தேவர் சமாதியில் திருநீறை அங்கேயே போட்டுவிட்டு வரும் கட்சி எங்களுடையதல்ல… மதத்தை வைத்து அரசியல் செய்யும் இயக்கமும் பாஜக கிடையாது : அண்ணாமலை அதிரடி..!

Author: Babu Lakshmanan
3 January 2022, 8:38 am
Quick Share

கன்னியாகுமரி : மதத்தை வைத்து அரசியல் செய்யும் இயக்கம் பாஜக கிடையாது என்று தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கூறினார்.

கன்னியாகுமரி மாவட்டத்தில் சிறுபான்மையினர் பாஜகவில் இணையும் நிகழ்ச்சி நாகர்கோவிலில் நேற்று நடந்தது. நிகழ்ச்சிக்கு மாவட்ட பாஜக தலைவர் தர்மராஜ் தலைமை வகித்தார்.தமிழக சட்டமன்ற பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன், நாகர்கோவில் எம்எல்ஏ எம்.ஆர்.காந்தி, பொருளாளர் முத்துராமன், தேசிய சிறுபான்மை பிரிவு செயலாளர் வேலூர் இப்ராஹிம்,தோவாளை உள்நாட்டு மீனவர் கூட்டுறவு சங்க தலைவர் சகாயம் ஆகியோர் பேசினர்.

நிகழ்ச்சியில் தலைமை உரைநிகழ்த்திய மாநில பாஜக தலைவர் அண்ணாமலை பேசியதாவது :- 18 கோடி பேர் இருக்கக்கூடிய, ஜனநாயகம் இருக்கக்கூடிய, உலகின் மிகப்பெரிய கட்சி பா.ஜ.க. உறுப்பினர் அட்டையில் 8 முக்கிய கொள்கைகள் உள்ளன. அதில் மூன்றாவது கொள்கையான மதசார்பற்ற அரசை உருவாக்குவோம் என குறிப்பிட்டுள்ளோம். பா.ஜ.க மட்டும்தான் இதை உறுப்பினர் அட்டையில் பிரிண்ட் செய்துள்ளது. இரண்டு எம்.பி-க்கள் மட்டும் இருந்திருக்கிறோம். இன்று 303 எம்.பி-க்களுடன் பலமாக இருக்கிறோம். சுதந்திரத்துக்கு பிறகு காங்கிரசை கலைத்துவிடுங்கள் என காந்தி சொன்னார். ஆனால் காந்தியின் பேச்சை நிராகரித்து, மதவாத இயக்கமாக காங்கிரஸ் செயல்பட்டுக்கொண்டு இருக்கிறது. இரண்டு முறை எமெர்ஜென்சி கொண்டுவந்தது காங்கிரஸ். அதுபோல செக்யூலார் என்ற வார்த்தையை கொண்டு வந்தது காங்கிரஸ். 1970-ல் இருந்து ஒவ்வொரு மாநிலத்திலும் தோல்வி அடைந்ததால் முதல் வியூகமாக செக்யூலர் என்ற வார்த்தை மூலமாக இந்து அல்லாத மக்களை ஒன்று சேர்க்க கொண்டுவந்தது. ராகுல் கன்னியாகுமரி, கேரளா வந்தால் கிறிஸ்தவராகிவிடுவார். உ.பி ராஜஸ்தான் போனால் இந்துத்வா பற்றி பேசுவார். ஆனால் பா.ஜ.க மத சார்பற்ற அரசு கொண்டுவர வேண்டும் என்ற நோக்கம் கொண்ட கட்சி.

