ஆடிட்டருக்கு அமித்ஷா விட்ட ‘டோஸ்’ : அடங்கி ஒடுங்கிய அமமுக தினகரன்!!

5 March 2021, 7:17 pm
dinakaran - Amit shah - updatenews360
Quick Share

இல்லாத ஒன்றின் மீது பிம்பத்தை கட்டமைப்பது, பிரமாண்டம் போல் மாயத்தோற்றத்தை உருவாக்குவது இன்று உலகம் முழுவதும் அரசியலில் ஒரு பெரும் கலையாகவே மாறியுள்ளது. இதைத்தான் ஆங்கிலத்தில் அழகாக, சுருக்கமாக ‘செட்டப்’, ‘பில்டப்’ என்கிறார்கள். ஜனநாயக நாடுகளில் இது மிக மிக அதிகம். குறிப்பாக இந்தியா போன்ற 135 கோடி மக்கள் தொகை கொண்ட நாட்டில் இது அன்றாடம் நடக்கும் ஒரு சாதாரண நிகழ்வு.

அதுவும் தேர்தல் நேரத்தில் இந்த மாயத் தோற்றத்தை உருவாக்குவதையும், பிம்பத்தை கட்டமைப்பதையும் எல்லா அரசியல் கட்சிகளுமே சாதுர்யமாக கையாளுகின்றன. இதில் மயங்கி வாக்காளர்கள் தேர்தலில் தங்களுக்கே ஓட்டு போடவேண்டும் என்பதற்காக இந்த யுக்தியை அரசியல் கட்சிகள் கையாளுகின்றன. இதை தமிழக அரசியலில் கண்கூடாக பார்க்க முடிகிறது.

இந்த பிம்ப கட்டமைப்பு சில நேரம் எதிர்பார்த்த பலனைத் தராமல் ஏமாற்றத்தையும் கொடுத்து விடும்.

sasikala 2- updatenews360

சிறையிலிருந்து விடுதலையான சசிகலா சில நாட்கள் ஓய்வுக்கு பின் கடந்த மாதம் 8-ம் தேதி பெங்களூருவில் இருந்து புறப்பட்டு 23 மணி நேர பயணத்துக்கு பின்பு மறுநாள் சென்னை வந்தடைந்தார்.
அப்போது, வழி நெடுக அவருக்கு பல்லாயிரக்கணக்கானோர் திரண்டு வந்து உற்சாக வரவேற்பும் அளித்தனர். இது தமிழக அரசியலில் மாபெரும் திருப்பம் என்று சில தனியார் தொலைக்காட்சிகளும் பல மணி நேரம் நேரடி ஒளிபரப்பு செய்து தமிழ்நாட்டில் ஏதோ பிரளயமே நடந்து விட்டது போன்றதொரு தோற்றத்தை ஏற்படுத்தின.

அதேநேரம் சசிகலா விடுதலை ஆவதற்கு முன்பிருந்தே அவருக்கு தமிழகத்தில் மிகப்பெரிய செல்வாக்கு இருக்கிறது என்று பாஜக தலைவர்கள் ஒரு சிலரிடம், அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன், ஒரு தோற்றத்தை ஏற்படுத்தி வைத்திருந்தார். குறிப்பாக அக்கட்சியில் உள்ள ஒரு பிரபல ஆடிட்டரிடம் பெருத்த நம்பிக்கையை அவர் ஏற்படுத்தினார்.

“தமிழகத்தின் டெல்டா மற்றும் தென் மாவட்டங்களில் சசிகலாவுக்கு பெரும் செல்வாக்கு உள்ளது. அவர், 84 தொகுதிகளில் தாக்கத்தை ஏற்படுத்துவார். இதனால், அமமுகவுக்கு கணிசமான வாக்குகள் கிடைக்கும். இப்படி ஓட்டுகள் சிதைந்தால் அது திமுகவுக்கு சாதகமாக அமையும். அதனால், அதிமுகவையும், அமமுகவையும் ஒன்றாக இணைத்தால் மட்டுமே திமுகவை வீழ்த்த முடியும். எனவே, எனக்காக டெல்லி பாஜக மேலிடத்திடம் தூது சென்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் இருவரிடமும் கடும் அழுத்தம் கொடுக்க வேண்டும்” என்று தொடர்ந்து வலியுறுத்தி வந்துள்ளார்.

