பொன்மனச் செம்மல், புரட்சித்தலைவி ஆட்சியை விரைவில்‌ நிலைநாட்டிட சூளுரைப்போம் : தொண்டர்களுக்கு ஓபிஎஸ், இபிஎஸ் மடல்…!!

Author: Babu Lakshmanan
15 January 2022, 3:45 pm
Quick Share

சென்னை : பொன்மனச் செம்மல், புரட்சித்தலைவி ஆட்சியை விரைவில்‌ நிலைநாட்டிட சூளுரைப்போம் என்று தொண்டர்களுக்கு அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் மடல் எழுதியுள்ளனர்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது ;- உலகெங்கும்‌ வாழும்‌ தமிழர்கள்‌ அனைவருக்கும்‌, புரட்சித்‌ தலைவரின்‌ ரத்தத்தின்‌ ரத்தமான கழக உடன்பிறப்புகளுக்கும்‌, புரட்சித்‌ தலைவர்‌ எம்‌.ஜி.ஆர்‌. அவர்களின்‌ 105–ஆவது பிறந்த நாள்‌ புகழோவிய மடல்‌ வழியாக நல்வாழ்த்துக்களைக்‌ கூறி மகிழ்கிறோம்‌.

“வாழ்க்கை என்றொரு பயணத்திலே
பலர்‌ வருவார்‌, போவார்‌ பூமியிலே
வானத்து நிலவாய்‌ சிலர்‌ இருப்பார்‌ – அந்த
வரிசையில்‌” – முதல்வர்‌ நம்‌ உள்ளமெல்லாம்‌ நிறைந்த புரட்சித்‌ தலைவர்‌ எம்‌.ஜி.ஆர்‌.

ஒரு தனி மனிதராக, பணியாற்றிய கலைத்‌ துறையின்‌ நாயகராக, ஒர்‌ இயக்கத்தின்‌ தலைவராக, மக்களின்‌ பேராதரவைப்‌ பெற்ற முதல்வராக, “செல்லும்‌ இடமெல்லாம்‌ சீர்பெருக்கி, பேர்‌ நிறுத்தி, கல்லும்‌ கனியாகும்‌ கருணையால்‌ எல்லோர்க்கும்‌ பிள்ளையென நாளும்‌ பேசவந்த கண்மணியே வள்ளலே ! எங்கள்‌ வாழ்வே!” என்று ஆயிரம்‌ தலைமுறை தமிழர்கள்‌ கொண்டாடி மகிழத்‌ தக்க மன்னாதி பன்னன்‌, ஒளி விளக்கு, எங்கள்‌ வீட்டுப்‌ பிள்ளை அல்லவா நம்‌ அன்புத்‌ தலைவர்‌ எம்‌.ஜி.ஆர்‌. !

ஏழை குடும்பத்தில்‌ பிறந்து, அகதியாக தமிழ்‌ நாட்டுக்கு வந்து, அன்பு கொண்ட மகனாக குடும்பத்திற்காக உழைத்து, “எல்லோரும்‌ இன்புற்றிருக்க நினைப்பதுவே அல்லாமல்‌ வேறொன்றும்‌ அறியேன்‌” என்ற உணர்வுடன்‌ பாலிலும்‌ வெண்மை, பனியிலும்‌ வெண்மை என்று கூறத்தக்க அளவிற்கு வெள்ளை உள்ளம்‌ கொண்டு வாழ்ந்த, உயர்ந்த உள்ளத்திற்கு சொந்தக்காரர்‌ நம்‌ புரட்சித்‌ தலைவர்‌ எம்‌.ஜி.ஆர்‌. அவர்கள்‌.

தனக்கென அவர்‌ ஒருபோதும்‌ வாழ்ந்ததில்லை. தன்‌ திறமையாலும்‌, உழைப்பாலும்‌ பாடுபட்டு ஈட்டிய பல ஆயிரம்‌ கோடி ரூபாய்‌ மதிப்புள்ள பெரும்‌ செல்வத்தை ஏழைகளுக்கும்‌, எளியவர்களுக்கும்‌, உடல்‌ ஊனமுற்ற மாற்றுத்‌ திறனாளிகளுக்கும்‌, உயில்‌ எழுதி வைத்துவிட்டு மறைந்த புரட்சித்‌ தலைவருக்கு நிகரான கொடை வள்ளல்‌ யாரும்‌ உண்டோ ? புட்சித்‌ தலைவர்‌ மழை போலும்‌, மலர்‌ போலும்‌ பிறர்க்கென வாழ்ந்தவர்‌.

