இந்த வழக்கில் அதிமுகவையும் எதிர் மனுதாரராக சேர்க்க உத்தரவிட்டு விசாரணையை ஒத்திவைத்தார்.

முன்னதாக, இந்த மாதத்தின் தொடக்கத்தில் நடந்த மாவட்டச்செயலாளர்கள் கூட்டத்தில் உட்கட்சி தேர்தல் நடத்த அதிமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டது.

ஏற்கனவே, சட்டப்பேரவை தேர்தலில் அதிமுக 65 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றது. அதிலும் குறிப்பாக, எடப்பாடி பழனிசாமி கட்டுப்பாட்டில் உள்ள மேற்கு மண்டல மாவட்டங்களில்தான் அதிக வெற்றி பெற்றுள்ளது. அதேவேளையில், அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வத்தின் கட்டுப்பாட்டில் உள்ள தெற்கு மண்டல மாவட்டங்களில் பெரும்பாலான இடங்களில் தோல்வியையே தழுவியது. இதற்கு காரணம், ஓ பன்னீர்செல்வம் தேர்தல் பணிகளில் தீவிரம் காட்டவில்லை என்ற குற்றச்சாட்டும் எழுந்துள்ளது.

Edappadi Palanisamy- Updatenews360

அதுமட்டுமில்லாமல், எதிர்கட்சி தலைவர் பதவிக்கும் எடப்பாடி பழனிசாமியோடு, ஓ.பன்னீர்செல்வம் கடும் போட்டியிட்டார். எடப்பாடி பழனிசாமி பங்கேற்கும் கூட்டங்களில் ஓபிஎஸ் தரப்புக்கு ஆதரவாக கோஷங்களை எழுப்புவதையும், அதனைக் கண்டிக்காமல் இருப்பதும் தலைமையில் ஒற்றுமையில்லாததை காட்டுவதாக பெரும்பாலான நிர்வாகிகள் வேதனை தெரிவிக்கின்றனர்.

மேலும், அதிமுகவிற்கு ஒற்றை தலைமைதான் சரியாக இருக்கும் என வலியுறுத்தி பெரும்பாலான மாவட்டங்களில் அதிமுக கூட்டங்களில் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன.

இந்த நிலையில், அதிமுகவில் டிசம்பர் மாதத்திற்குள் உட்கட்சி தேர்தல் நடத்தப்படுவதாக உறுதியளிக்கப்பட்டுள்ளதாக சென்னை உயர்நீதிமன்றத்தில் தேர்தல் ஆணையம் பதிலளித்துள்ளது. அதன்படி தேர்தல் நடத்தப்பட்டால், அதிமுகவுக்கு ஒற்றை தலைமை அமைய வாய்ப்பிருப்பதாக அரசியல் நோக்கர்கள் தெரிவிக்கின்றனர். அதுவும், அதிமுகவின் வெற்றிக்காக பெரும்பாடு பட்ட எடப்பாடி பழனிசாமிக்கு அதிகரித்துள்ள உட்கட்சி ஆதரவுகள் மற்றும் முக்கிய நிர்வாகிகளின் ஆதரவு போன்றவற்றை கணிக்கும் போது, அவரே கட்சியின் தலைமை நிர்வாகியாக தேர்வு செய்ய அதிக வாய்ய்பு இருப்பதாகக் கூறப்படுகிறது.

Views: - 149

0

0