முதலமைச்சர் வேட்பாளர் ஃபர்ஸ்ட்… தேர்தல் பணிகள் நெக்ஸ்ட்.. : அதிமுக செயற்குழுவில் வலியுறுத்தும் அமைச்சர்கள்..!

28 September 2020, 1:40 pm
ADMK updatenews360
Quick Share

சென்னை : தேர்தல் நெருங்கி வரும் நிலையில் முதலமைச்சர் வேட்பாளரை இறுதி செய்ய வேண்டும் என்று அதிமுக செயற்குழுவில் அமைச்சர்கள் சிலர் வலியுறுத்தியதாக தகவல் வெளியாகியுள்ளது.

அடுத்த ஆண்டு மே மாதம் தமிழக சட்டமன்ற தேர்தல் நடைபெறும் நிலையில் ஆளும் கட்சியான அதிமுக செயற்குழு கூட்டம் சென்னை ராயப்பேட்டையில் உள்ள தலைமை அலுவலகத்தில் தொடங்கியது. இந்தக் கூட்டத்தில் பங்கேற்க முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ.பி.எஸ் பங்கேற்றுள்ளனர்.

இந்தக் கூட்டத்தில் அதிமுக தேர்தல் வியூகம், முதலமைச்சர் வேட்பாளர், கட்சிக்கு ஒற்றை தலைமை உள்ளிட்ட முக்கிய விவகாரங்கள் குறித்து ஆலோசிக்கப்பட்டு வருவதாக தெரிகிறது.

சுமார் 3 மணி நேரத்திற்கும் மேலாக நடந்து வரும் இந்தக் கூட்டத்தில் அதிமுக முதலமைச்சர் வேட்பாளரை இறுதி செய்ய வேண்டும் என்று அமைச்சர்கள் திண்டுக்கல் சீனிவாசன், செங்கோட்டையன் மற்றும் தங்கமணி உள்ளிட்டோர் வலியுறுத்தியதாக தகவல் வெளியாகியுள்ளது. அப்போது, 11 பேர் கொண்ட வழிகாட்டுதல் குழுவை அமைத்து முதலமைச்சர் வேட்பாளரை தேர்வு செய்யலாம் என அமைச்சர் கேபி முனுசாமி யோசனை தெரிவித்ததாகவும் கூறப்படுகிறது.

ஏற்கனவே, முதலமைச்சர் வேட்பாளர் குறித்து விவாதம் ஏற்பட்ட போது, கட்சியை ஓ.பன்னீர்செல்வமும், ஆட்சியை எடப்பாடி பழனிசாமியும் வழிநடத்த முடிவு செய்யப்பட்டதாகக் கூறப்பட்டு வந்தது குறிப்பிடத்தக்கது.

முன்னதாக, அதிமுக செயற்குழு தொடங்குவதற்கு முன்பு, அம்மாவின் வாரிசு ஓ.பி.எஸ். என அவரது ஆதரவாளர்கள் ராயப்பேட்டை அலுவலகத்திற்கு வெளியே கோஷமிட்டனர்.

Views: - 9

0

0