ஆட்சியில் பங்கு கேட்கும் பாமக, பாஜக : கூட்டணிக் கவலை இல்லாமல் தேர்தல் பணிகளில் வேகமெடுத்த அதிமுக !!

14 November 2020, 7:44 am
eps - updatenews360
Quick Share

சென்னை: 2019-ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணி அமைத்துப் போட்டியிட்ட பாஜகவும், பாமகவும், வரும் சட்டமன்றத் தேர்தலில் கூட்டணி சேருவதற்கு ஆட்சியில் பங்கு உள்ளிட்ட பல நிபந்தனைகளை விதிக்கும் சூழலில், கூட்டணியைப் பற்றிக் கவலைப்படாமல் அதிமுக தனது தேர்தல் பணிகளை வேகப்படுத்தியுள்ளது. அதிமுக தனித்த பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கும் என்று அமைச்சர் டி.ஜெயகுமார் அறிவித்த சில நாட்களில் தேர்தல் அறிக்கைக் குழுவையும், தேர்தல் பிரச்சாரக் குழுவையும் அதிமுக அமைத்துள்ளது.

எம்.ஜி.ஆர். அதிமுக தொடங்கிய காலம் முதலே கூட்டணிக் கட்சிகளை நம்பி அந்தக்கட்சி தேர்தலை சந்திப்பதில்லை. 1977-ஆம் ஆண்டு முதல்முதலாக தேர்தல் களத்தில் அடியெடுத்து வைத்தபோதே 200 சட்டமன்றத் தொகுதிகளில் அந்தக்கட்சி போட்டியிட்டு ஆட்சியைக் கைப்பற்றியது. கூட்டணிக்கட்சிகளான மார்க்ஸிஸ்ட் கட்சிக்கு இருபது இடங்களே தரப்பட்டன. 1980-ஆம் ஆண்டும் பழ.நெடுமாறன், குமரி ஆனந்தன், இடதுசாரிகள் போன்ற சிறிய கட்சிகளுடன் கூட்டணி சேர்ந்து வலிமையான திமுக-காங்கிரஸ் அணியை மீண்டும் வீழ்த்தியது. அதிமுக இரண்டாக உடைந்தபின் 1989-ஆம் நடந்த சட்டமன்றத் தேர்தலில் முதல்முதலாக ஜெ.ஜெயலலிதா தலைமையை ஏற்ற அதிமுக 196 தொகுதிகளில் நம்பிக்கையுடன் களம் கண்டது.

2011-ஆம் ஆண்டு கூட்டணிப் பேச்சுகளில் அதிமுகவுடன் பேசிய கட்சிகள் அதிக இடங்கள் கேட்டதால் கடும் இழுபறி ஏற்பட்டது. பல பிரச்சினைகளுக்குப் பின் தொகுதி ஒதுக்கீடு நடைபெற்றது. இதனால், 2014 நாடாளுமன்றத் தேர்தலில் தனித்துப் போட்டியிடுவது என்று ஜெயலலிதா முடிவு செய்தார். 37 நாடாளுமன்றத் தொகுதிகளில் வென்று அதிமுக சாதனை படைத்தது. தொடர்ந்து 2016-ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலிலும் 234 தொகுதிகளில் போட்டியிட்டு ஆட்சியைப் பிடித்து சாதனை செய்தது அதிமுக.

2019-ஆம் ஆண்டு நடந்த நாடாளுமன்றத் தேர்தலில் பாமக, பாஜக, தேமுதிக, தமாக ஆகிய கட்சிகளுடன் அதிமுக கூட்டணி சேர்ந்தது. அடுத்த ஆண்டு நடைபெறவிருக்கும் சட்டமன்றத் தேர்தலில் கூட்டணி அமைக்க பல நிபந்தனைகளை இந்தக்கட்சிகள் விதித்து வருகின்றன.

