குறைந்த ஓட்டுகளில் வெற்றியை தீர்மானிக்கும் திகில் தொகுதிகள் : அரசியல் கட்சிகள் இப்போதே ‘திக் திக்’!!

19 April 2021, 2:08 pm
assembly election - updatenews360
Quick Share

கடந்த 6-ந்தேதி நடந்த தேர்தல் பிரபல தலைவர்கள் யாரும் உயிருடன் இல்லாத நிலையில் முடிந்திருப்பது, தமிழக வரலாற்றில் இதுவே முதல் முறை. இதற்கு முன்பு நடந்த 15 சட்டப்பேரவைத் தேர்தல்களிலும், ராஜாஜி,காமராஜர், அண்ணா, கருணாநிதி, எம்ஜிஆர், ஜெயலலிதா, மூப்பனார் என யாராவது ஒரு பெரும் தலைவர்கள் இருந்தனர்.

இதில் கருணாநிதியும், ஜெயலலிதாவும் மட்டுமே தொடர்ந்து 27 ஆண்டுகள் எதிரெதிர் துருவங்களாக இருந்து அதிக பட்சமாக 7 தேர்தல்களை சந்தித்துள்ளனர். 2016 இறுதியில் ஜெயலலிதாவும், 2018ல் கருணாநிதியும் மரணம் அடைந்து விட அவர்கள் இருவரும் இல்லாத நிலையில் நடைபெற்ற முதல் சட்டப்பேரவைத் தேர்தல் இதுவாகும். மிகப் பெரிய ஆளுமைகள் இல்லாததால் இந்தத் தேர்தலின் முடிவுகள் உண்மையிலேயே மிகவும் கணிக்க முடியாத ஒன்றாகத்தான் இருக்கிறது.

இதற்கு இன்னொரு முக்கிய காரணம், நடிகர் கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம், சீமானின் நாம் தமிழர் கட்சி, டிடிவி தினகரனின் அமமுக போன்றவையும் ஆட்சி கனவுடன் இந்தத் தேர்தலில் தீவிரமாக குதித்திருப்பதுதான்.

2006 தேர்தலில் திமுக கூட்டணி ஆட்சியை கைப்பற்றியபோது 3 தொகுதிகளில்தான் ஓட்டு வித்தியாசம் மிக மிகக் குறைவாக இருந்தது.

கோவை சிங்காநல்லூர் தொகுதியில் போட்டியிட்ட அதிமுக வேட்பாளர் சின்னசாமி 14 ஓட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். மதுரை கிழக்கில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் வேட்பாளர் நன்மாறன் 51 ஓட்டுகள் வித்தியாசத்திலும், வேலூர் மாவட்டம் அணைக்கட்டு தொகுதியில் அதிமுக முன்னாள் அமைச்சர் பாண்டுரங்கன் 53 ஓட்டுகள் வித்தியாசத்திலும் வெற்றி பெற்று இருந்தனர்.

அப்போது 1500 ஓட்டுக்கும் குறைவான வித்தியாசத்தில் வெற்றி பெற்றவர்களின் எண்ணிக்கை சொற்ப அளவுக்குத்தான் இருந்தது.

2011 சட்டப் பேரவைத் தேர்தலில் இது இன்னும் அதிகரித்தது. செங்கல்பட்டு, பழனி, செஞ்சி, கீழ்வேளூர், எழும்பூர், திருவிடைமருதூர், திருப்பத்தூர், திருவாடானை, திருச்செந்தூர், பாளையங்கோட்டை, கும்பகோணம் ஆகிய 11 தொகுதிகளிலும் வெற்றி பெற்றவருக்கும் வெற்றி வாய்ப்பை இழந்தவருக்கும் இடையேயான ஓட்டு வித்தியாசம் 1500-க்குள் இருந்தது. இதில் 8 இடங்களில் திமுகவும், 3 தொகுதிகளில் அதிமுகவும் வென்றிருந்தன.

2016 தேர்தலில் குறைவான ஓட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றவர்களின் எண்ணிக்கை அப்படியே மும்மடங்கு ஆனது.

admk leaf - updatenews360

அதாவது கடைசி சுற்று ஓட்டுகள் எண்ணி முடிக்கப்படும் வரை அதிமுக வேட்பாளர்களும் திமுக கூட்டணி வேட்பாளர்களும் ‘திக் திக்’ மனநிலையில்தான் இருந்தனர்.

பூந்தமல்லி, ஆவடி, பெரம்பூர் ராயபுரம், அண்ணா நகர், விருகம்பாக்கம், திருப்போரூர், செய்யூர், பர்கூர், திண்டிவனம், பரமத்திவேலூர், அந்தியூர் கவுண்டம்பாளையம், கிணத்துக்கடவு, மடத்துக்குளம், கரூர், சிதம்பரம், காட்டுமன்னார்கோவில், நன்னிலம், சீர்காழி, பேராவூரணி, விராலிமலை, திருமயம், மதுரை மேற்கு, கோவில்பட்டி, திருநெல்வேலி, ராதாபுரம் பாபநாசம், கடையநல்லூர் தென்காசி என 30 தொகுதிகளில் ஓட்டு வித்தியாசம் 2 ஆயிரத்துக்குள்தான் இருந்தது. இவற்றில் அதிமுக ஜெயித்த தொகுதிகள் மட்டும் 18. திமுக வென்றவை 12.

