தேசிய அளவில் கவனம்பெறும் அதிமுக பொதுக்குழு : அதிரடி முடிவுகளை எதிர்நோக்கும் தமிழகம்!!!

9 January 2021, 11:09 am
admk cover - updatenews360 (2)
Quick Share

சென்னை: இன்று நடைபெறும் அதிமுக பொதுக்குழுவில் முதல்வர் எடப்பாடி பழனிசாமியை அதிமுகவின் முதல்வர் வேட்பாளராக கட்சி முறைப்படி அறிவிக்கும் என்பதால், தொண்டர்கள் மிகுந்த உற்சாகத்தில் இருக்கிறார்கள். பழனிசாமியை முதல்வர் வேட்பாளராக ஏற்கும் கட்சிதான் அதிமுகவுடன் அணி சேர முடியும் என்பதையும் கட்சி அழுத்தம் திருத்தமாகவும், அதிரடியாகவும் அறிவிக்கும் என்பதால், தமிழக மக்களும் இன்றைய நிகழ்வுகளை உன்னிப்பாக கவனிக்கத் தயாராகிவருகிறார்கள்.

தலைநகரில் அதிமுக பல வரலாற்றுச் சிறப்புவாய்ந்த முடிவுகளை எடுத்த வானகரத்தில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த நேரத்தில் நடைபெறும் பொதுக்குழு தமிழ்நாடு மட்டுமின்றி இந்தியா முழுவதும் கவனம் பெற்றுள்ளது. வரும் 2021 சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுக அமைக்கப்போகும் கூட்டணி பற்றிய விவாதங்கள் இந்தப் பொதுக்குழுவில் நடைபெறும் என்பதால் அதிமுகவுடன் கூட்டணியை எதிர்பார்க்கும் தேசிய ஆளுங்கட்சியான பாஜகவும் இந்தக் கூட்டத்தை உற்றுநோக்கத் தயாராகிவருகிறது. வரும் பொங்கல் நாளில் பாஜக தேசியத் தலைவர் ஜே.பி.நட்டா தமிழகம் வரும்போது கூட்டணி குறித்துப் பேச்சுகள் எழுந்தால், அதற்கு அதிமுக தயார்நிலையில் இருக்கும் என்று தெரிகிறது.

ஒவ்வொரு அரசியல் கட்சிகளும் ஆண்டுக்கு ஒருமுறை பொதுக்குழுவையும், 2 முறை செயற்குழுவையும் கூட்ட வேண்டும். கூட்டத்தில் எடுக்கப்படும் முடிவுகளை தேர்தல் ஆணையத்துக்குத் தெரிவிக்க வேண்டும். அ.தி.மு.க. பொதுக்குழு கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் நடைபெற்றது. கொரோனா பரவல் காரணமாக பொதுக்குழு கூட்டம் நடைபெறாமல் இருந்தது. செயற்குழு கூட்டம் மட்டும் அ.தி.மு.க. தலைமை கழகத்தில் நடத்தப்பட்டது. பொதுக்குழு நடக்காத நேரத்தில் வரும் தேர்தலில் முதலமைச்சர் வேட்பாளராக எடப்பாடி பழனிசாமியை கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் அறிவித்தார். மேலும், 11 பேர் கொண்ட வழிகாட்டும் குழு அமைக்கும் முடிவு எடுக்கப்பட்டது.

வழிகாட்டும் குழுவுக்கு என்னென்ன அதிகாரங்கள் வழங்கப்பட வேண்டும் என்பது குறித்தும் விதிகள் உருவாக்கப்பட்டுள்ளன. இந்த விதிகளுக்கு பொதுக்குழுவில் ஒப்புதல் பெறப்படும் என்று கருதப்படுகிறது. பொதுக்குழுவில் மூன்றாயிம் பேரும் செயற்குழுவில் 302 பேரும் பங்கெடுப்பார்கள். அமைச்சர்கள், தலைமைக் கழக நிர்வாகிகள், அணிகளின் செயலாளர்கள், ஒன்றிய, நகர, கழக நிர்வாகிகள், சிறப்பு அழைப்பாளர்கள் உள்பட மொத்தம் 3,500 பேர் கலந்து கொள்கிறார்கள்.

