பக்ரீத்துக்காக விற்பனைக்கு வந்த ஆட்டின் விலை ரூ.3.50 லட்சமா..!!! லட்சங்களில் விலைபோக இதுதான் காரணமா..!

1 August 2020, 4:11 pm
goat 1 updatenews460
Quick Share

உத்தரபிரதேசம் : பக்ரீத் பண்டிகையின் குர்பானிக்காக விலைக்கு வந்த ஆட்டின் விலையை கேட்டு பொதுமக்கள் அதிர்ந்து போன சம்பவம் உத்தரபிரதேசத்தில் நிகழ்ந்துள்ளது.

கொரோனா வைரஸ் பாதிப்புக்கு மத்தியிலும் நாடு முழுவதும் பக்ரீத் பண்டிகை கொண்டாடப்பட்டு வருகிறது. தமிழகத்தில் இன்று தொடங்கிய பக்ரீத், வட இந்தியாவில் 3 நாட்கள் கொண்டாடப்படுகிறது. இந்தப் பண்டிகையின் போது, இறைவனின் பெயரில் ஆடுகள் குர்பானி கொடுக்கப்படுகின்றனர். இதற்காக, கால்நடைகளை வாங்க, கால்நடைகளை சந்தைகளில் இஸ்லாமியர்களின் கூட்டம் அலைமோதி வருகிறது.

பக்ரீத் பண்டிகைக்காகவே உத்தரபிரதேசம் மாநிலம் கான்பூரில் தற்காலிக சந்தை அமைக்கப்பட்டு, ஆடுகள் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன. இதில், பைஸ் கான் என்னும் இளைஞன் தான் வளர்த்து வந்த ஆடுகளை விற்பனைக்கு கொண்டு வந்தார். தில்ருபா, குரு, ரங்கீலா எனப் பெயரிடப்பட்டுள்ள இந்த ஆடுகள், அங்கு திரண்டிருந்தவர்களை மட்டுமில்லாமல், நாடு முழுவதும் உள்ள மக்களின் கவனத்தை ஈர்த்துள்ளன.

காரணம், அவரது ஆடுகளின் விலை ரூ.3.5 லட்சம் வரையில் நிர்ணயம் செய்ததுதான். சாதாரண ஆட்டிற்கு இவ்வளவு விலையா..? என பல தரப்பினரும் கேள்வி எழுப்பிய நிலையில், இது தொடர்பாக பிரபல நாளிதழுக்கு அவர் அளித்த பேட்டியில், “முந்திரி, பேரீச்சை போன்ற உலர்ந்த பழங்களையும், சத்துள்ள உணவுகளை மட்டுமே தனது ஆடுகளுக்கு வழங்கி வந்துள்ளேன். இதனால், இந்த ஆடுகளின் எடை, மற்ற ஆடுகளை விட மிகவும் அதிகமானதாகும்,” எனக் கூறியுள்ளார்.

ஏசியில் மட்டுமே வளர்க்கப்பட்ட தில்ரூபா 135 கிலோவும், குரு 110 கிலோவும், ரங்கீலா 150 கிலோவும் கொண்டுள்ளது. பார்ப்பதற்கே மிகவும் கம்பீரமாக இருக்கும் இந்த ஆடுகளை வாங்குவதற்கு வாடிக்கையாளர்களிடையே போட்டியும் நிலவி வந்ததுதான் ஆச்சர்யமாக இருந்துள்ளது. இந்த ஆடுகளை ரூ.3.5 லட்சத்திற்கு வாங்கிச் சென்ற வாடிக்கையாளர்கள் வருமான வரித்துறையினருக்கு பயந்து போய், பெயரை வெளியிடாமல் சென்றுள்ளனர்.

Views: - 0

0

0