இந்துத்வா வாழ்வியல் முறை, மதத்தை சார்ந்தது அல்ல. சுவாமி விவேகானந்தர் 1893-ல் சிக்காக்கோவில் நடந்த அனைத்து மத தலைவர்களை கூட்டத்திற்கு அழைத்து பேசினார்கள். விவேகானந்தர் 18-வது பேச்சாளராக பேசும்போது என் அன்பான சகோதர சகோதரிகளே என பேசினார். அனைத்து மத மாநாட்டில் அவையில் நிசப்தம். எல்லா தண்ணீரும் கங்கையில் சேர்ந்து புனிதம் ஆகுவது போல இந்து வாழ்வியல் முறையில் அனைத்து மதமும் கலக்கிறது. உ.பி-யில் இஸ்லாமியர்களின் முதல் கட்சி பா.ஜ.க. ராகுலின் சொந்த தொகுதியான அமேதியிலே அவர் தோற்கடிக்கப்பட்டிருக்கிறார். இத்தனை காலமாக மதத்தை வைத்து அரசியல் செய்யும் காங்கிரசுக்கு சிறுபான்மையினர் ஓட்டு போடவில்லை. 20 ஆண்டுகளுக்கு பின்பு நம் நாட்டின் பிரதமர் போப் பிரான்சிசை சந்தித்து 20 நிமிட அப்பாயின்மெண்டில் 60 நிமிடம் பேசியிருக்கிறார். மோடிக்கு முன்பாக போப் ஜாண்பாலை சந்தித்தது அன்றைய பிரதமர் அடல்பிகாரி வாஜ்பாய். அனைத்து இஸ்லாமிய நாடுகளும் பிரதமருக்கு விருது வழங்குகிறது. 1947 பாகிஸ்தான் பிரிந்தபோது இஸ்லாமிய நாடாக அறிவித்துக்கொண்டது, ஆப்கானிஸ்தான், பங்களாதேஷ் இஸ்லாமிய நாடாக அறிவித்துக்கொண்டது. ஆனால் இந்தியா இன்னும் இந்து நாடாக அறிவித்துக்கொள்ளவில்லை. அந்தந்த நாட்டில் குடியுரிமை இல்லாத கிறிஸ்தவர்களுக்கு குடியுரிமை வழங்கும் சட்டம்தான் சி.ஏ.ஏ.

ஸ்டாலினை போல முத்து ராமலிங்க தேவர் சமாதிக்குச் சென்றுவிட்டு திருநீறை அங்கேயே விட்டுவிட்டு வரும் கட்சி அல்ல பா.ஜ.க. நாங்கள் எல்லா வழிபாட்டு தலங்களுக்கும் சென்று வருகிறோம்.

அமைச்சராக இருந்த பொன்.ராதாகிருஷ்ணன் 5 ஆண்டில் 40 ஆயிரம் கோடி திடங்களை கொண்டுவந்தார். அவர்கள் கொண்டு வந்த நான்குவழிச்சாலைத் திட்டம் மண் இல்லை என்ற காரணத்துக்காக கிடப்பில் போடும் நிலை உள்ளது. உங்களுக்கு பா.ஜ.க, பொன்னார் கொண்டுவதுவது வேண்டாம் என்றால் நீங்கள் கொண்டுவாங்க நாங்கள் வரவேற்கிறோம். ஆனால், குமரி எம்.பி பாராளுமன்றத்தில் தூங்கிக்கொண்டிருக்கிறார். 75 ஆண்டுகளாக இல்லாத மீன்வள அமைச்சகம் இல்லாமல் இருந்தது. ஆனால் பிரதமர் மோடி மீன்வளத்துறை அமைச்சகம் கொண்டுவந்து தமிழகத்தைச் சேர்ந்த எல்.முருகனை அமைச்சராக நியமித்துள்ளார். மத்திய சமத் யோஜனா திட்டத்தின் கீழ் ஒரு மீனவருக்கு 4500 ரூபாய் வங்கிக்கணக்கில் செலுத்துகிறார். சொந்தமாக பைபர் போட் வாங்கினால் 80 லட்சம் ரூபாய் மானியமாக கொடுக்கிறது இந்த அரசு. தமிழக மீனவர்களுக்கு இலங்கை கடற்படையால் எவ்வளவு பிரச்னை இருந்தது. 2014-க்கு பிறகு ஆளுமை மிகுந்த அரசு இந்தியா மீனவர் மீது கைவைத்தால் பதிலடி வேற மாதிரி இருக்கும் என இலங்கைக்கு தெரியும். 15 மீனவர்கள் பிடிக்கப்பட்டபோது அதில் 13 பேர் கிறிஸ்தவர்கள் 21 நாளில் அவர்கள் மீட்டுக்கொண்டு வந்தபோது பா.ஜ.க நேரில் சென்று வரவேற்றது. 69 மீனவர்கள் இலங்கை கடற்படையில் சிக்கியுள்ளனர். அவர்களை சேதாரம் இல்லாமல் மீட்டு வருவோம், என்றார்.

