ஓபிஎஸ் அடிக்கடி நீதிமன்றம் போகக் காரணமே அந்த 1%-தான்.. முன்னாள் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் சொன்ன ரகசியம்..!!

Author: Babu Lakshmanan
30 July 2022, 3:57 pm
Quick Share

மதுரை : பிரதமருடன் முதல்வர் காட்டிய நெருக்கம் மக்களை ஏமாற்றும் செயல் என்றும் சட்டமன்ற எதிர்கட்சி துணை தலைவர் ஆர்.பி.உதயகுமார் தெரிவித்துள்ளார்.

மதுரை காந்தி நினைவு அருங்காட்சியகம் அருகே இருக்கக்கூடிய யூனியன் கிளப்பில் நடைபெற்ற டென்னிஸ் டோர்னமெண்ட் போட்டியை முன்னாள் அமைச்சர் உதயகுமார் அவர்கள் துவக்கி வைத்தார். அப்போது, போட்டியில் பங்குபெறும் வீரர்களுடன் முன்னாள் அமைச்சர் உதயகுமார் அவர்கள் சிறிது நேரம் டென்னிஸ் விளையாடிவிட்டு செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது, அவர் பேசியதாவது :- அதிமுக அரசு ஆன் லைன் ரம்மியை தடை செய்தது. நீதிமன்ற தீர்ப்பால் ஆன் லைன் ரம்மி தொடர்கிறது. ஆன் லைன் ரம்மியால் 23 பேர் தமிழகத்தில் உயிரிழந்து உள்ளனர். தமிழக அரசு ஆன் லைன் ரம்மியை தடை செய்ய நடவடிக்கைகள் எடுக்க வேண்டும்.

திமுக அரசு கொடுத்த தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை.ஆட்சிக்கு வரும் முன்னர் ஒரு பேச்சும், ஆட்சிக்கு வந்த பின்னர் ஒரு பேச்சுமாக பேசுகிறார்கள். மின் கட்டணத்தை உயர்த்தி மக்களின் வயிற்றில் அடித்துள்ளார்கள்.

எதிர்கட்சியாக இருக்கும் போது ‘கோ பேக் மோடி’ என்று சொன்னார்கள். ஆளும்கட்சியாக ஆன பின்னர் ‘கம் பேக் மோடி’ என்று சொல்கிறார்கள்.திமுக என்றுமே ஒரே நிலைப்பாட்டில் இருந்ததில்லை. மக்களை ஏமாற்றும் வகையில் அவர்கள் செயல்படுகிறார்கள் என்பதற்கு சாட்சியாகவே பிரதமர் மோடியுடன் முதல்வர் ஸ்டாலின் காட்டிய நெருக்கத்தை கருத வேண்டும்.

பிரதமரிடம் உள்ள நெருக்கத்தை பயன்படுத்தி நீட் தேர்வு ரத்து மசோதாவுக்கு அழுத்தம் கொடுத்து இருக்கலாம். என் மீது லஞ்ச ஒழிப்புத்துறையில் கொடுக்கப்பட்ட புகார் அரசியல் காழ்ப்புணர்வுடன் அளிக்கப்பட்டுள்ளது. அது தொடர்பாக எந்தவிதமான சோதனைக்கும் நான் தயார்.

மரியாதை நிமித்தமாகவே பிரதமர் மோடியை எடப்பாடி பழனிச்சாமி வரவேற்றார். பிரதமரை யார் வரவேற்க வேண்டும் என்பது டெல்லியின் முடிவு. அதிமுக, பாஜக – யாருடைய தலைமையின் கீழ் அடுத்த தேர்தலை எதிர்கொள்வது என்பது குறித்து தலைமை முடிவெடுக்கும்.

தன்னுடைய ஆதரவாளர்களுக்கு நம்பிக்கை ஊட்டும் விதமாகவும், திருப்திப்படுத்தும் விதமாகவும் ஒ.பி.எஸ் மீண்டும் மீண்டும் நீதிமன்றத்திற்கு செல்கிறார். எடப்பாடி பழனிச்சாமி பக்கம் 99 சதவீத அதிமுகவினர் உள்ளனர். ஒ.பி.எஸ் தனது செயலுக்கு வருத்தம் தெரிவித்தால் அதிமுகவில் சேரலாம் என செல்லூர் ராஜு கூறி இருப்பது அவருடைய கருத்து, என கூறினார்.

Views: - 517

0

0