பாமகவுக்கு ஆட்சியில் பங்கு வேண்டும் என்றும், அந்தக்கட்சியின் இளைஞர் அணித்தலைவர் அன்புமணிக்கு துணை முதல்வர் பதவிதர வேண்டும் என்று அக்கட்சியின் தலைவர் தீரன் தெரிவித்துள்ளார். தேமுதிக தனித்துப்போட்டியிடத் தயாராக இருக்கிறது என்றும், விஜய்காந்தை மீண்டும் முதல்வர் வேட்பாளராக நிறுத்துவோம் என்றும் பிரேமலதா பேசிவருகிறார்.

தமிழ்நாட்டில் அடுத்த ஆட்சியில் பாஜக பங்கேற்கும் என்றும் பாஜக கைகாட்டும் ஒருவரே முதல்வர் ஆவார் என்றும் பாஜக மாநிலத் தலைவர் எல்.முருகன் பேசிவருகிறார். தமிழ்நாடு ஆட்சியில் பாஜக பங்குவகிக்கும் என்று பாஜக முன்னாள் தேசிய செயலாளர் எச்.ராஜாவும் பேசியுள்ளார். அதிமுகவின் முதல்வர் வேட்பாளராக முதல்வர் எடப்பாடி பழனிசாமியை கட்சித்தலைவர்கள் ஒருமனதாக அறிவித்துள்ள நிலையில் கூட்டணியில் முதல்வர் வேட்பாளரை பாஜகவின் மத்திய தலைமை முடிவு செய்யும் என்று முருகன் பேசிவருகிறார். எடப்பாடி பழனிசாமியை முதல்வர் வேட்பாளராக ஏற்குக் கட்சிகளே அதிமுகவுடன் கூட்டணி சேரலாம் என்று அதிமுக சார்பில் உறுதியுடன் கூறப்பட்டுள்ளது.

தற்போது பாஜகவின் வேல்யாத்திரைக்கு தமிழக அரசு அனுமதி கொடுக்காததைக் கண்டித்து பாஜக தலைவர்கள் பேசிவருகிறார்கள். நீதிமன்ற அனுமதியும், அரசின் அனுமதியும் இல்லாமல் யாத்திரை நடக்கும் என்று முருகன் தெரிவித்துள்ளார். மத்திய அமைச்சர்கள் இந்த சட்டவிரோத யாத்திரையில் பங்கேற்பார்கள் என்றும் அவர் கூறியுள்ளார். ஆனால், அதிமுகவுடன் கூட்டணியில் இல்லை என்று கூறவும் பாஜக தலைவர்கள் மறுக்கிறார்கள். தேர்தல் நேரத்தில்தான் கூட்டணி குறித்து பேசப்படும் என்று முதல்வர் பழனிசாமி ஏற்கனவே கூறியுள்ளார்.

இந்த நிலையில் அதிமுகவின் தேர்தல் குழுக்கள் அமைக்கப்பட்டிருப்பது பாமக, பாஜக, தேமுதிக போன்ற கட்சிகளின் நிபந்தனைகள் பற்றியும் நடவடிக்கைகள் பற்றியும் கவலையில்லை என்பதை உணர்த்துவதாக அமைகிறது. எடப்பாடி பழனிசாமியை முதல்வர் வேட்பாளராக ஏற்று தங்களில் வலிமைக்கேற்ற வகையில் தொகுதிகளைப் பெற்றுக்கொள்ளும் கட்சிகள் மட்டும் அதிமுக அணியில் இடம்பிடிக்கும் என்று தெரிகிறது.

TN_CM_EPS_UpdateNews360

தனித்துப்போட்டியிடுவதாலோ மூன்றாவது அணி அமைப்பதாலோ தமிழ்நாட்டில் ஒரு இடம் கூட வெல்ல முடியாது என்ற கள யதார்த்தம் புரிந்த பாஜக, பாமக, தேமுதிக தொண்டர்கள் வரும் தேர்தலில் தனித்துவிடப்படுவோமோ என்ற அச்சத்தில் இருக்கின்றனர். அதிமுகவின் துணிச்சலான நடவடிக்கைகள் அவர்களின் வயிற்றில் புளியைக்கரைத்துவருகிறது.

Views: - 24

0

0