Amit_Shah_UpdateNews360

திமுகவை ஆட்சிக்கு வரவிடாமல் தடுக்கவேண்டும் என்பதில் அந்த ஆடிட்டருக்கும் உடன்பாடுதான். அதனால் நேரடியாகவே மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, பாஜக தேசியத் தலைவர் ஜே.பி. நட்டா ஆகியோருடன் தொடர்பு கொண்டு அவருக்கு அழுத்தம் கொடுக்க ஆரம்பித்தார். அந்த ஆடிட்டரை தமிழகத்தின் அரசியல் சாணக்கியர் என்று ஒரு சிலர் கூறி வந்ததால் இவர் சொல்வது உண்மையாக இருக்குமோ என்று பாஜக மேலிடம் கொஞ்சம் நம்ப ஆரம்பித்தது.

ஏனென்றால் பாஜகவை பொறுத்தவரை, திமுக என்பது தேசிய நீரோட்டத்தில் இணைய விரும்பாத கட்சி, பிரதமர் மோடியையும் அவர் கொண்டு வரும் திட்டங்களையும் ஓட்டுக்காக கண்களை மூடிக்கொண்டு எதிர்க்கும் கட்சி, இந்து மத நம்பிக்கைகளை அவமதிக்கும் கட்சி என்ற கோணத்தில் பார்க்கிறது.

எனவேதான் தமிழகத்தில் திமுக ஆட்சிக்கு வருவதை பாஜக மேலிடம் விரும்பவில்லை என்ற பேச்சும் பரவலாக உள்ளது.

இந்த நிலையில்தான் டெல்லியில் கடந்த மாதம் பிரதமர் மோடியையும், உள்துறை அமைச்சர் அமித்ஷாவையும் சந்தித்து பேசிய பிறகு முதல்வர் எடப்பாடி பழனிசாமி, “அதிமுகவில் சசிகலாவை சேர்க்கும் பேச்சுக்கே இடமில்லை. அதற்கு 100 சதவீதம் வாய்ப்பும் கிடையாது. தினகரனுடன் சென்றவர்கள் எல்லாம் அதிமுகவுக்கு மீண்டும் திரும்பி விட்டனர். எனவே அவரையும் சேர்க்க மாட்டோம்” என்று திட்டவட்டமாக தெரிவித்தார்

ஆனாலும் ‘ஆடிட்டர் குரூப்’ டெல்லி பாஜக மேலிடத்துக்கு தொடர்ந்து பிரஷர் கொடுத்துக்கொண்டே இருந்தது.

“சசிகலா சிறையில் இருந்து விடுதலையான பின்பு அதிமுக இரண்டாக பிளவுபடும். அதிமுக தொண்டர்கள் அனைவரும் சசிகலா பின்னால் அணி திரள்வார்கள். ஆட்சி மட்டும்தான் எடப்பாடி பழனிச்சாமியிடம் இருக்கும். அதிமுகவை சசிகலா எளிதில் கைப்பற்றி தன் வசம் கொண்டு வந்துவிடுவார்” என்று டிடிவி தினகரன் தரப்பில் மீண்டும் தூபம் போடப்பட்டது.

gurumoorthi - ttv dinakaran - updatenews360

சரி, சசிகலா விடுதலையாகி சென்னை திரும்பிய பின்பு என்ன நடக்கிறது என்று பொறுத்திருந்து பார்ப்போம் என அமித்ஷா திட்டவட்டமாக ஆடிட்டரிடம் தெரிவித்துவிட்டார்.
இதைத்தொடர்ந்தே, டிடிவி தினகரன் தனது சித்திக்கு வரவேற்பளிக்க பெரும் கூட்டத்தை திரட்டினார், என்கிறார்கள்.

சசிகலாவும் இந்த கூட்டத்தை நம்பி சென்னை வந்த பின்பு, தான் மீண்டும் தீவிர அரசியலில் ஈடுபடப் போவதாக அறிவித்தார். மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் பிறந்த தினத்தன்று கூட அதே நிலைப்பாட்டில்தான் சசிகலா இருந்துள்ளார்.

