8,174 பேர் விருப்ப மனு.. நாளை காலை நேர்காணல் தொடக்கம்.. சட்டுபுட்டுனு காரியத்தை முடிக்கும் அதிமுக..!!
3 March 2021, 5:49 pmசென்னை : அதிமுக சார்பில் போட்டியிட விரும்புவர்களுக்கான விருப்ப மனுக்களை கொடுப்பதற்கான அவகாசம் நிறைவடைந்தது.
தமிழக மற்றும் புதுச்சேரி சட்டப்பேரவை தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிட விரும்புவர்களுக்கான விருப்ப மனு விநியோகம் கடந்த மாதம் 24ம் தேதி முதல் வழங்கப்பட்டு வந்தது. முதலில் ஏப்., 6ம் தேதி வரை விருப்ப மனுக்களை பூர்த்தி செய்து கொடுக்கலாம் என அறிவிக்கப்பட்டிருந்தது.
ஆனால், சட்டப்பேரவை தேர்தலுக்கு கால அவகாசம் மிகவும் குறைவாக இருப்பதால், தொகுதி பங்கீடு, வேட்பாளர் தேர்வு உள்ளிட்டவற்றை விரைந்து முடிக்க அதிமுக தலைமை முடிவு செய்தது. அதன்படி, விருப்ப மனுக்களை வழங்குவதற்கான கால அவகாசத்தை குறைத்து, மார்ச் 3ம் தேதியாக மாற்றி அறிவிக்கப்பட்டது.
இந்த நிலையில், இன்று காலை முதல் அதிமுக தலைமை அலுவலகத்தில் அதிமுகவினர் கூட்டம் அலைமோதியது. ஒவ்வொரு தலைவர்களின் ஆதரவாளர்களும் விருப்ப மனுக்களை கொடுத்து வந்தனர்.
தற்போது, மாலை 5 மணியுடன் விருப்பமனுக்களை பெறுவதற்கான கால அவகாசம் நிறைவடைந்த நிலையில், அதிமுக சார்பில் போட்டியிட 8,174 பேர் விருப்ப மனு தாக்கல் செய்துள்ளனர். விருப்ப மனு அளித்தவர்களிடம் நாளை ஒரே நாளில் நேர்காணல் நடத்தி, வேட்பாளர்களை தேர்வு செய்ய அதிமுக முடிவு செய்துள்ளது.
கூட்டணி, வேட்பாளர் தேர்வு என அனைத்து வேலைகளையும் விரைந்து முடித்து விட்டு, இனி பிரச்சாரத்தில் கவனம் செலுத்த முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் முடிவு செய்துள்ளதாக அக்கட்சியினர் தெரிவிக்கின்றனர்.
0
0