பின்னர் அண்ணாமலை அளித்த பேட்டியில், “ஒவ்வொரு மாநிலத்துக்கும் கட்டம் கட்டமாக பேரிடர் நிவாரண நிதி வழங்குகிறோம். டிசம்பர் 31-ம் தேதி 3331 கோடி ரூபாய் மே 2021 வரை நடந்த பேரிடருக்காக 6 மாநிலங்களுக்கு கொடுக்கப்பட்டுள்ளது. அதன் பிறகு நடந்த பேரிடர்களுக்கு அடுத்த கட்டத்தில் நிவாரணம் வழங்கப்படும். தமிழகத்துக்கு மத்திய அரசு 75 சதவீதம், மாநில அரசு 25 சதவீதமும் எஸ்.டி.ஆர்.எஃப் பண்ட் மூலம் பேரிடர் நிதி வழங்கப்படுகிறது. மாநில அரசு 300 கோடி ஒதுக்குவதற்கு முன்பு மத்திய அரசு வழங்கிவிட்டது.

பாரத பிரதமர் பயிர்காப்பீட்டு திட்டத்தில் டெல்டா பகுதியில் ஒரு விவசாயி கூட பணம் வரவில்லை என சொல்ல முடியாது. பிரதமர் மோடி வந்த பிறகு டெல்டா பகுதியில் 100 சதவீதம் பயிர்காப்பீட்டில் வருகிறது. எங்களை பொறுத்தவரை கூட்டணி இல்லை என்பது பிரச்னை இல்லை பார்மலா ஃபேஸ்தான்.

சேகர்பாபு அவர்களுக்கு சொல்வது ஒன்றுதான் கண்ணாடி முன்பு நின்று சுய பரிசோதனை செய்துகொள்ள வேண்டும். பா.ஜ.க தமிழ வளர்ச்சிக்கு படிக்கல்லாக இருக்கிறது. ஆட்சியில் இல்லாதபோது தடுப்பூசி போடாதீர்கள் என்றார்கள். இப்போது டி.ஆர்.பாலு தமிழகத்துக்கு எல்லாம் கொடுக்கிறார்கள் என்கிறார். எனவே டி.ஆர்.பாலுவுக்கு போன்போட்டு பேசிவிட்டு சேகர்பாபு கருத்து சொல்ல வேண்டும். பா.ஜ.க-வின் 24 பேர் மீது தி.மு.கவினர் புகார் கொடுத்து கைது செய்கிறார்கள். தமிழக போலீஸுக்கு என கம்பீரம் இருக்கிறது. அந்த கம்பீரத்தை அரசியலுக்காக விட்டுக்கொடுக்காதீர்கள் என டி.ஜி.பி-யிடம் கேட்டுக்கொண்டேன். அதனால்தான் தமிழக போலீஸார் கடமை தவறாமல் செயல்படவேண்டும் என டி.ஜி.பி அறிக்கை வெளியிடுள்ளார். டி.ஜி.பி-யின் அறிக்கையை வரவேற்கிறேன்” என்றார்.

Views: - 554

0

0