ஆனால் அவர் பெங்களூருவில் இருந்து சென்னை திரும்பி நான்கு வாரங்கள் ஆகியும் கூட அதிமுகவிலிருந்து தொண்டர்களோ, நிர்வாகிகளோ, எம்எல்ஏக்களோ, அமைச்சர்களோ ஒருவர் கூட சசிகலா வசிக்கும் தி. நகர் வீட்டுப் பக்கம் எட்டிப் பார்க்கவில்லை. அப்போதுதான் அவருக்கு புரிந்தது, தனக்கு அளிக்கப்பட்டது, செட்டப் செய்த வரவேற்பு என்பது. இதுதான் அரசியலில் இருந்து ஓய்வு பெறுவதாக அவர் கடந்த 3-ம் தேதி திடீரென்று அறிவித்ததன் பின்னணி.

இதற்கிடையே, இந்த உண்மையை டெல்லி மேலிட பாஜகவும் உணர்ந்து கொண்டது. இந்த நிலையில்தான் அண்மையில் சென்னை வந்த அமித்ஷாவை, அந்த பிரபல ஆடிட்டர் தனியார் ஹோட்டலில் சந்தித்து சசிகலா விவகாரம், அதிமுக-அமமுக இணைப்பு குறித்து, தான் ஏற்கனவே வைத்த கோரிக்கையை நினைவுபடுத்தி இருக்கிறார்.

அதைக்கேட்ட அமித்ஷா, ரொம்பவும் கூலாக, “சரி பார்க்கலாம். சசிகலா சென்னை திரும்பியதும் அதிமுக இரண்டாக உடையும். சசிகலாவின் பின்னால் எம்எல்ஏக்களும், அமைச்சர்களும், அணிவகுப்பார்கள். கட்சியில் தொண்டர்களின் ஆதரவும் சசிகலாவுக்குத்தான் இருக்கிறது என்று சொன்னீர்கள். அவர் சென்னைக்கு திரும்பி 20 நாட்களுக்கு மேல் ஆகிவிட்டது. ஆனால் நீங்கள் சொன்னதுபோல் எதுவுமே நடக்கவில்லை. அப்படியென்றால் நீங்கள் முற்றிலும் தவறான கணிப்பை தானே என்னிடம் கூறியிருக்கிறீர்கள். அதுவும் யாரோ சொன்ன தகவலை உங்களுடைய கருத்தாக நீங்கள் பதிவு செய்திருக்கிறீர்கள். என்னை நீங்கள் ஏமாளியாக நினைத்து இருக்கிறீர்கள்.

என்று அந்த ஆடிட்டரை விளாசித் தள்ளி இருக்கிறார். ஆடிட்டர் ஒரு நிமிடம் ஆடித்தான் போனார். அதற்கு மேலும் அவர் அங்கே, இருப்பாரா என்ன? அமித்ஷாவின் கோபப் பார்வையை உணர்ந்துகொண்டு அடுத்த நிமிடமே இடத்தைக் காலி செய்து விட்டார், அந்த ஆடிட்டர்.

இந்தத் தகவல், சசிகலாவின் காதுகளில் விழ, அக்காள் மகன் தன்னை ஏமாற்றியதுடன், தனக்கு பெருத்த அவமானத்தையும் ஏற்படுத்திவிட்டார். வழக்கு போட்டு, தான் சிறை செல்ல காரணமாக இருந்த திமுகவை ஆட்சிக்கு கொண்டுவர தினகரன் மறைமுகமாக செயல்பட்டு வருகிறார் என்பதை உணர்ந்தே அரசியலுக்கு அவர் திடீர் முழுக்கு போட்டு விட்டதாக
சசிகலாவுக்கு நெருங்கிய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

‘கெட்டிக்காரன் புளுகு எட்டு நாளைக்கு’ என்பார்கள்.

அது சசிகலா விவகாரத்தில் ஓவர் பில்டப் கொடுத்த தினகரன் முகத்தில் நிறையவே கரியைப் பூசி விட்டது. இப்போது அவர் அடங்கி ஒடுங்கிப் போய் விட்டார் என அரசியல் விமர்சகர்கள் கூறுகிறார்கள்.

இதிலும் உண்மை இருப்பதாகவே தெரிகிறது!

Views: - 300

0

0