ஓபிஎஸ் வழிமொழிந்த 23 தீர்மானம்… அனைத்தையும் நிராகரிப்பதாக சி.வி. சண்முகம் ஆவேசப் பேச்சு… அதிமுக பொதுக்குழுவில் பரபரப்பு…!!

Author: Babu Lakshmanan
23 June 2022, 12:26 pm

அதிமுக பொதுக்குழு கூட்டத்தில் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் முன்மொழிந்த தீர்மானங்களை பொதுக்குழு உறுப்பினர்கள் நிராகரிப்பதாக முன்னாள் அமைச்சர் சிவி சண்முகம் தெரிவித்தார்.

பரபரப்பான சூழலில் அதிமுக பொதுக்குழு கூட்டம் சென்னை வானகரத்தில் உள்ள திருமண மண்டபத்தில் இன்று நடந்தது. முன்னதாக, ஒற்றைத் தலைமையை எடப்பாடி பழனிசாமி இன்று ஏற்பார் என்று எதிர்பார்த்திருந்த அவரது ஆதரவாளர்களுக்கு நீதிமன்றத்தின் உத்தரவு பெரும் தடையாக அமைந்தது. அதேவேளையில், ஒற்றைத் தலைமை விவகாரத்தில் தற்போது தங்களுக்கு வெற்றி கிடைத்ததாக ஓபிஎஸ் தரப்பினரும் கூட்டம் நடக்கும் அரங்கிற்கு வந்தனர்.

பொதுக்குழுவில் பங்கேற்பதற்காக, கூட்டம் நடக்கும் இடத்திற்கு அதிமுக உறுப்பினர்கள் சாரை சாரையாக வந்தனர். அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் இபிஎஸ் தனித்தனியே காரில் கூட்டம் நடக்கும் இடத்திற்கு வந்தனர். வரும் வழியில் எடப்பாடி பழனிசாமிக்கு பிரமாண்ட வரவேற்பு அளிக்கப்பட்டது. அவர்களை வரவேற்க செண்டை மேளம், தாரை தப்பட்டை, ஆட்டம், பாட்டம் என பிரமாண்ட வரவேற்பு அளிக்கப்பட்டது.

பின்னர், அதிமுக செயற்குழு – பொதுக்குழு கூட்டம் நடக்கும் மேடையில் இபிஎஸ் – ஓபிஎஸ் அமர்ந்தனர். அவைத்தலைவர் தமிழ் மகன் உசேன் நடுவில் அமர்ந்திருக்க இருபுறமும் ஓபிஎஸ், இபிஎஸ் அமர்ந்தனர். பிறகு, மேடையில் வைக்கப்பட்டுள்ள எம்ஜிஆர், ஜெயலலிதா உருவப்படங்களுக்கு இபிஎஸ், ஓபிஎஸ் மலர்தூவி மரியாதை செலுத்தினார்.

பின்னர், பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட இருந்த 23 தீர்மானங்களை ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் முன்மொழிந்தார். ஆனால், அந்த தீர்மானங்களை பொதுக்குழு நிராகரிப்பதாக முன்னாள் அமைச்சர் சிவி சண்முகம் ஆவேசமாக 3 முறை தெரிவித்தார்.

இதைத் தொடர்ந்து பேசிய அதிமுக துணை ஒருங்கிணைப்பாளர் கே.பி. முனுசாமி, பொதுக்குழுவில் கொண்டு வரப்பட்ட தீர்மானங்களை பொதுக்குழு உறுப்பினர்கள் அனைவரும் நிராகரித்து விட்டதாகவும், ஒற்றைத் தலைமை தீர்மானத்தோடு இணைத்து அடுத்த பொதுக்குழுவில் அறிவிக்கப்படும் என்று கூறினார்.

மீண்டும் பேசிய சிவி சண்முகம், இரட்டைத் தலைமையினால் ஏற்படும் குழப்பங்களினால் தொண்டர்கள் சோர்வடைந்து வருவதாகவும், வலுவான ஒற்றைத் தலைமையே சரியான தீர்வாக இருக்கும் என்று கூறினார்.

  • G.V. Prakash understood Sainthavi at the time of separation.. Affection blossomed during the divorce case பிரியும் நேரத்தில் சைந்தவியை புரிந்து கொண்ட ஜி.வி பிரகாஷ்.. விவாகரத்து வழக்கில் மலர்ந்த பாசம்!