பஞ்சாப் மக்களுக்காக பதவிதுறந்த அகாலிதளம் : ஈழத்தமிழர்களை கொன்று குவிக்கும் போது சாமரம் வீசிய தி.மு.க.!!

18 September 2020, 6:40 pm
DMK_- karunanithi updatenews360
Quick Share

சென்னை : வேளாண்மை தொடர்பாக மத்திய அரசு நிறைவேற்றியுள்ள 3 சட்டங்களுக்கும் பஞ்சாப் மக்களிடையே கடும் எதிர்ப்பு எழுந்துள்ளதால், பாஜகவின் கூட்டணிக் கட்சியான சிரோமணி அகாலிதளம் கட்சியைச் சேர்ந்த மத்திய அமைச்சர் ஹர்சிம்ரத் கவுர் பாதல் பதவி விலகினார். இது குறித்து திமுக தலைவர் ஸ்டாலின் இனிமேல் தமிழ்நாடு முதல்வர் எடப்பாடி பழனிசாமி தன்னை விவசாயி என்று கூறிக்கொள்ளவே கூடாது என்று கடுமையாக வெளியிட்டுள்ள அறிக்கை, 2009-ல் ஈழத்தமிழர் படுகொலையின்போது திமுக ஏன் மத்திய அமைச்சர் பதவிகளில் ஒட்டிக்கொண்டிருந்தார்கள் என்ற கேள்வியை மீண்டும் நினைவுப்படுத்தியுள்ளது.

“மாநிலங்களவையில் அறிவிக்கப்பட்ட அத்தியாவசியப் பொருட்கள் திருத்தச் சட்டம், வேளாண் உற்பத்தி ஊக்குவிப்புச் சட்டம், வேளாண் சேவைகள் திருத்தச் சட்டம் ஆகிய மூன்று சட்ட மசோதாக்களும் தமிழக விவசாயிகள் மட்டுமின்றி, ஒட்டுமொத்த இந்திய விவசாயிகளின் வாழ்வுக்கும் எதிரான சட்டங்கள் என்று கருத்து தெரிவித்துள்ள ஸ்டாலின், இதற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவின் கூட்டணிக் கட்சியான சிரோமணி அகாலிதளம் கட்சியைச் சேர்ந்த மத்திய அமைச்சர் ஹர்சிம்ரத் கவுர் பாதல் ராஜினாமா செய்துள்ளார் என்பதை சுட்டிக்காட்டியுள்ளார்.

அந்த சட்டங்களை அதிமுக ஆதரவளித்துள்ளதற்கு கண்டனத்தைத் தெரிவித்துக் கொண்ட ஸ்டாலின் ‘முதல்வர் பழனிசாமியிடம் நான் ஒன்றே ஒன்றை மட்டும் கேட்டுக்கொள்கிறேன். இனியொரு முறை மேடைகளில் நின்று ‘நான் ஒரு விவசாயி’ என்று மட்டும் சொல்லாதீர்கள்”என்று கடுமையான தொனியில் முதல்வரை சாடியுள்ளார்.

ஆனால், இன்று பஞ்சாப் மக்களுக்காகப் பதவி துறந்த அகாலிதளத்தைப் பாராட்டும் ஸ்டாலின், 2009-ஆம் ஆண்டு நடைபெற்ற ஈழ இனப்படுகொலையின்போது, பல்வேறு நாடகங்களை நடத்திக் காட்டியதே தவிர, மத்திய அரசு பதவிகளில் இருந்து விலகவில்லை. விவசாய சட்டங்களை எதிர்த்து பஞ்சாபில் விவசாயிகள் போராட்டத்தைத் தொடங்கி இருக்கிறார்கள். ஆனால், தமிழ்நாட்டில் அதுபோன்ற போராட்டங்களோ, எதிர்ப்புகளோ இல்லை என்ற நிலையில், இதை ஆதரித்த முதல்வர் விவசாயி என்று பேசக்கூடாது என்று நிபந்தனை விதித்துள்ளார்.

