யார் முதல்வர் வேட்பாளர்? மல்லுக்கட்டும் கமல் -தினகரன் : 3வது அணி அமையும் முன்பே லக லக !!

1 March 2021, 2:14 pm
Kamal - ttv dinakaran - cover - updatenews360
Quick Share

திமுக தலைவர் ஸ்டாலின், நேரடியாக தன்னிடம் தொடர்பு கொள்ளாமல், மருமகன் சபரீசனை தூது அனுப்பி கூட்டணி குறித்து பேசியதால் கோபமடைந்து அக்கட்சியின் கூட்டணியில் இணைவதற்கு மறுத்த மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் தேர்தலில் தனித்துப் போட்டியிடுவதாகவும் அறிவித்தார். 2 வாரங்களுக்கு முன்பு சென்னையில் நடந்த அவரது கட்சியின் பொதுக்குழு கூட்டத்தில் முதல்வர் வேட்பாளராகவும் கமல் தேர்வும் செய்யப்பட்டார்.

தனது முடிவில் எந்த மாற்றமும் இல்லை என்று தெரிவித்து அவர் ஆன்லைன் மூலம் தனது கட்சியினரிடம் தேர்தலில் போட்டியிட விரும்புவர்களிடம் விருப்ப மனுக்களையும் பெற்றுள்ளார். இன்னொரு பக்கம் வலிமையான மூன்றாவது அணி அமைக்கும் முயற்சியிலும் கமல் தற்போது தீவிரமாக இறங்கி இருக்கிறார்.

ஏற்கனவே, நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர்
சீமான், அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் ஆகியோரும் மூன்றாவது அணி அமைக்க முஸ்தீபு காட்டி வந்தனர்.

dinakaran- updatenews360

இந்த நிலையில் திமுக அணியில் இருந்து வெளியேறிய பாரிவேந்தரின் இந்திய ஜனநாயக கட்சியும், அதிமுக அணியிலிருந்து விலகிய நடிகர் சரத்குமாரின் சமத்துவ மக்கள் கட்சியும் ஒரு புதிய அணியை உருவாக்க போவதாக அறிவித்தன.

இந்த அறிவிப்பை சரத்குமார் வெளியிடுவதற்கு முன்பாக கடந்த 24-ம் தேதி டிடிவி தினகரனின் சித்தி சசிகலாவை தனது மனைவி ‘சித்தி’ ராதிகாவுடன் சென்று தி.நகரில் உள்ள அவரின் வீட்டில் சந்தித்து உடல் நலம் விசாரித்தார். அதே நாளில் நாம் தமிழர் கட்சியின் சீமானும் சசிகலாவை சென்று பார்த்தார்.

இவர்களின் சந்திப்பின் பின்னணியில் யார் இருந்திருப்பார்கள் என்பதை சொல்லித் தெரிய வேண்டிய அவசியமில்லை.

அப்போதே தினகரன் தலைமையில் மூன்றாவது அணி அமைப்பதற்கான ஏற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. தனித்து போட்டியிடப் போவதாக அறிவித்து 50க்கும் மேற்பட்ட வேட்பாளர்களின் பெயர்களையும் வெளியிட்டு அவர்களை ஆதரித்து தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வரும் சீமான் இந்த திட்டத்திற்கு முதலில் மறுப்பு தெரிவித்திருக்கிறார்.

ஆனால், அவர் தனித்துப் போட்டியிடுவதில் எந்த பிரயோஜனமும் இல்லை. ஓட்டுகள்தான் சிதைந்துபோகும் என்று டிடிவி தினகரன், சீமானிடம் வற்புறுத்தி கூறி அவருடைய நிலைப்பாட்டை மாற்றி விட்டார் என்கிறார்கள்.

seeman 2 - updatenews360

மேலும் அமமுக கூட்டணியில் போட்டியிட உங்களுக்கு 23 இடங்கள் தருகிறோம் என்றும், வைட்டமின் ‘சி’ பற்றாக்குறையை போக்க சிறப்பான கவனிப்பும் உண்டு என்று உறுதி அளிக்கப்பட்டுள்ளது.

இதனால் திருப்தியடைந்த சீமான் டிடிவி தினகரன் கூட்டணியில் சேர்வதற்கு சம்மதம் தெரிவித்து விட்டதாக கூறப்படுகிறது.

திமுக கூட்டணியில் இருந்து வெளியேறிய இந்திய ஜனநாயக கட்சியின் தலைவர் பாரிவேந்தர் எம்பிக்கோ வேறொரு விதத்தில் சிக்கல். நாடாளுமன்றத்தில் அவர் திமுக எம்பியாக இருப்பதால் நேரடியாக கூட்டணி விவகாரங்களில் கலந்துகொண்டால் அவருடைய பதவிக்கு திமுக ஆப்பு வைத்து விடும் என்பதால் அவர் தனது மகன் ரவியிடம் கட்சியின் அத்தனை பொறுப்புகளையும் ஒப்படைத்துவிட்டு ஒதுங்கிக் கொண்டார். அதிமுக அணியில் இணைந்தால் திமுகவின் கோபத்திற்கு அதை விட ஆளாக நேரிடும் என்று கருதி பாரிவேந்தர் இந்த முடிவை எடுத்ததாகவும் கூறப்படுகிறது.

இதனால் ஒரே நேரத்தில் டிடிவி தினகரன் இந்திய ஜனநாயக கட்சியையும், சமத்துவ மக்கள் கட்சியையும் சாதுர்யமாக தன்பக்கம் வளைத்து விட்டார். மூன்று கட்சிகளை தன் பக்கம் கொண்டு வந்து விட்டதால் தினகரனுக்கு கொஞ்சம் தெம்பு வந்துள்ளது.

