தனி சின்னத்தில்தான் போட்டி : வைகோ மீண்டும் போர்க்கொடி!!

4 February 2021, 7:16 pm
DMK - mdmk - cover - updatenews360
Quick Share

திமுக கூட்டணியில் நடக்கும் குடுமிப்பிடி சண்டை பற்றிய செய்திகள் இப்போதுதான் கொஞ்சம் கொஞ்சமாக வெளியே கசியத் தொடங்கி இருக்கிறது. குறிப்பாக, மதிமுக, விசிக கட்சிகளுக்கு திமுக ஒதுக்கும் தொகுதிகள் பற்றிய முட்டல், மோதல்தான் அது. கூட்டணிக்கு தலைமை வகிக்கும் திமுக மற்ற கட்சிகளை விட மதிமுக, விசிக இரண்டையும்தான் அதிகம் திணறடித்து வருகிறது.

இதில் ஒரு ஆச்சரியம் என்னவென்றால், இந்த இரு கட்சிகளும் 2 ஆண்டுகளுக்கு முன்பே திமுக தலைவர் ஸ்டாலினை முதல்வராக்க தீர்மானித்து முன்மொழிந்தவை. ஆனால் அந்த இரண்டு கட்சிகளும் தான் இப்போது திமுக கூட்டணியில் படாதபாடு பட்டு வருகின்றன.
இவை தலா 12 தொகுதிகளை திமுகவிடம் கேட்டுள்ளன.
ஆனால் மதிமுக, விசிக இரண்டுக்குமே தலா 6 தொகுதிகள்தான் ஒதுக்கப்படுமாம். இந்த இடங்களிலும் கூட திமுக சின்னத்தில்தான் இரு கட்சிகளும் போட்டியிடும்படி வற்புறுத்தப்பட்டுள்ளது.
தனி சின்னத்தில்தான் போட்டி என்றால் 2 இடங்களுக்கும் மேல் தர வாய்ப்பே கிடையாது என்று திமுக தலைவர் ஸ்டாலின் திட்டவட்டமாக கூறிவிட்டார், என்கின்றனர்.

Vaiko - stalin - updatenews360

திமுக தரும் இந்த கடும் நெருக்கடியில் மதிமுகவுக்கு கொஞ்சமும் உடன்பாடு இல்லை என்றே தோன்றுகிறது. இதற்கு பல்வேறு முக்கிய காரணங்கள் உண்டு. குறைந்தபட்சம் 12 தொகுதிகளில் போட்டியிட்டால்தான் தேர்தல் கமிஷன் தனி சின்னத்தையே ஒதுக்கும். இல்லையென்றால் சுயேச்சைகளுக்கு ஒதுக்கப்படும் சின்னத்தில்தான் மதிமுக போட்டியிட முடியும். இதனால்தான் கட்சியின் தனித்தன்மையை காக்க தனிச் சின்னத்தில் போட்டியிடுவோம் என்று மதிமுக பொதுச் செயலாளர் வைகோ அவ்வபோது கூறி வருகிறார்.

திமுக கூட்டணியில் கேட்கிற தொகுதிகள் கிடைக்காது என்பதை அவர் நன்றாகவே உணர்ந்தும் இருக்கிறார்.

அதனால்தான் என்னவோ மதிமுக மாவட்டச் செயலாளர்களிடையே வைகோ பேசும்போது “கட்சி நிர்வாகிகள் பதவியை எதிர்பார்க்காமல் கட்சியின் கொள்கையில் உறுதியாக இருக்க வேண்டும். எம்பி, எம்எல்ஏ, அமைச்சர் உள்ளிட்ட கனவுகளை எல்லாம் விட்டுவிடுங்கள்” என்று சூசகமாக குறிப்பிட்டார். அவருடைய இந்த பேச்சு தமிழக அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

Vaiko 04 updatenews360

அதேநேரம் திமுக தலைமையோ, கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் ஈரோடு தொகுதியில் மதிமுக வேட்பாளர் கணேசமூர்த்தி திமுக சின்னத்தில் நின்று வெற்றி பெற்றதை சுட்டிக்காட்டுகிறது. இங்கேதான் திமுகவுக்கும், மதிமுகவுக்கும் இடையே மோதல் வெடித்துள்ளது. அதன் தாக்கம் வெளியே தெரியாவிட்டாலும் கூட கூட்டணியில் பெரும் குழப்பம் உருவாகி இருப்பதென்னவோ மறுக்க முடியாத உண்மை.