ஈழத்தில் தமிழர் பகுதிகளில் நுழைந்த இலங்கை ராணுவம் பிஞ்சுக் குழந்தைகள், முதியோர் உட்பட அனைத்து மக்கள் மீதும் வானில் இருந்து குண்டு மழை பொழிந்தது. தன் சொந்த நாட்டு மக்களின் மீதே குண்டு வீசிக்கொல்லும் இலங்கை அரசை எதிர்த்தும், போர்நிறுத்தம் கோரியும் தமிழ்நாட்டில் போராட்டங்கள் வெடித்தன. முத்துக்குமார் உள்ளிட்ட பலர் தீக்குளித்து இறந்தனர்.

இலங்கைக்கு ரடார் உள்ளிட்ட கருவிகள் கொடுத்தும், ராணுவ ஒப்பந்தம் போட்டு விடுதலைபுலிகளுக்கு ஆயுதமோ, வெடிமருந்துகளோ கிடைக்காமல் தடுத்தும், இந்தப்போரை சோனியா வழிகாட்டுதலில் நடந்த மத்திய அரசு இயக்கியது. இந்த அரசு திமுக ஆதரவுடன் நடைபெற்றது. மத்திய ஆட்சிக்கு ஆதரவை வாபஸ் பெற்றால், மத்திய அரசு கவிழும் நிலை இருந்தது. மத்திய அரசில் திமுக தலைவர் கருணாநிதியின் மகன் மு.க. அழகிரி உட்பட பலர் கேபினட் அந்தஸ்துடன் அமைச்சர்களாக இருந்தனர்.

முத்துக்குமாரின் மரணத்துக்குப் பின் மாணவர்கள் போராட்டத்தில் இறங்குவதைத் தடுப்பதற்காக மாநில அரசே கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவித்து, மாணவர்களில் விடுதிகளில் இருந்தும் கட்டாயமாக வெளியேற்றியது. வணிகர்களும் மற்றவர்களும் கடையடைப்புப் போராட்டத்தில் ஈடுபட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று திமுக அரசு மிரட்டியது. முத்துக்குமாரின் இறுதி ஊர்வலத்தைக்கூட சென்னைக்கு வெளியே சுற்றிப்போக வேண்டும் என்று போலிசை வைத்து ஊர்வலப்பாதையை மாற்றியது.

ஈழத்தமிழர் படுகொலைக்குப் பின்னால் மத்திய காங்கிரஸ் இருக்கிறது என்று குற்றம் சாட்டி பொதுக்கூட்டத்தில் பேசிய மதிமுக பொதுச்செயலாளர் வைகோ மீது தேசப்பாதுகாப்பு சட்டத்தின் மீது வழக்கு போடப்பட்டது. உண்ணாவிரதம் அறிவித்த பழ.நெடுமாறனுக்கு போராட்டத்திற்கு இடம் கொடுத்தவர்கள் மிரட்டப்பட்டார்கள். கூட்டணியில் இருந்த திருமாவளவனுக்குக் கூட சென்னையில் போராட இடம் தராமல் மறைமலைநகருக்கு அனுப்பியது அரசு. ஈழம் என்ற வார்த்தையே அவரது போஸ்டரில் இருக்கக் கூடாது என்று அழிக்கப்பட்டது. சென்னை உயர்நீதிமன்றத்திலேயே போலிஸ் நுழைந்து சோனியாகாந்தியின் படத்தை எரித்த வழக்கறிஞர்களை ரத்தம் சொட்டச்சொட்ட தடிகளால் தாக்கியது.

இவ்வளவு அடக்குமுறைகளையும் தமிழர்களுக்காகப் போராடியவர்களின் மீது ஏவிய ‘தமிழினத் தலைவரின் அரசு’ தமிழ்நாட்டு மக்களின் எழுச்சியைத் தாங்க முடியாமல் தாங்களும் போராடுவதாகக் களத்தில் இறங்கியது. போரை நடத்திய மத்திய அரசில் இருந்துகொண்டே தமிழ்நாட்டில் போர்நிறுத்தம் கோரி மனிதச் சங்கிலி போராட்டத்தை திமுக நடத்தியது. மாநில சட்டமன்றத்தில் மத்திய அரசுக்குக் கண்டனம் தெரிவிக்காமல் சோனியாகாந்தி ஈழத்தமிழர்களைக் காப்பாற்ற வேண்டும் என்று போரை பின்னால் நின்று நடத்தியவரிடமே கருணைமனு போட்டுத் தீர்மானம் நிறைவேற்றியது திமுக. போரை நிறுத்தக்கோரும் இந்தத் தீர்மானம் அதிமுக தலைவர் ஜெ.ஜெயலலிதாவின் ஆதரவுடன் ஒருமனதாக சட்டமன்றத்தில் நிறைவேற்றியது.