ராதாபுரம் தொகுதியில் அதிமுக வேட்பாளர் இன்பதுரை 49 ஓட்டு வித்தியாசத்தில் திமுக வேட்பாளர் அப்பாவுவை வென்று இருந்தார். காட்டுமன்னார்கோவிலில் அதிமுக வேட்பாளர் முருகுமாறன் மக்கள் நலக் கூட்டணி வேட்பாளர் திருமாவளவனை 87 ஓட்டு வித்தியாசத்தில் வீழ்த்தினார்.

2021 தேர்தலில் 5 முனைப் போட்டி நிலவுவதால், 2 ஆயிரம் ஓட்டுகளுக்குள் வெற்றிபெறும் வேட்பாளர்களின் எண்ணிக்கை 40 தொகுதிகளுக்கும் அதிகமாகலாம் என்று அரசியல் வல்லுனர்கள் கணிக்கின்றனர்.

Eps - stalin - updatenews360

நடந்து முடிந்த சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுக-திமுக கூட்டணி வேட்பாளர்கள் யாருக்கு வேண்டுமென்றாலும் சாதகமாக முடியலாம் என்று கணிக்கப்பட்டுள்ள 30 தொகுதிகள் ஆயிரம்விளக்கு, சைதாப்பேட்டை, செங்கல்பட்டு, குடியாத்தம், ஆம்பூர், சேந்தமங்கலம், தாராபுரம், திருப்பூர் தெற்கு, கவுண்டம்பாளையம், மடத்துக்குளம், கரூர், மண்ணச்சநல்லூர், கும்பகோணம் ஒரத்தநாடு, திருமயம், ஆலங்குடி, அறந்தாங்கி, சிவகங்கை, காரைக்குடி, சாத்தூர், சிவகாசி, கோவில்பட்டி, கம்பம், நாங்குநேரி, ராதாபுரம், கன்னியாகுமரி, நாகர்கோவில், கோவை தெற்கு, திருவெறும்பூர், திருவாடானை ஆகியவை.

இவற்றில் மக்கள் நீதி மய்யம் கோவை தெற்கு, திருவெறும்பூர் தொகுதிகளிலும், அமமுக காரைக்குடி, கோவில்பட்டி தொகுதிகளில் பலத்த போட்டியை ஏற்படுத்தி இருப்பதாக கூறப்படுகிறது.

இந்த சட்டப் பேரவைத் தேர்தலில் அதிமுக கூட்டணியில் பாமக, பாஜக, தமாகா ஆகியவை இணைந்து உள்ளன. கடந்த தேர்தலில் மக்கள் நல கூட்டணியில் இருந்த இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், மதிமுக, விசிக ஆகியவை திமுக அணியில் சேர்ந்திருக்கின்றன. இதனால் இந்த இரு அணிகளும் வலுவானதாக உள்ளன.

2011, 2016 தேர்தல்களில் குறைந்த ஓட்டு வித்தியாசத்தில் வெற்றியை நிர்ணயித்த தொகுதிகளையும் கணக்கில் சேர்த்துக் கொண்டால் தற்போதைய தேர்தலில் மொத்தம் 60 தொகுதிகள் வரை கடும் போட்டி நிலவும் என்றும், இவற்றில் யார் வென்றாலும் 2 ஆயிரம் ஓட்டுகள் வித்தியாசம்தான் இருக்கும் என்றும் கணிக்கப்பட்டுள்ளது.

மேலும் நாம்தமிழர் கட்சி, மக்கள் நீதி மையம், அமமுக ஆகியவை பிரிக்கும் வாக்குகளை பொறுத்து இந்த வாக்கு வித்தியாசம் இன்னும் குறையவும் செய்யலாம் என்கின்றனர். இதனால் இந்தத் தொகுதிகளில் போட்டியிடும் வேட்பாளர்கள் தற்போதே பெரும் பதற்றத்துடன்தான் இருப்பார்கள் என்பது நிச்சயம். இந்தத் தேர்தலில் ஒரு சுவாரசியமும் உள்ளது.

ராதாபுரம் தொகுதியில் 2016 தேர்தலில் அதிமுக வேட்பாளர் இன்ப துரையிடம் 49 ஓட்டு வித்தியாசத்தில் தோல்வி கண்ட திமுக வேட்பாளர் அப்பாவு அந்த வெற்றியை எதிர்த்து கோர்ட்டில் வழக்கும் தொடர்ந்தார். தனக்கு ஆதரவாக கிடைத்த தபால் ஓட்டுகளை எண்ணும்போது எனது கணக்கில் சேர்க்காமல், நிராகரித்துவிட்டனர் என்பது அவருடைய புகார். இந்த வழக்கு சுப்ரீம் கோர்ட்டில் நிலுவையிலும் உள்ளது.

இந்த நிலையில்தான் இதே தொகுதியில் அதிமுக சார்பில் இன்ப துரையும் திமுக சார்பில் அப்பாவுவும் மீண்டும் களம் காண்கிறார்கள். இந்த தேர்தலில் முன்பு எப்போதும் இருந்ததைவிட குறைந்த வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றவர்களின் எண்ணிக்கை அதிகமாக இருக்கும் என்றே சொல்லவேண்டும்.

Views: - 119

1

0