அடுத்து வளைத்துப்போட வேண்டியவர் மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் நடிகர் கமல்தான் என்று ஏற்கனவே தீர்மானித்து வைத்திருந்த தினகரன் அவருக்கும் நூல் விட்டார். மக்கள் நீதி மய்யத்திற்கு 67 சீட்கள் தருகிறோம் வாருங்கள் என்று நடிகர் சரத்குமார் மூலம் தூது விடப்பட்டது. அதைத்தொடர்ந்துதான் கமல்ஹாசனை சரத்குமார் சந்தித்து பேசி இருக்கிறார்.

Kamal - sarath kumar - updatenews360

அப்போது கமல் கட்சி போட்டியிடும் 67 தொகுதிகளுக்குமான மொத்த செலவையும் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகமே ஏற்றுக்கொள்ளும் என்றும் உறுதி கூறப்பட்டிருக்கிறது.

இதில், ஒரு பக்கம் கமலுக்கு திருப்திதான் என்றாலும் முதல்வர் வேட்பாளர் பற்றிய பேச்சு வந்தபோது சரத்குமார் வைத்த முக்கிய நிபந்தனை கமல்ஹாசனை மிகுந்த அதிர்ச்சிக்கும், கோபத்திற்கும் உள்ளாக்கியது. அதாவது முதல்வர் வேட்பாளராக டிடிவி தினகரன் இருப்பார் என்று சரத்குமார் கூறியிருக்கிறார்.

அதற்கு, கமல் இது நீங்கள் போடும் நிபந்தனையா? அல்லது தினகரன் சொல்லி அனுப்பியதா? என்று சற்று காட்டமாகவே கேட்டிருக்கிறார். இதனால் உடனடியாக போனில் டிடிவி தினகரனை தொடர்புகொண்ட சரத்குமார், கமல் இப்படி ஒரு கேள்வியை எழுப்பியது பற்றி கூறியிருக்கிறார்.

தினகரனோ, “நான் ஒரு கட்சியை ஆரம்பித்து எம்எல்ஏவாகவும் இருக்கிறேன். எனது கட்சி என்னை முதல்வர் வேட்பாளராகவும் தேர்வு செய்து விட்டது. அதிமுக தலைமைக்கும் கடும் சவால் விடுத்து வருகிறேன். அதனால் முதல்வர் பதவி வேட்பாளருக்கு குறைவாக வேறு எந்த பதவிக்கு போட்டியிட்டாலும் அது, என் மீதான கௌரவத்தை சீர்குலைத்துவிடும். அதனால் நான் தான் முதல்வர் வேட்பாளர் என்பதை உறுதியாக கமலிடம் தெரிவித்து விடுங்கள். சசிகலாவும் அதைத்தான் விரும்புகிறார்” என்று பிடிவாதம் காட்டி இருக்கிறார்.

இதை அப்படியே சொன்னால் நம்மீது கமல் கோபப்படுவார் என்று கருதிய சரத்குமார் முதல்வர் வேட்பாளர் பற்றி பின்னால் பேசி முடிவு செய்து கொள்ளலாம் என்று மழுப்பலாக கூறியிருக்கிறார். ஆனாலும் கமல் அதை ஏற்றுக்கொள்ளவில்லை. இதைத்தொடர்ந்தே, என்னுடன் எத்தனை கட்சிகள் வந்தாலும் நான் தான் முதல்வர் வேட்பாளர் என்பதில் எந்த மாற்றமும் இல்லை என்று கமல் திட்டவட்டமாக அறிவித்தார், என்கிறார்கள்.

அத்துடன் இனியும் அமைதி காத்தால் சரியல்ல என்று முடிவு செய்த கமல் 7-ம் தேதி மக்கள் நீதி மய்யத்தின் வேட்பாளர் பட்டியலை வெளியிடுவேன் என தடாலடியாக அறிவித்திருக்கிறார்.

kamal-pazha-karuppaiah - updatenews360

ஆனால் எப்படியும் கமல் தன் வழிக்கு வந்து விடுவார் என்று கணக்குப் போடும் டிடிவி தினகரன், அதற்கான முயற்சிகளை சசிகலா மூலம் தொடர்ந்து மேற்கொண்டு வருகிறார்.

இதுபற்றி கமலுக்கு நெருக்கமானவர்கள் கூறும்போது, “தினகரன் தன்னை ஒரு தலை சிறந்த அரசியல்வாதி போலவும், வியூகங்களை வகுப்பதில் வல்லவர் போலவும் காட்டிக் கொள்கிறார். கமல்ஹாசனை முதல்வர் வேட்பாளராக ஏற்காவிட்டால் தினகரனுக்குதான் நஷ்டம். அவருடைய எதிர்கால அரசியல் வாழ்க்கையே சூன்யமாகிப் போய்விடும் என்பதை அவர் உணர வேண்டும். உண்மையிலேயே அதிமுக, திமுகவுக்கு மாற்றாக ஒரு வலுவான அணியை உருவாக்க விரும்பினால், தமிழக மக்களுக்கு நன்கு அறிமுகமான கமல் தலைமையை அவர் ஏற்பதுதான் நல்லது” என்று குறிப்பிட்டார்.

அடடே…! 3-வது அணி அமையும் முன்பே முதல்வர் வேட்பாளர் யார் என்பதில் மல்லுக்கட்டா?…
பிரமாதம்!

Views: - 10

0

0