“தன்னை தலையாகச்‌ செய்வானும்‌ தான்‌” என்ற புறநானூற்று வரிகளுக்கு இலக்கணமாய்‌, இலக்கியமாய்‌ கலைத்‌ துறையில்‌ தன்‌ அயராத உழைப்பாலும்‌, அசைவிலா ஊக்கத்தாலும்‌, உழைப்பே உயர்வு தரும்‌ என்ற கொள்கையாலும்‌ நேற்றும்‌, இன்றும்‌, நாளையும்‌ யாராலும்‌ நினைத்துக்கூடப்‌ பார்க்க முடியாத உயரத்திற்குச்‌ சென்று சிம்மாசனம்‌ போட்டு அமர்ந்திருக்கிறார்‌ நம்‌ இதய தெய்வம்‌ புரட்சித்‌ தலைவர்‌ எம்‌.ஜி.ஆர்‌. அவர்கள்‌.

பேரறிஞர்‌ அண்ணா அவர்களும்‌, தமிழ்‌ இன எழுச்சியில்‌ அக்கறை கொண்ட சான்றோரும்‌ உருவாக்கிய இயக்கத்தை அழிக்க, ஊழலும்‌, சுயநலமும்‌, தீய சக்திகளும்‌ அண்ணாவின்‌ ஆட்சியை தங்கள்‌ கோரப்‌ பிடிக்குள்‌ வைத்து நடத்திய அராஜகத்தை எதிர்த்து துணிவுடன்‌ போராடியவர்‌ புரட்சித்‌ தலைவர்‌.

“தோட்டம்‌ காக்க போட்டவேலி பயிரைத்‌ தின்பதோ ?
அதை கேள்வி கேட்க ஆளில்லாமல்‌ பார்த்து நிற்பதோ ?
நான்‌ ஒரு கை பார்க்கிறேன்‌; நேரம்‌ வரும்‌ கேட்கிறேன்‌.
பூனை அல்ல, புலிதான்‌ என்று போகப்‌ போகக்‌ காட்டுகிறேன்‌.”
என்று, எடுத்த சபதம்‌ முடித்து நம்‌ உயிரினும்‌ மேலான அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக்‌ கழகத்தைத்‌ தோற்றுவித்து, வளர்த்து, ஆட்சியையும்‌, அதிகாரத்தையும்‌ சாமான்ய மக்களின்‌ கைகளுக்குக்‌ கொண்டுசென்ற ஏழைகளின்‌ தோழன்‌, கொள்கைக்‌ காவலன்‌, எண்ணியது எண்ணியாங்கு முடித்த நாடோடி மன்னன்‌ நம்‌ கழகத்‌ தலைவர்‌ எம்‌.ஜி.ஆர்‌. அவர்கள்‌.

பத்து ஆண்டுகள்‌ ஆட்சி செய்தாலும்‌, பலநூறு ஆண்டுகள்‌ நிலைத்து நிற்கும்‌ எடுத்துக்காட்டான திட்டங்களை நிறைவேற்றி,

“மன்னராட்சி காத்து நின்றதெங்கள்‌ கைகளே
மக்களாட்சி காணச்‌ செய்ததெங்கள்‌ நெஞ்சமே
எங்கள்‌ ஆட்சி என்றும்‌ வாழும்‌ இந்தமண்ணிலே”
என்று கருணை தீபமாய்‌ ஒளிரும்‌ ஆட்சி முறையை தமிழ்‌ நாட்டுக்கு வழங்கியவர்‌ நம்‌ வள்ளல்‌ எம்‌.ஜி.ஆர்‌. அவர்கள்‌.