அப்போது, மத்திய அரசில் இருக்கும் திமுக பதவிவிலக வேண்டும் என்ற கோரிக்கை எழுந்தது. அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் இந்தக் கோரிக்கையை சாமர்த்தியமாகத் திசைதிருப்பி மத்திய அரசை எதிர்க்கும் எதிர்க்கட்சி எம்.பி, க்களும் சேர்த்து பதவிவிலக வேண்டும் என்று மாற்றினார். அதற்கும் ஜெயலலிதா ஒப்புக்கொண்டார். ஆனால், அனைத்துக்கட்சித் தீர்மானத்தின்படி திமுக, காங்கிரஸ் உறுப்பினர்கள் பதவி விலகவில்லை. தமிழ்நாட்டுக்கு வந்து கருணாநிதியை சந்தித்த அப்போதைய வெளியுறவுத்துறை அமைச்சர் பிரணாப் முகர்ஜி போரை நிறுத்துவது எங்கள் வேலையல்ல என்று சென்னையிலேயே பேட்டி கொடுத்தார்.

உச்சகட்ட நாடமாக காலை முதல் நண்பகல் வரை மெரினாவில் உண்ணாவிரதம் இருந்தார் கருணாநிதி. பின்னர் போர் நின்றுவிட்டது என்று உண்ணாவிரதத்தை நிறுத்திக்கொண்டார். போரை தற்காலிகமாக நிறுத்திக்கொண்டு அதையே தேர்தலில் பொய்யான வகையில் பிரச்சாரம் செய்து 2009 நாடாளுமன்றத் தேர்தலில் தமிழகத்தில் மூன்றில் இரண்டு பங்கு இடங்களை திமுக கூட்டணி வென்றது. ஆனால், தமிழ்நாட்டில் தேர்தல் முடிந்து இரண்டு நாட்களுக்குப் பிறகு மே 17, 18 ஆகிய தேதிகளில் முள்ளிவாய்க்காலில் மட்டும் நாற்பதாயிரத்துக்கும் மேற்பட்ட தமிழ் மக்கள் கொல்லப்பட்டதாக பின்னர் ஐநா மனித உரிமை ஆணையமே கூறியது. மொத்தமாக எண்பதாயிரம் முதல் ஒரு இலட்சத்துக்கும் மேற்பட்ட தமிழர்கள் கோரமாகக் கொல்லப்பட்டார்கள் என்றும் தமிழ்ப்பெண்கள் அனைவரும் சிங்கள ராணுவத்தால் கடுமையான பாலியல் வன்முறைக்கு ஆளாக்கப்பட்டு வெளியில் சொல்லமுடியாத வகையில் சித்ரவதை செய்யப்பட்டுக் கொல்லப்பட்டனர் என்பதை ஐநா ஆணையமே பின்னர் கூறியது.

இறுதிவரை திமுக மத்திய அரசில் இருந்து விலகவில்லை. 2009 தேர்தல் முடிந்தபின் மீண்டும் மத்திய அரசில் சேர்ந்தது. 2009-ல் திமுக பதவி விலகியிருந்தால் ஈழப்போரை மத்திய அரசு நிறுத்தியிருக்கும். அன்று தமிழர் படுகொலை நேரத்திலும் மத்திய அரசில் ஒட்டிக்கொண்டிருந்த திமுக இன்று அகாலிதளத்தை சுட்டிக்காட்டி முதலமைச்சர் பழனிசாமிக்கு இனிமேல் விவசாயி என்று கூறக்கூடாது என்று நிபந்தனை விதிக்கிறது. ‘தனக்கு வந்தா ரத்தம், அடுத்தவனுக்கு வந்தா தக்காளி சட்னி’ என்பதுதான் திமுகவின் அணுகுமுறையாக இருக்கிறது.