சட்டசபைக் கூட்டத் தொடருக்கு ஆயத்தமாகும் தமிழக அரசு..! எம்.எல்.ஏ.க்களின் வீடுகளுக்கே சென்று கொரோனா பரிசோதனை..!
11 September 2020, 1:59 pmசென்னை : வரும் செப்.,14ம் தேதி சட்டசபைக் கூட்டத் தொடர் கூட உள்ள நிலையில், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக எம்.எல்.ஏ.க்களின் வீடுகளுக்கே சுகாதாரத்துறை அதிகாரிகள் சென்று கொரோனா பரிசோதனை மேற்கொண்டு வருகின்றனர்.
தமிழக சட்டசபைக் கூட்டத் தொடர் வரும் 14ம் தேதி நடைபெறுகிறது. கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக, தகுந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தமிழக அரசு மேற்கொண்டு வருகிறது. உரிய சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும் என்பதற்காக, இந்த முறை கலைவாணர் அரங்கில் கூட்டத் தொடர் நடக்கிறது.
மேலும், கூட்டத் தொடரில் பங்கேற்கும் அனைத்து எம்.எல்.ஏ.க்களுக்கும் 72 மணி நேரத்திற்கு முன்னதாக தொற்று பரிசோதனை செய்ய வேண்டும் என முடிவு செய்யப்பட்டது.
அதன்படி, சென்னை பசுமை வழிச் சாலையில் உள்ள முதலமைச்சர், துணை முதலமைச்சர் மற்றும் அமைச்சர்களுக்கு அவர்களின் இல்லத்திற்கே சென்று சுகாதாரத்துறையினர் கொரோனா பரிசோதனை செய்தனர். இதேபோல, சட்டமன்ற உறுப்பினர்களுக்கும், ஐ.ஏ.எஸ். அதிகாரிகளுக்கும் மற்றும் பத்திரிக்கையாளர்களுக்கும் நேரடியாக சென்று பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.
கூட்டத்தொடரில் பங்கேற்பவர்களுக்கு வழங்க சட்டப்பேரவை செயலகம் சார்பில் 5,000 முகக்கவசங்கள் ஆர்டர் செய்யப்பட்டுள்ளது.
0
0