அரசியல் பிரமுகர்களுக்கு ஐடி ரெய்டு மிரட்டல் விடும் அண்ணாமலை? தேர்தல் ஆணையத்தில் பரபரப்பு புகார்!!!

Author: Udayachandran RadhaKrishnan
26 April 2023, 8:50 am
Annamalai - Updatenews360
Quick Share

கர்நாடக சட்டசபைக்கு வருகிற 10-ந் தேதி தேர்தல் நடக்கிறது. இதற்கான பிரசாரம் தொடங்கிவிட்டது. கர்நாடக சட்டசபை தேர்தல் பாஜக இணை பொறுப்பாளராக தமிழக பாஜக தலைவரும், முன்னாள் ஐ.பி.எஸ். அதிகாரியுமான அண்ணாமலை செயல்பட்டு வருகிறார்.

இந்த நிலையில் கர்நாடக காங்கிரஸ் தலைமை செய்தித்தொடர்பாளர் நாகராஜ் கவுடா, தேர்தல் ஆணையத்தின் மாநில தலைமை தேர்தல் அதிகாரியிடம் ஒரு கடிதம் வழங்கியுள்ளார்.

அந்த கடிதத்தில், தமிழக பா.ஜனதா தலைவர் அண்ணாமலை கர்நாடக சட்டசபை தேர்தல் பா.ஜனதா நட்சத்திர பேச்சாளராகவும், சட்டசபை தேர்தல் கர்நாடக பா.ஜனதா இணை பொறுப்பாளராகவும் உள்ளார்.

அவர் கர்நாடகத்தில் முன்பு ஐ.பி.எஸ். அதிகாரியாக பணியாற்றி இருக்கிறார். பெங்களூரு நகர் உள்பட மாநிலத்தின் பல்வேறு மாவட்டங்களில் பல பொறுப்புகளில் அவர் பணியாற்றி உள்ளார்.

அவருக்கு கீழ் பணியாற்றிய போலீஸ் அதிகாரிகள் பலர் தேர்தல் பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்த செல்வாக்கை பயன்படுத்தி பாஜக வேட்பாளர்கள் பயனடைய போலீஸ் அதிகாரிகளுக்கு அவர் அழுத்தம் கொடுக்கிறார்.
மேலும் அவர் தனக்கு முன்பு இருந்த அதிகாரத்தை பயன்படுத்தி பா.ஜனதா பயன் அடைய முயற்சி மேற்கொள்ள வாய்ப்பு உள்ளது. மேலும் அவர் பா.ஜனதா வேட்பாளர்களுக்கு பணம் மற்றும் ஆட்களை மாநிலம் முழுவதும் அனுப்புவதாக தகவல் கிடைத்துள்ளது.

முன்னாள் போலீஸ் அதிகாரி என்பதால் அவரது வாகனத்தை அதிகாரிகள் சோதனை நடத்துவது இல்லை. மேலும் காங்கிரசின் சில தலைவர்களின் வீடுகளில் வருமான வரி சோதனை நடத்த வைப்பேன் என்று மிரட்டுவதாகவும் தகவல் வந்துள்ளது.

அவரின் செயல்பாடுகள் தேர்தலை நியாயமாகவும், நேர்மையாகவும் நடத்துவதை பாதிக்கும் வகையில் உள்ளது. அதனால் கர்நாடகத்தில் சட்டசபை தேர்தலை நியாயமாகவும், நேர்மையாகவும் நடத்துவதை உறுதி செய்ய அண்ணாமலை தேர்தல் பிரசாரம் செய்யவோ அல்லது கர்நாடகத்தில் தங்கவோ தடை விதிக்க வேண்டும். இவ்வாறு கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.

Views: - 313

0

0