உலகம்‌ போற்றும்‌ சத்துணவுத்‌ திட்டம்‌; தந்‌ைத பெரியாரின்‌ தமிழ்‌ எழுத்துச்‌ சீர்திருத்தம்‌; திராவிட இயக்கம்‌ காணத்‌ துடித்த சாதிப்‌ பெயர்கள்‌ நீக்கம்‌; கிராமப்‌ புறங்களில்‌ ஆங்கிலேயர்‌ ஆட்சிக்‌ காலத்தில்கூட நிலவி வந்த அடக்குமுறை பிரபுத்துவ நிர்வாக அமைப்பை ஒழித்தது; பெண்களுக்கும்‌, தாழ்த்தப்பட்ட மக்களுக்கும்‌ தனி ஒதுக்கீடு என்று எல்லா வகையிலும்‌ போற்றத்தக்கவையும்‌, எந்நாளும்‌ நிலைத்திருக்கக்‌ கூடியவையுமான பல சீர்திருத்தங்களைச்‌ செயல்படுத்தியவர்‌ புரட்சித்‌ தலைவர்‌ எம்‌.ஜி.ஆர்‌.

புரட்சித்‌ தலைவரின்‌ தலைமைச்‌ சீடராக, அவரையே தனது மாதா, பிதா, குரு தெய்வமாகக்‌ கொண்டு வாழ்ந்த புரட்சித்‌ தலைவி அம்மா அவர்களிடம்‌ 30 ஆண்டுகள்‌ பயிற்சி பெற்ற நாம்‌, புரட்சித்‌ தலைவர்‌ வகுத்துத்‌ தந்த பாதையில்‌, புரட்சித்‌ தலைவியின்‌ வீரத்தோடும்‌, விவேகத்தோடும்‌ செயல்பட வேண்டிய காலம்‌ இது என்பதை நினைவில்‌
கொள்ள வேண்டும்‌.

மனசாட்சியை அடகு வைத்துவிட்டு, மனம்போனபடி பொய்‌ வாக்குறுதிகளை அள்ளி வீசி, கார்ப்பரேட்‌ விளம்பர தேர்தல்‌ பிரச்சாரம்‌ செய்து, உள்ளத்தில்‌ பொய்யும்‌, உதட்டில்‌ புன்னகையுமாய்‌ மக்களிடம்‌ உறவாடி ஒருசில லட்சம்‌ வாக்குகள்‌
வித்தியாசத்தில்‌ வெற்றி பெற்று ஆட்சிக்கு வந்திருக்கும்‌ தி.மு.க. அரசின்‌ திறமையற்ற, ஊழல்‌ மிகுந்த, மக்களை வஞ்சிக்கின்ற, சுயநலம்‌ மிக்க ஒரு குடும்ப ஆட்சியின்‌ அலங்கோலங்களை தமிழ்‌ நாட்டில்‌ அடியோடு வேரறுக்க நாம்‌ அனைவரும்‌ போர்பரணி பாடவேண்டிய நேரம்‌ இது. பொன்மனச்‌ செம்மல்‌ புரட்சித்‌ தலைவர்‌, இதய தெய்வம்‌
புரட்சித்‌ தலைவி அம்மா ஆகியோர்‌ நடத்தியது போன்ற பொற்கால ஆட்சியை விரைவில்‌ நிலைநாட்டிட நாம்‌ சூளுரைக்க வேண்டிய நாள்தான்‌ புரட்சித்‌ தலைவர்‌ எம்‌.ஜி.ஆர்‌. அவர்களின்‌ பிறந்த நாள்‌ என்பதே கழக உடன்பிறப்புகளோடு இந்நாளில்‌ நாங்கள்‌ கூறும்‌ செய்தியும்‌, வேண்டுகோளும்‌.

தமிழகம்‌ காக்க
தன்னல ஆட்சியை அகற்றுவோம்‌!
கோட்டையிலே நமது கொடி பறந்திட வேண்டும்‌
கொள்கை வீர தீபங்களை ஏற்றிடுவோம்‌.
நன்றி, வணக்கம்‌, என தெரிவித்துள்ளார்.

Views: - 173

0

0

Leave a Reply