eps - amit shah meet -updatenews360

மத்திய அமைச்சர் அமித் ஷா வருகையின்போது பாஜகவுடன் கூட்டணி தொடரும் என்று முதல்வர் பழனிசாமியும் துணை முதல்வர் பன்னீர்செல்வமும் அறிவித்தனர். ஆனால், அதிமுக அரசைப் பாராட்டிப் பேசிய அமித் ஷா கூட்டணி குறித்து எதுவும் பேசவில்லை. ஆனால், அந்த நிகழ்வுக்குப் பின் பல நேரங்களில் பேசிய பாஜக மாநில தலைவர்கள் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் அதிமுக ஒரு அங்கம் என்றும் அந்தக் கூட்டணியின் முதல்வர் வேட்பாளரை பாஜக மத்திய தலைமை தீர்மானிக்கும் என்றும் கூறிவருகிறார்கள். இந்த முடிவைத் தேர்தல் அறிவித்தபின்னர் கூட்டணிப் பேச்சுகள் நடந்தபின்னர்தான் அறிவிக்க முடியும் என்று பாஜக தமிழக பொறுப்பாளர் சி.டி.ரவி தெரித்துள்ளார். ஆனால், பழனிசாமியை முதல்வர் வேட்பாளராக ஏற்கும் கட்சியுடன்தான் கூட்டணி என்று அதிமுக துணை ஒருங்கிணைப்பாளர் கே.பி. துரைசாமியும், அமைச்சர் டி.ஜெயகுமாரும் உறுதியாகத் தெரிவித்துவருகிறார்கள். இன்றைய பொதுக்குழுவில் இதுகுறித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டால் அந்த முடிவு அதிமுகவின் ஒட்டுமொத்த முடிவாகும்.

மேலும், தமிழத்தில் கூட்டணி ஆட்சி வேண்டும் என்றும், ஆட்சியில் பங்குவேண்டும் என்றும் பாஜகவும், பாமகவும், தேமுதிகவும் பேசிவருகிறார்கள். இந்தக் கருத்தையும் முதல்வரே மறுத்துள்ளார். தமிழ்நாட்டில் இதுவரை கூட்டணி அமைச்சரவை அமைந்ததில்லை. 1980-ஆம் ஆண்டு திமுகவும், காங்கிரசும் சம அளவு தொகுதிகளைப் பகிர்ந்துகொண்டு கூட்டணி அமைச்சரவை அமைப்பதாகச் சொல்லி தேர்தலை சந்தித்தபோது, அந்தக் கூட்டணி பெரும் தோல்வியடைந்தது. 2006-ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் திமுகவுக்கு பெரும்பான்மை இல்லாத சூழலிலும், திமுக தனித்தே அமைச்சரவை அமைத்தது. இந்த உண்மையை உணர்ந்துள்ள அதிமுக தலைவர்கள் தமிழ்நாட்டில் அதிமுக தலைமையில் தனித்து ஆட்சி என்பதையும் தீர்மானமாக பிரகடனம் செய்வார்கள் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.

மேலும், அதிமுக அணியில் இடம்பெறக்க்கூடிய கட்சிகள், அவற்றுக்கு ஒதுக்கவேண்டிய தொகுதிகளின் எண்ணிக்கை ஆகியவை குறித்தும் விரிவான ஆலோசனைகள் நடத்தப்படும் என்று தெரிகிறது. அதுமட்டுமில்லாமல், கூட்டணி சேரும் கட்சிகளுடன் பேச்சுநடத்த கட்சியின் ஒருங்கிணப்பாளர் பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட மூத்த தலைவர்களுக்கு அதிகாரம் வழங்கப்படும் அல்லது அதற்கு ஒரு குழு அமைக்கப்படும் என்று கருதப்படுகிறது.

இதுதவிர தமிழகத்தின் முக்கிய பிரச்சினைகளில் அதிமுகவின் நிலைப்பாடு பல்வேறு தீர்மானங்களாக வடிவமைக்கப்படும். கட்சி எந்தப் பிரச்சினைகளின் அடிப்படையில் தேர்தலை சந்திக்கும் என்பதும் இன்றைய பொதுக்குழுவில் நிறைவேற்றப்படும் தீர்மானங்கள் வெளிப்படுத்தும். இந்த நான்கு ஆண்டுகளில் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அரசின் சாதனைகளுக்கான பாராட்டுத் தீர்மானங்களும் பொதுக்குழுவில் எதிர்ப்பார்க்கப்படுகிறது.

அதிமுக ஒற்றுமையுடனும் உறுதியுடனும் இன்று நிறைவேற்றும் தீர்மானங்களும் தலைவர்களின் அதிரடிப் பேச்சுகளும் கூட்டணிக் கட்சிகளை வழிக்குக் கொண்டுவரும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது. எதிர்க்கட்சியான திமுகவின் மீது காட்டமான விமர்சனங்களும் அனல்தெறிக்கும் பதில்களும் களைகட்டுவதுடன் திமுகவை மூன்றாவது முறையாக தேர்தலில் வீழ்த்துவதற்குத் தேவையான தெளிவான வியூகங்களும் பொதுக்குழுவில் உருவாக்கப்படும் என்று தெரிகிறது. பொதுக்குழு கூட்டம் முடிந்த பிறகு அ.தி.மு.க. தலைமைக் கழகத்திற்கு முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் முக்கிய அமைச்சர்கள், நிர்வாகிகள் செல்வார்கள் என்றும், மாலை மீண்டும் விவாதம் நடைபெறும் என்றும் எதிர்பார்ப்புகள் நிலவுகின்றன.

Views: - 0

0

0