கூட்டணிப் பேச்சில் ஜெயலலிதா பாணியில் அதிமுக அதிரடி : முதல்வர் வேட்பாளரை ஏற்காத கட்சிகள் வெளியேற்றப்படும்!!

Author: Babu
10 October 2020, 5:57 pm
Quick Share

சென்னை : அதிமுகவில் கட்சிக்குள் இருந்த அனைத்து சர்ச்சைகளும் தீர்க்கப்பட்டு முதல்வர் வேட்பாளராக எடப்பாடி பழனிசாமி அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், அடுத்த கட்டமாக கூட்டணிக் கட்சிகளும் அதை ஏற்க வேண்டும் என்று 2021 சட்டமன்றத் தேர்தலை நோக்கி அடுத்த அடியை உறுதியாக எடுத்துவைத்துள்ளது ஆளுங்கட்சி.

அதிமுகவில் முதல்வர் வேட்பாளர் சர்ச்சைக்குத் தீர்வு ஏற்படாது என்று கூறி வந்த எதிர்க்கட்சிகளின் வாயில் மண்ணைப்போடும் வகையில் முதல்வர் வேட்பாளராக எடப்பாடி பழனிசாமி ஒருமனதாக அறிவிக்கப்பட்டார். அதில் ஏமாந்துபோன எதிர்க்கட்சிகள் தற்போது கூட்டணிப் பேச்சுகளில் பாஜகவுக்கு அதிமுக பணிந்துவிடும் என்று வதந்திகளைப் பரப்பிவருகின்றனர். இந்த நிலையில் கட்சியின் முதல்வர் வேட்பாளரான பழனிசாமியை கூட்டணியின் முதல்வர் வேட்பாளராக ஏற்றுக்கொள்ளும் கட்சிக்கு மட்டும்தான் தனது அணியில் இடம் என்று ஆணித்தரமான வகையில் அறிவித்துள்ளது.

eps cm- updatenews360

நேற்று முதல்வரை சந்தித்த தமிழ்நாடு பாஜக தலைவர் எல்.முருகன் வெளியே பத்திரிகையாளர்களிடம் பேசும்போது, அதிமுகவின் முதல் வேட்பாளராக பழனிசாமி அறிவிக்கப்பட்டதற்கு வாழ்த்து தெரிவித்ததாகக் கூறினார். கூட்டணியின் முதல்வர் வேட்பாளர் எடப்பாடி பழனிசாமிதானா என்று இருமுறை பத்திரிகையாளர்கள் கேட்டபோதும், தான் ஏற்கனவே அதுபற்றிக் கூறிவிட்டதாகத் தெரிவித்தார். அதிமுகவுடன் கூட்டணி அமைப்பது குறித்து பேசிவரும் முருகன், பழனிசாமிதான் கூட்டணியின் முதல்வர் வேட்பாளர் என்று சொல்வதற்கு ஏன் தயங்குகிறார் என்பது தெரியவில்லை.

தமிழ்நாட்டின் ஆளுங்கட்சியாக இருக்கும் அதிமுகவுடன் கூட்டணி அமைக்கும் கட்சிகள் அதன் தலைமையில்தான் கூட்டணி அமைக்கும் என்பது வெளிப்படையான உண்மை. கடந்த 2019 நாடாளுமன்றத் தேர்தலில் அமைக்கப்பட்ட கூட்டணிக்கும் அதிமுகவே தலைமை வகித்தது. பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடிதான் என்ற நிலையிலும் தேசிய அளவில் நடைபெற்ற தேர்தலிலும் அதிமுகவின் தலைமையை ஏற்றது பாஜக.

bjp-aiadmk - updatenews360

பத்தாண்டுகளாக ஆட்சியின் இருக்கும் அதிமுகவின் தலைமையில்தான் அணி அமையும் என்ற சூழலில் அதிமுகவின் முதல்வர் வேட்பாளரான பழனிசாமிதான் அதன் தலைமையில் உருவாக்கப்படும் கூட்டணியின் முதல்வர் வேட்பாளர் என்பதில் எந்தவிதமான சந்தேகமும் இருக்கமுடியாது.

இந்நிலையில், கிருஷ்ணகிரியில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அ.தி.மு.க.வின் துணை ஒருங்கிணைப்பாளரும், மாநிலங்களவை உறுப்பினருமான கே.பி. முனுசாமி, “தேசிய கட்சியோ, மாநில கட்சியோ அ.தி.மு.க. முதல்வர் வேட்பாளர் பழனிசாமியை ஏற்போரே கூட்டணியில் இருக்க முடியும். பழனிசாமியை முதல்வர் வேட்பாளராக ஏற்றுக்கொள்ளாத கட்சிகள் அ.தி.மு.க. கூட்டணியில் இருக்க முடியாது”, என்று அதிரடியாக அறிவித்து, கூட்டணி பேச்சுகளில் அதிமுக யாருக்கும் பணியாது என்பதையும் தெளிவுபடுத்தியுள்ளார்.

Krishnagiri KP Munusamy - updatenews360

முதல்வர் வேட்பாளராக எடப்பாடி பழனிசாமியை ஏற்பதற்கு முன் தேர்தலில் தனது கட்சிக்கு ஒதுக்கப்படும் தொகுதிகளின் எண்ணிக்கையைப் பேசி முடிவு செய்யலாம் என்றும், முதல்வர் வேட்பாளர் பிரச்சினையை வைத்து அதிக இடங்களை பாஜகவுக்கு ஒதுக்கினால்தான் பழனிசாமியை முதல்வர் வேட்பாளராக ஏற்போம் என்று பேரம் பேசலாம் என்றும் பாஜக போட்டிருக்கும் திட்டத்தை முளையிலேயே கிள்ளி எறியும் விதத்தில் முனுசாமியின் அறிவிப்பு விளங்குகிறது.

‘எடப்பாடி பழனிசாமியை முதலில் முதல்வர் வேட்பாளராக ஏற்றுக்கொள்ளுங்கள். அப்படி ஏற்காவிட்டால் கூட்டணியில் இடம் கிடையாது’ என்ற அதிமுகவின் நிலைப்பாடு, பாஜவுக்கு மட்டுமில்லாமல் மற்ற கூட்டணிக் கட்சிகளுக்கும் உறுதியான செய்தியாகப் பார்க்கப்படுகிறது. இப்போது ‘அதிமுக கூட்டணியில் இடம்பிடிக்க வேண்டுமென்றால் முதலில் பழனிசாமியை முதல்வர் வேட்பாளராக ஏற்க வேண்டும். இப்பிரச்சினையை தொகுதி எண்ணிக்கை பற்றிய பேரத்துக்குப் பயன்படுத்தமுடியாது’ என்பது கூட்டணிக் கட்சிகளுக்கு விளக்கப்பட்டுள்ளது.

கடந்த 2019 நாடாளுமன்றத் தேர்தலில் பாஜக பாதி இடங்களை மிரட்டிவாங்கிவிடும் என்று திமுக ஆதரவாளர்கள் பேசியதற்கு மாறாக இந்தியாவையே ஆளும் அக்கட்சிக்கு 5 தொகுதிகள்தான் தரப்பட்டன. கூட்டணிப் பேச்சுகளில் முன்னாள் முதல்வர் ஜெ.ஜெயலலிதாவின் உறுதியான அணுகுமுறையைத்தான் அதிமுக பின்பற்றும் என்று அப்போதே தெளிவானது. இப்போதும் கூட்டணிப் பேச்சுகளில் பாஜக உள்ளிட்ட எந்தக் கட்சிக்கும் அதிமுக பணியாது என்பது மீண்டும் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

Views: - 59

0

0