இதுபற்றி மதிமுகவின் மூத்த நிர்வாகி ஒருவர் மனம் விட்டு பேசியபோது, “தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் தனி சின்னத்தில்தான் போட்டியிடப் போகிறோம். அதில் எந்த மாற்றமும் கிடையாது. கட்சி தொடங்கி 27 வருடங்கள் ஆகிவிட்டது. 1996 சட்டப்பேரவைத் தேர்தல் தவிர மற்ற எல்லா தேர்தல்களிலும் மதிமுக பம்பரம் சின்னத்திலேயே போட்டியிட்டு வந்துள்ளது. அதை பெறுவதற்கும் இப்போது பெரும் சிக்கல் எழுந்துள்ளது.
ஏனென்றால் கடந்த உள்ளாட்சி தேர்தலுடன் மதிமுகவிற்கு ஒதுக்கிய பம்பரம் சின்னம் முடிந்து போய்விட்டது. எனவே, குறைந்தபட்சம் 12 தொகுதிகளில் போட்டியிட்டால் மட்டுமே அதே சின்னத்தை மீண்டும் பெற முடியும்.

தனி சின்னத்தில் போட்டியிட்டால் மட்டுமே மதிமுகவுக்கு தேர்தல் கமிஷனின் அரசியல் அங்கீகாரமும் கிடைக்கும். மேலும் தனி சின்னத்தில் போட்டியிட்டால் வெற்றி வாய்ப்பு குறைந்துவிடும் என்று திமுக நினைக்கிறது. இது தவறான எண்ணம். கூட்டணி கட்சிகளின் பலத்துடன் தொகுதிகளை வென்று விட இயலும். திமுக கூட்டணியில் போட்டியிடுவது எங்களுக்கு எவ்வளவு முக்கியமோ, அதற்கு இணையானது எங்கள் கட்சிக்கு அரசியல் அங்கீகாரம் பெறுவதும் ஆகும்.

குறைந்த தொகுதிகளில் போட்டியிட்டால் கட்சிக்கு அங்கீகாரம் கிடைக்காமல் போய் விடும். 2006-ல் அதிமுக கூட்டணியில்
மதிமுகவுக்கு 35 தொகுதிகள் ஒதுக்கப்பட்டன. அதனால் தனி சின்னத்தில் நாங்கள் போட்டியிட விரும்புவது இயல்பானதுதான். கொடுக்கும் 6 தொகுதிகளையாவது திமுகவினர் வெற்றி வாய்ப்புள்ள தொகுதிகளாக கொடுப்பார்களா? என்பதும் தெரியாது. கடந்த முறை அதிமுக மிக அதிக ஓட்டு வித்தியாசத்தில் வென்ற தொகுதிகளையே ஒதுக்குவார்கள் என்பதும் நிச்சயம்” என்று அந்த நிர்வாகி கவலையுடன் தெரிவித்தார்.

Stalin Vaiko - Updatenews360

மதிமுக இப்படி உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட தயங்குவதற்கு இன்னொரு காரணமும் இருக்கிறது. திமுக தரும் நெருக்கடி காரணமாக அக்கட்சியின் சின்னத்திலேயே மதிமுக போட்டியிட்டால் வெற்றி பெறும் அத்தனை எம்எல்ஏக்களும் திமுக எம்எல்ஏக்களாகவே கருதப்படுவார்கள். இவர்கள் சட்டசபையில் தங்களைத் தனிமைப்படுத்தி கொண்டு பேசவும் முடியாது.
கட்சியின் நிலைப்பாட்டை வெளிப்படுத்துவதும் கடினம். அவர்கள் திமுக எம்எல்ஏவாக இருந்துகொண்டு மதிமுகவின் குரலாக பேசவும் இயலாது என்றும் மதிமுக கருதுகிறது.

ஆனால் திருமாவளவனின் விசிக இதில் மாறுபட்ட நிலைப்பாட்டை எடுத்துள்ளதாக தெரிகிறது. தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தையின்போது எத்தனை தொகுதிகள் கிடைக்கும் என்பதன் அடிப்படையில் திமுகவின் சின்னத்தில் போட்டியிடுவதா? இல்லை தனிச்சின்னத்தில் போட்டியிடுவதா? என்பதை விசிக முடிவு செய்யும் என்று தெரிகிறது.

திமுக கூட்டணியில் இந்த விவகாரம் இப்போதுதான் வீரியம் காணத் தொடங்கியுள்ளது. அது முற்றுமா? முடங்கிப் போகுமா? என்பது விரைவில் தெரிந்து விடும்.

congress - dmk - updatenews360

மதிமுகவுக்கும், விசிகவுக்கும் தனிச் சின்னத்தில் போட்டியிடுவதுதான் பிரச்சனை என்றால், தேசிய கட்சியான காங்கிரசுக்கு வேறொரு சிக்கல். திமுக இரட்டை இலக்கத்தில்தான் தொகுதிகளை ஒதுக்கும் என்றாலும் கூட, அது எத்தனை இடங்கள் என்பது தெரியாமல் அக்கட்சி பரிதவித்து வருகிறது.
கூட்டணிப் பேச்சு வார்த்தைக்கும் இதுவரை காங்கிரசை திமுக அழைக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

திமுக கூட்டணியில் தொகுதி பங்கீடு பேச்சு முடியும்போதுதான் மதிமுகவும், விசிகவும் சுதந்திரப் பறவைகளா? இல்லை கூண்டுக்கிளிகளா? என்பது தெரியவரும்.

Views: - 21

0

0