‘குற்றமற்றவர் ஜெயலலிதா’ : நேருக்கு நேர் விவாதிக்க தயாரா..? திமுக எம்பி ஆ.ராசாவுக்கு முன்னாள் வழக்கறிஞர் சவால்..!!!

7 December 2020, 1:59 pm
Quick Share

சட்டப்பேரவை தேர்தல் நெருங்க நெருங்க அதிமுக – திமுகவின் தலைவர்கள் பரஸ்பரமாக கடுமையாக விமர்சித்துக் கொள்கின்றனர். அந்த வகையில், 2 ஜி வழக்கில், கூட்டணி கட்சியான காங்கிரஸ் ஆட்சியின் போதே, திமுக எம்பி ஆ.ராசா சிறையில் அடைக்கப்பட்டார், மேல்முறையீடு வழக்கு விசாரணை முடியும் போது, ஆ.ராசா எங்கிருப்பார் எனத் தெரிய வரும் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஆ.ராசாவை விமர்சித்து பேசினார்.

இதற்கு பதிலளித்து பேசிய திமுக எம்பி ஆ.ராசா, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மற்றும் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா ஆகியோவை விமர்சித்து பேசினார். மேலும், ஜெயலலிதா வழக்கில் உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்பு குறித்து விவாதிக்க முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தயாரா..? என்றும் ஆ.ராசா கேள்வி எழுப்பினார்.

இந்த நிலையில், ஜெயலலிதாவின் சொத்துக்குவிப்பு வழக்கு பற்றி தன்னுடன் விவாதிக்க ஆ.ராசா தயாரா..? என்று ஜெயலலிதாவின் முன்னாள் வழக்கறிஞர் ஜோதி சவால் விடுத்துள்ளார்.

இது தொடர்பாக சென்னையில் செய்தியாளர்களிடம் அவர் பேசியதாவது :- மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவுக்காக 12 வழக்கில் ஆஜராகி 11ல் வெற்றி பெற்றுக் கொடுத்துள்ளேன். ஜெயலலிதா குறித்து திமுக எம்பி ஆ.ராசா அவதூறாக பேசி வருகிறார். அது எனக்கு வருத்தமளிக்கிறது.

2ஜி வழக்கில் இருந்து ஆ.ராசா எப்படி விடுதலையானாரோ, அதேபோல, சொத்து குவிப்பு வழக்கில் இருந்து ஜெயலலிதா விடுதலையாகி விட்டார். அந்த வழக்கின் தீர்ப்பில், ஜெயலலிதா அரசியலைப்பு சட்டத்தை மீறியுள்ளார், கொள்ளைக்காரி என எதுவும் குறிப்பிடவில்லை. அவர் இறந்தவுடன், இறப்புச் சான்றிதழை சமர்பித்து இந்த வழக்கை மேற்கொண்டு நடத்த வேண்டாம் என தெரிவித்திருக்க வேண்டும். ஆனால், சசிகலா முதலமைச்சர் ஆக வேண்டும் என்பதற்காக, தனது சுயநலத்திற்காக ஜெயலலிதாவின் இறப்பு சான்றிதழை அவர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யவில்லை. அவர் அப்படி தாக்கல் செய்திருந்தால், ஜெயலலிதாவின் பெயரே வந்திருக்காது.

ஜெயலலிதாவின் சொத்து குவிப்பு வழக்கு பற்றி தனக்கு நன்கு தெரியும். ஆ.ராசா சொல்லும் இடத்தில் விவாதம் நடத்த நான் தயார். அவர் தயாராக உள்ளாரா…? என சவால் விடுத்துள்ளார்.

Views: - 11

0

0