அரியர் மாணவர்களின் தேர்ச்சிக்கு எதிராக அடுத்தடுத்து பாயும் வழக்குகள் : தி.மு.க. மீது கடுப்பில் மாணவர்கள்…!

8 September 2020, 1:48 pm
Madras_High_Court_UpdateNews360
Quick Share

சென்னை : அரியர் மாணவர்கள் தேர்வின்றி தேர்ச்சி என்ற அரசின் அறிவிப்பிற்கு எதிராக அடுத்தடுத்து வழக்குகள் தொடரப்பட்டு வருவதால், தி.மு.க. மீது மாணவர்கள் கடும் கோபத்தில் உள்ளனர்.

தமிழகத்தில் கொரோனா வைரஸ் காரணமாக பள்ளி, கல்லூரிகளுக்கு காலவரையின்றி விடுமுறை விடப்பட்டுள்ளது. தேர்வு நடத்த முடியாத சூழலால், 10 மற்றும் 11ம் வகுப்பு பொதுத்தேர்வு மாணவர்கள் உள்பட அனைத்து வகுப்பு மாணவர்களும் தேர்வின்றி தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கப்பட்டனர்.

அதேபோல, கல்லூரியில் இறுதியாண்டு மாணவர்களை தவிர்த்து பிற ஆண்டு மாணவர்களும் தேர்ச்சி பெற்றதாக அறிவிப்பு வெளியிட்டதுடன், அரியர் தேர்வுக்காக கட்டணத்தை செலுத்தியுள்ள அனைத்து மாணவர்களும் ஆல் பாஸ் என தமிழக அரசு அதிரடி உத்தரவை பிறப்பித்தது.

Cm edappadi - Updatenews360

இந்த அறிவிப்பை தொடர்ந்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு மாணவர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது. இதை உறுதிப்படுத்தும் விதமாக, சமூக வலைதளங்களில் முதலமைச்சரை பாராட்டி வீடியோக்களும், பதிவுகளும் வைரலாகின. அதேபோல, தமிழகம் முழுவதும் போஸ்டர்களும் அடித்து ஒட்டப்பட்டன.

சட்டசபை தேர்தலுக்கு இன்னும் 6 மாதங்களே உள்ள நிலையில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு மவுசு கூடியதை பொறுக்க முடியாத தி.மு.க. உள்ளிட்ட எதிர்கட்சிகள், அதனை முறியடிக்க பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருவதாக கூறப்படுகிறது.

இதனிடையே, தமிழக அரசின் அரியர் மாணவர்கள் தேர்ச்சி என்ற அறிவிப்பை ரத்து செய்யக் கோரி வழக்கறிஞர் ராம்குமார் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். மனுதாரர் தி.மு.க.வைச் சேர்ந்த பிரபல வழக்கறிஞரின் ஜுனியர் என்ற தகவல் சமூக வலைதளங்களில் பரவி வருவதால், தி.மு.க. மீது மாணவர்களுக்கு கடும் அதிருப்தி ஏற்பட்டது.

அரியர் தேர்வு விவகாரத்தில் முதலமைச்சர் பழனிசாமிக்கு மாணவர்கள் மத்தியில் மவுசு கூடியதால், தி.மு.க. மறைமுகமாக இந்த வேலையை செய்து வருவதாக மாணவர்கள் குற்றம்சாட்டி வருகின்றனர்.

இந்த நிலையில், அரியர் தேர்வு ரத்து செய்யப்பட்டு தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கப்பட்டதற்கு எதிராக மேலும் ஒரு வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த மனுவை அண்ணா பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் பாலகுருசாமி தொடர்ந்துள்ளார். சிண்டிகேட், செனட், கல்விக்குழு என அதிகாரமிக்க அமைப்புகளின் வழிகாட்டுதல்படிதான் தேர்வுகள் நடத்தி, மாணவர்களை வெற்றிபெற்றதாக அறிவிக்க முடியும் என அந்த மனுவில் குறிப்பிட்டுள்ளார்.

அரசிற்கு ஆதரவு கிளம்பியிருப்பதை முறியடிக்க வேண்டுமென்ற நோக்கில், தி.மு.க.தான் இதுபோன்ற நபர்களை தூண்டிவிட்டு, அரியர் மாணவர்களின் தேர்ச்சி முடிவிற்கு எதிராக அடுத்தடுத்து வழக்கு போடச் செய்வதாக மாணவர்கள் கொந்தளித்து வருகின்றனர்.

இந்த விவகாரத்தில் தி.மு.க.விற்கு பங்கு இருக்கிறது என்பது உறுதிபடாத நிலையில், அரியர் மாணவர்கள் தேர்ச்சி விவகாரத்திற்கு எதிராக மேற்கொள்ளப்படும் அனைத்து செயல்களும் தி.மு.க.வினருடையதுதான் என்ற எண்ணம் மாணவர்களிடையே உருவாகிவிட்டது.

Views: - 7

0

0