நாளை திட்டமிட்டபடி மீண்டும் வேல்யாத்திரை தொடங்கப்படும் : எல்.முருகன் உறுதி…!!

7 November 2020, 7:45 pm
Murugan - Updatenews360
Quick Share

சென்னை : தமிழகத்தில் நடத்தப்படவிருந்த வேல்யாத்திரைக்கு தமிழக அரசு விதித்துள்ள தடைக்கு எதிரான வழக்கு நீதிமன்றத்தில் விசாரணையில் உள்ள நிலையில், நாளை திட்டமிட்டபடி மீண்டும் வேல்யாத்திரை தொடங்கப்படும் என பாஜக அறிவித்துள்ளது.

தமிழகத்தில் பாஜக சார்பில் நடைபெற இருந்த வேல்யாத்திரைக்கு தமிழக அரசு தடை விதித்தது. ஆனால், திட்டமிட்டபடி, வேல்யாத்திரை நடத்தப்படும் என பாஜக மாநில தலைவர் எல்.முருகன் அறிவித்திருந்தார். அதன்படி, இன்று அவர் திருத்தணியில் சுவாமி தரிசனம் செய்ய காவல்துறையினரிடம் அனுமதி கோரினார். காவல்துறையினரும் 10 வாகனங்களில் செல்ல மட்டுமே அனுமதியளித்தனர்.

அதன்படி, திருத்தணி சென்ற எல்.முருகன் திருத்தணி கோவிலில் தரிசனம் செய்து முடித்து விட்டு, திடீரென வேல்யாத்திரையை தொடங்கினார். இதனால், பரபரப்பு ஏற்பட்டது. வேல் யாத்திரைக்காக தயார் செய்யப்பட்ட வேனில் ஏறியபடி ஊர்வலம் தொடங்கியது. இதைத் தொடர்ந்து, தடையை மீறி வேல்யாத்திரையை நடத்திய பாஜக தலைவர் எல்.முருகன் உள்பட 500 பேர் கைது செய்யப்பட்டு, பிறகு விடுவிக்கப்பட்டனர்.

இதனிடையே, வேல்யாத்திரைக்கு விதிக்கப்பட்ட தடையை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் பாஜக அவசர மனு தாக்கல் செய்துள்ளது. இந்த அவரச மனு இன்று மாலை விசாரணைக்கு வந்தது. அப்போது, வேல் யாத்திரைக்கு 100 பேர் மட்டுமே பங்கேற்க இருப்பதாகவும் பாஜக தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இதனைக் கேட்ட நீதிபதிகள், புதிய மனுவை காவல்துறையிடம் அனுமதி பெற்றுக் கொள்ளுமாறு தெரிவித்ததுடன், அவர்களில் எத்தனை பேர் 60 வயதுக்கு மேற்பட்டவர்கள் உள்ளிட்ட விபரங்களை தாக்கல் செய்ய வேண்டும் என தெரிவித்தனர். மேலும், கோவில் விழாக்களில் 1,000க்கும் மேற்பட்டோரை அனுமதிக்கும் தமிழக அரசு, வேல்யாத்திரைக்கு மட்டும் அனுமதி மறுப்பது ஏன் எனக் கேள்வி எழுப்பியுள்ளனர்.

இந்த நிலையில், மீண்டும் நாளை வேல்யாத்திரை நடத்தப்படும் என்றும், அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி யாத்திரை நடக்கும் என பாஜக தலைவர் முருகன் தெரிவித்துள்ளார்.

Views: - 35

0

0