பெண்களின் இடுப்பு, மடிப்பு பற்றி பேசுபவருக்கு பாடநூல் நிறுவனத்தலைவர் பதவியா..? லியோனிக்கு அன்புமணி ராமதாஸ் எதிர்ப்பு

8 July 2021, 11:38 am
anbumani - leoni - updatenews360
Quick Share

பெண்களின் இடுப்பு, மடிப்பு பற்றி பேசுபவருக்கு புனிதமான தமிழ்நாடு பாடநூல் நிறுவனத் தலைவர் பதவி வழங்குவதா..? என்று பாமக இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

தமிழ்நாடு பாடநூல் நிறுவனத்தின் தலைவராக திண்டுக்கல் ஐ.லியோனியை நியமனம் செய்து முதலமைச்சர் ஸ்டாலின் நேற்று உத்தரவிட்டார். திண்டுக்கல் மாவட்டத்தைச் சார்ந்த திரு. திண்டுக்கல் ஐ. லியோனி அவர்கள், சிறந்த ஆசிரியர், மேடைப் பேச்சாளர், இலக்கியச் சொற்பொழிவாளர், நகைச்சுவைப் பட்டிமன்ற நடுவர் ஆகிய காரணங்களால் இந்தப் பொறுப்பு வழங்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டது.

இந்த நிலையில், தமிழ்நாடு பாடநூல் நிறுவனத் தலைவர் பதவி லியோனிக்கு வழங்கியதற்கு பாமக இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், “தமிழ்நாடு பாடநூல் நிறுவனம் மற்றும் கல்வியியல் பணிகள் கழகத்தின் தலைவராக திண்டுக்கல் ஐ.லியோனி நியமிக்கப்பட்டிருக்கிறார். பெண்களை இழிவுப்படுத்தி பேசுவதையே பிழைப்பாகக் கொண்ட ஒருவரை இந்த பதவியில் அமர்த்துவதை விட, அப்பதவியை மோசமாக அவமதிக்க முடியாது!

பெண்களின் இடுப்பு, மடிப்பு பற்றி பேசுபவருக்கு படிப்பு பற்றி என்ன தெரியும்? பாடநூல் நிறுவனத்தின் பணி அறிவை வளர்க்கும் பாடநூல்களை தயாரிப்பதாகும். லியோனி தலைமையில் தயாரிக்கப்படும் பாடநூல்களை படிக்கும் மாணவர்களின் கதி என்னவாகும்?

திண்டுக்கல் லியோனி சிறந்த ஆசிரியராம். அவரது கடந்த கால பேச்சுகளைக் கேட்டவர்கள் எவரும் இதை நம்ப மாட்டார்கள். பாடநூல் நிறுவனத் தலைவர் என்ற புனிதமான பதவியிலிருந்து லியோனியை நீக்கி விட்டு, தகுதியான கல்வியாளர் ஒருவரை அரசு அமர்த்த வேண்டும்!,” எனக் குறிப்பிட்டுள்ளார்.

Views: - 204

0

0