உஸ்பெகிஸ்தானில் ஆப்கன் ராணுவ விமானம் விழுந்து விபத்து.. தலிபான்களுக்கு பயந்து வெளியேறிய போது நிகழ்ந்த சம்பவம்..!!
Author: Babu Lakshmanan16 August 2021, 7:35 pm
உஸ்பெகிஸ்தானுக்கு தஞ்சம் புகுவதற்கு முயன்ற ஆப்கானிஸ்தான் ராணுவ வீரர்கள் சென்ற விமானம் விபத்திற்குள்ளாகியது.
ஆப்கானிஸ்தானில் படிப்படியாக அமெரிக்கா ராணுவம் தனது படைகளை குறைத்து வரும் நிலையில், அந்நாட்டின் பெரும்பகுதியை தலிபான்கள் கைப்பற்றி விட்டனர். பெரும்பாலான ஆப்கானிஸ்தான் ராணுவ வீரர்கள், எந்தவித எதிர்ப்பும் இன்றி தலிபான்களிடம் சரணடைந்து விட்டனர். மேலும், பெரும்பாலானோர் அருகே உள்ள உஸ்பெகிஸ்தானுக்கு தஞ்சம் புகுந்து விட்டனர். இதனால், நேற்று தலைநகர் காபூலை சுற்றி வளைத்த தலிபான்கள், ஆட்சியைக் கைப்பற்றினர்.
அதிபர் மாளிகையை தலிபான்கள் கைப்பற்றிய நிலையில், போர் முடிவுக்கு வருவதாகவும் அதிகாரப்பூர்வமாக அறிவித்து விட்டனர். ஆப்கன் நாட்டை தலிபான்கள் கைப்பற்றியதால், உயிர் பலி அச்சத்தால், மக்கள் நாட்டை விட்டு வெளியேறி வருகின்றனர். இதற்காக, ஆப்கன் நாட்டு மக்கள் மற்றும் பிற நாட்டு மக்கள் என அனைவரும் அங்கிருந்து வெளியேறுவதற்காக காபூல் விமான நிலையத்தில் குவிந்து வருகின்றனர்.
இந்த நிலையில், ஆப்கானிஸ்தானின் ராணுவ விமானம் ஒன்று உஸ்பெகிஸ்தானின் தென்மேற்கு சுர்சோன்டார்யோ பகுதியில் நேற்று விபத்துக்கு உள்ளாகியுள்ளது. தலிபான்களின் ஆட்சிக்கு பயந்து ஆப்கன் ராணுவ வீரர்கள் உஸ்பெகிஸ்தானுக்கு ராணுவ விமானம் மூலம் செல்லும் போது இந்த விபத்து ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது.
விமானத்தில் இருந்த 2 ஆப்கான் வீரர்கள் காயங்களோடு மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
0
0