இளைய ரத்தத்தைப் பாய்ச்சி ஹாட்ரிக் வெற்றிக்காக களமிறங்கியுள்ள அதிமுக..! தொண்டர்கள் குஷி..!

11 September 2020, 6:20 pm
eps ops - updatenews360
Quick Share

சென்னை: தொடர்ச்சியாக 2 முறை சட்டமன்றத்தேர்தலில் வென்ற ஆளும் அதிமுக, மூன்றாவது முறையும் வெற்றி வாகை சூட மாநிலம் முழுவதும் கட்சிக்கு இளைய ரத்தம் பாய்ச்சத் திட்டம் வகுத்துள்ளது. தமிழ்நாடு முழுவதும் இளைஞர்களைச் சேர்த்து 65,000 பூத்களிலும் கட்சியை வலுப்படுத்தும் நடவடிக்கைகளைத் தொடங்கியுள்ளது.

தமிழ்நாடு சட்டமன்றத்தேர்தல் நடைபெற இன்னும் 8 மாதங்களே இருக்கும் நிலையில், தமிழக கட்சிகள் தேர்தலுக்குத் தயாராகி வருகின்றன. மாநிலத்தின் எதிர்க்கட்சியான திமுக தனது பொதுக்குழுவைக் கூட்டி முக்கிய பதவிகளுக்குத் தலைவர்களைத் தேர்ந்தெடுத்துள்ளது. ஆளுங்கட்சியான அதிமுகவும் தேர்தல் வேலைகளை முடுக்கி விட்டுள்ளது.

ADMK updatenews360

கட்சியின் இளைஞர் அணிக்குப் புதிய உறுப்பினர்களைச் சேர்க்கும் பணிகளைத் தொடங்கியுள்ள அதிமுக, தமிழ்நாட்டில் உள்ள 65,000 பூத்களிலும், ஒவ்வொரு பூத்துக்கும் 25 இளைஞர்களை சேர்க்க முடிவு செய்து, அதற்கான வேலைகளைத் தொடங்கியுள்ளது. புதிதாகச் சேர்ந்துள்ள இளைய உறுப்பினர்கள் 2021 சட்டமன்றத் தேர்தல் பணிகளில் தீவிரமாக ஈடுபடுத்தப்படுவார்கள்.

வீடு வீடாகச் சென்று மக்களை சந்தித்து வாக்கு கேட்கும் பணிகளில் இளைஞர்கள் பெரிய அளவில் ஈடுபடுத்தப்படுவார்கள். கட்சியின் முக்கிய தலைவர்களும், நிர்வாகிகளும் தேர்தல் பரப்புரை ஆற்றும்போது, புதிய உறுப்பினர்கள் முன்னின்று பணிகளை கவனிப்பார்கள் என்று கட்சி நிர்வாகிகள் தெரிவிக்கின்றனர்.

வரும் அக்டோபர் மாதத்துக்குள் 60 முதல் 70 சதவீத பணிகள் முடிக்கப்படும் என்றும், கட்சியின் அனைத்து தலைவர்களும், நிர்வாகிகளும் புதிய உறுப்பினர்கள் சேர்க்கும் பணியில் தீவிரமாகத் தற்போது ஈடுபட்டுள்ளனர். அதிமுகவின் தகவல் தொழில்நுட்ப அணியிலும் பல்வேறு நிலைகளில் 80,000 பேரை புதிதாகச் சேர்க்க கட்சி முடிவு செய்துள்ளது. பெரும்பாலான வேலைகளை தகவல் தொழில்நுட்பப் பிரிவும் முடித்துவிட்டதாகவும், அக்டோபர் மாதத்துக்குள் அனைத்துப் பணிகளும் முடிக்கப்படும் எனவும் தெரிகிறது. கட்சியின் அனைத்து மட்டத் தலைவர்களுக்கும் தகவல் தொழில்நுட்பப் பிரிவினருக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

edappadi-k-palaniswami-sirupanmaiyinar-updatenews360

ஒவ்வொரு பூத்திலும் ஒரு தகவல் தொழில்நுட்பப் பிரிவு உறுப்பினர் பொறுப்பில் இணைக்கப் படுவார் என்றும், அப்பகுதியின் மற்ற நிர்வாகிளும், பொறுப்பாளர்களும் அவர்களுடன் இணைந்து பணியாற்றுவார்கள் என்றும் கூறப்பட்டுள்ளது. கட்சியின் அனைத்து மட்டங்களிலும் தேர்தல் பிரச்சாரப் பணிகளை ஒருங்கிணைக்க தகவல் தொழில்நுட்பப் பிரிவில் இருந்து பொறுப்பாளர்கள் நியமிக்கப்படுவார்கள்.

புதிய உறுப்பினர்களை இணைப்பதோடு, கட்சியில் இருந்து பல்வேறு காலங்களில் விலகி நிற்கும் பழைய உறுப்பினர்களும் மீண்டும் அதிமுகவில் இணைக்கப்படுவார்கள். ஒவ்வொரு பகுதியிலும் உள்ள நிர்வாகிகளிடம் இது குறித்து அறிவுரை வழங்கப்பட்டுள்ளது. வரும் சட்டமன்றத் தேர்தலில் அவர்களின் அனுபவத்தையும் பயன்படுத்திக் கொள்ள நிர்வாகிகளுக்கும் ஆலோசனை தரப்பட்டுள்ளது.

திமுக தொடர்ந்து இரண்டுமுறை சட்டமன்றத் தேர்தலில் தோல்வி அடைந்துள்ள நிலையில், மூன்றாவது முறையாக அக்கட்சியைத் தோற்கடிப்பது கடினமான பணி என்றாலும், சாத்தியமானதுதான் என்று அதிமுகவினர் உறுதியாக நம்புகின்றனர். அந்த நம்பிக்கையை செயல்வடிவமாக்க அனைத்து திட்டங்களையும் தீட்டி அதிமுக தலைவர்கள் களத்தில் இறங்கியுள்ளதால் தொண்டர்கள் உற்சாகமாக உள்ளனர்.

Views: - 3

0

0