தொடர்ந்து வெளியேறும் முக்கிய புள்ளிகள்… எடப்பாடியாரின் அதிரடி… திணறும் டிடிவி தினகரன்..!!

Author: Babu Lakshmanan
22 July 2021, 6:37 pm
ttv dinakaran - eps - updatenews360
Quick Share

சென்னை : அமமுகவில் இருந்த முக்கிய புள்ளி அதிமுகவிற்கு தாவியதால் அக்கட்சியின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் அதிர்ச்சியில் உள்ளார்.

நடந்து முடிந்த சட்டப்பேரவை தேர்தலே அமமுக கடைசி தேர்தலாக மாறி விடும் சூழல் தற்போது நிலவி வருகிறது. காரணம், தேர்தலில் அடைந்த படுதோல்வியும், தோல்விக்கு பிறகு கட்சியை டிடிவி தினகரன் கண்டு கொள்ளாததே ஆகும். தேர்தலில் வெற்றி பெற வேண்டும் என்பதை காட்டிலும், அதிமுகவை தோற்கடிக்கும் என்ற எண்ணத்திலேயே டிடிவி தினகரன் தீவிரம் காட்டி வந்தார்.

ttv dinkaran - updatenews360

அவர் நினைத்தது பழித்தாலும், அமமுக கட்சியோ இருக்கும் இடம் தெரியாமல் போகும் நிலைக்கு வந்து விட்டது. தேர்தலுக்கு செலவு செய்த பணத்தை சொன்னபடி டிடிவி தினகரன் தராமல் அலைக்கழிப்பது, மீண்டும் உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடுமாறு கூறி நெருக்கடி கொடுத்தால், இருக்கும் பணத்தையும் இழக்க வேண்டிய நிலை ஏற்படும் என்பதை அமமுக நிர்வாகிகள் நன்கு உணர்ந்து விட்டனர்.

எனவே, அடுத்த உத்தரவு வருவதற்குள் கூடாரத்தை காலி செய்வதே சரியானது என்பதை உணர்ந்து மாற்று கட்சிக்கும், தாய் கழகமான அதிமுகவுக்கும் நிர்வாகிகள் படையெடுக்கத் தொடங்கி விட்டனர்.

தினகரனால் தகுதி நீக்கம் செய்யப்பட்ட மாரியப்பன் கென்னடி, ஜெயந்தி பத்மநாதன், டிடிவி தினகரனின் வலது கரம் போல இருந்த முன்னாள் அமைச்சர் பாப்பிரெட்டிபட்டி பழனியப்பன், ராமநாதபுரத்தை சேர்ந்த முன்னாள் அமைச்சர் வ.து. நடராஜன், இவரது மகனும் ராமநாதபுரம் மாவட்டச் செயலாளராக இருந்த வ.து.ந. ஆனந்த் ஆகியோர் திமுகவில் ஐக்கியமாகிவிட்டனர்.

இதேபோல, திருவள்ளூர் கிழக்கு மாவட்ட அமமுக செயலாளர் பொன்ராஜா, மத்திய சென்னை மத்திய மவட்ட செயலாளர் சந்தான கிருஷ்ணன், வடசென்னை மத்திய மாவட்ட செயலாளர் லட்சுமி நாராயணன் உள்ளிட்டோர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்து அதிமுகவில் இணைந்தனர்.

நிர்வாகிகள் தொடர்ந்து வெளியேறி வரும் நிலையில், மற்றவர்களை என்ன சொல்லி இருக்க வைப்பது என்பது புரியாமல் தினகரன் திணறி வருகிறார்.

இந்த நிலையில், அமமுகவில் டிடிவி தினகரனின் அடுத்த நம்பகமான நபராக வலம் அக்கட்சியின் செய்தி தொடர்பாளரும், மாநில தகவல் தொழில்நுட்ப பிரிவு செயலாளருமான எம்.ஆர். ஜெமிலா இன்று அதிமுகவிற்கு தவியுள்ளார். எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் அதிமுகவில் இணைந்தார். அடுத்தடுத்து, அமமுக முக்கிய நிர்வாகிகள் அதிமுக, திமுகவில் இணைந்து வருவது டிடிவி.தினகரனை பெரும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.

Views: - 182

0

0