அதிமுக அலுவலகத்திற்கு சீல்… கூடுதல் போலீஸ் பாதுகாப்பு : இபிஎஸ், ஓபிஎஸ் வழக்கு குறித்து உயர்நீதிமன்றம் கருத்து!!

Author: Udayachandran RadhaKrishnan
13 July 2022, 12:13 pm
Admk Office Seal - Updatenews360
Quick Share

அதிமுக தலைமை அலுவலகத்திற்கு சீல் வைக்கப்பட்ட விவகாரம் தொடர்பான வழக்குகளை தலைமை நீதிபதி ஒப்புதல் பெற்ற பின்பே விசாரிக்கப்படும் என நீதிபதி தெரிவித்துள்ளார்.

அதிமுக பொதுக்குழு கூட்டம் சென்னை வானகரத்தில் உள்ள ஸ்ரீவாரு மண்டபத்தில் நேற்று முன்தினம் நடைபெற்றதற்கு இடையில், அதிமுக தலைமை அலுவலகம் அருகே இபிஎஸ் மற்றும் ஓபிஎஸ் ஆதரவாளர்களுக்கு இடையே கடும் மோதல் ஏற்பட்டது. இதனால் அப்பகுதியில் பெரும் பதற்றம் நிலவியது.

இதனிடையே,அதிமுக தலைமை அலுவலகத்துக்குள் ஓபிஎஸ் அவரது ஆதரவாளர்களுடன் அத்துமீறி நுழைந்ததாக இபிஎஸ் தரப்பில் புகார் அளிக்கப்பட்டதன் அடிப்படையில் ராயப்பேட்டை காவல்நிலையத்தில் வழக்கு தொடுக்கப்பட்டது. இதனால்,பலத்த போலீஸ் பாதுகாப்புடன் சென்னை ராயப்பேட்டையிலுள்ள அதிமுக தலைமை அலுவலகத்திற்கு வருவாய்த்துறை அதிகாரிகள் சீல் வைத்தனர்.

இந்நிலையில், அதிமுக அலுவலகத்திற்கு வைக்கப்பட சீலை அகற்ற உத்தரவிடக்கோரி இபிஎஸ் மற்றும் ஓபிஎஸ் தரப்பு சென்னை உயர்நீதிமன்றத்தில் அவசர முறையீடு செய்யப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து, அதிமுக அலுவலக சீலை அகற்றும் முறையீட்டை இன்று விசாரிப்பதாக சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி தெரிவித்து இருந்தார்.

இந்த நிலையில், எடப்பாடி பழனிசாமி தரப்பில் வழக்கை அவசரமாக விசாரிக்க கோரிய நிலையில், இந்த வழக்குகளை தலைமை நீதிபதி ஒப்புதல் பெற்று வழக்கமான நடைமுறைப்படி விசாரணைக்கு வரும் என்று நீதிபதி சதீஷ்குமார் தெரிவித்து உள்ளார்.

இதனிடையே இருதரப்பு மோதல் காரணமாக, சென்னை, ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்திற்கு காவல்துறை கூடுதல் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. பாதுகாப்பு பணியில் ஈடுபடும் காவல்துறையினரின் எண்ணிக்கை 50-லிருந்து 150 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. மொத்தமாக நாள் ஒன்றுக்கு 450 காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். அவ்வை சண்முகம் சாலையில் 10க்கும் மேற்பட்ட காவல்துறை வாகனங்கள் ரோந்து பணிகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன.

Views: - 432

0

0