அதிமுக பெண் உறுப்பினரின் சேலையை பிடித்து இழுத்து அராஜகம் : திமுகவினருக்கு எடப்பாடி பழனிசாமி கடும் கண்டனம்..!!!
Author: Babu Lakshmanan22 October 2021, 8:29 pm
சென்னை : தென்காசி அருகே பஞ்சாயத்து துணைத் தலைவர் பதவிக்கான தேர்தலின் போது, அதிமுக பெண் உறுப்பினரின் சேலையை பிடித்து இழுத்த சம்பவத்திற்கு எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
தென்காசி மாவட்டம் புளியரை ஊராட்சி மன்ற துணைத்தலைவர் பதவிக்கு மறைமுக தேர்தல் இன்று நடந்தது. அப்போது அதிமுகவைச் சேர்ந்த வேட்பாளர் சரவணன் என்பவருக்கும், திமுகவைச் சேர்ந்த வேட்பாளர் குருமூர்த்தி என்பவருக்கும் இருவருக்கும் இடையே போட்டி நிலவியது. புளியரை ஊராட்சியில் அதிமுகவுக்கு 8 வார்டு உறுப்பினர்களும், திமுகவுக்கு 4 வார்டு உறுப்பினர்களும் உள்ளனர். பெரும்பான்மை இல்லாத நிலையில், துணைத் தலைவர் பதவி திமுகவுக்குத் தான் வழங்க வேண்டும் எனக் கூறி தகராறில் ஈடுபட்டதாக சொல்லப்படுகிறது.
தேர்தலின் போது வாக்களிக்கச் சென்ற அதிமுக உறுப்பினர்களை திமுகவினர் தடுத்து நிறுத்தியுள்ளனர். இதனால், அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து, இருகட்சிகளின் நிர்வாகிகளும் மோதிக் கொண்டனர். அப்போது, அதிமுக பெண் உறுப்பினரின் சேலையை திமுக பிரமுகர் ஒருவர் இழுத்ததாக கூறப்படுகிறது. இதனால், அங்கு பரபரப்பு உச்சத்தை எட்டியது. இதைத் தொடர்ந்து, துணைத் தலைவருக்கான தேர்தல் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டது.
பெரும்பான்மையே இல்லாத திமுக தேர்தலை நடத்த விடாமல் செய்வதாகவும், ஆளும் கட்சிக்கு ஆதரவாக தேர்தல் அதிகாரிகள் செயல்படுவாகவும் கூறி கடையநல்லூர் தொகுதி அதிமுக சட்டப்பேரவை உறுப்பினர் கிருஷ்ணமுரளி குட்டியப்பா தலைமையில் அதிமுகவினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்த நிலையில், பெண் அதிமுக உறுப்பினரிடம் திமுகவினர் அத்துமீறி நடந்து கொண்டதற்கு எதிர்கட்சி தலைவரும், அதிமுக இணை ஒருங்கிணைப்பாளருமான எடப்பாடி பழனிசாமி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் விடுத்துள்ள டுவிட்டர் பதிவில், “இன்று ஊரக உள்ளாட்சி தலைவர், துணை தலைவர்களுக்கான மறைமுகத் தேர்தலில், வன்முறையை கட்டவிழ்த்தும், ஆளும் திமுக-க்கு வெற்றி வாய்ப்பு இல்லாத இடங்களில், தேர்தலை ஒத்தி வைத்தும், இதனை எதிர்த்த கழக தொண்டர்கள் மற்றும் முன்னாள் அமைச்சர் திரு.எம்.ஆர். விஜயபாஸ்கர் அவர்களை கைது செய்தும்,அநாகரீகத்தின் உச்சகட்டமாக தென்காசி மாவட்டம், புளியரை ஊராட்சி ஒன்றியத்தில் வாக்களிக்கச் சென்ற கழக பெண் கவுன்சிலரை, தாய்குலமே முகம் சுழிக்குமாறு நடந்து கொண்ட திமுகவினரையும், இந்த ஜனநாயக படுகொலையை வேடிக்கை பார்க்கும் மாநில தேர்தல் ஆணையத்தையும் வன்மையாக கண்டிக்கிறேன்
உயர்நீதிமன்ற உத்தரவுபடி தேர்தல் பணி செய்யாமல், தவறிழைத்த அதிகாரிகள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரிக்கிறேன்,” எனத் தெரிவித்தார்.
0
0