கொரோனாவுக்குப் பின் வரும் முதல் தேர்தல் : ஊரடங்கு நடவடிக்கை பற்றி மக்களின் தீர்ப்பு நவம்பர் 10-ல் தெரியும்!!

26 September 2020, 8:32 pm
Bihar election - updatenews360
Quick Share

சென்னை: கொரோனாக் காலத்திலும் அதைத் தொடர்ந்து ஊரடங்குக் காலத்திலும் நாடு முழுவதும் பாதிப்பு ஏற்பட்ட பிறகு நடைபெறும் முதல் தேர்தல் என்பதால், பீகார் சட்டமன்றத் தேர்தல் இந்திய அரசியலில் கொரோனா ஏற்படுத்திய மாற்றங்களைக் காட்டுவதாக அமையும். எனவே, இந்தத் தேர்தல் பிரச்சாரத்தையும், முடிவுகளையும் நாடு முழுவதும் உள்ள அரசியல் நோக்கர்கள் ஆர்வத்துடன் எதிர்நோக்கி உள்ளனர்.

பீகார் மாநிலத்தில் முதலமைச்சர் நிதிஷ் குமார் தலைமையிலான ஆட்சி நடைபெற்று வருகிறது. இதன் ஆட்சிக்காலம் வரும் நவம்பர் 29ஆம் தேதியுடன் நிறைவு பெறுகிறது. அதற்குள் சட்டமன்ற தேர்தலை நடத்தி புதிய உறுப்பினர்களைத் தேர்வு செய்ய வேண்டியது அவசியம். கொரோனா நோய்த்தொற்று காரணமாக தேர்தலை தள்ளி வைக்க வேண்டும் என்று பல்வேறு அரசியல் கட்சிகளும் கோரிக்கை விடுத்தன. ஆனால் உரிய சுகாதார நடவடிக்கைகளுடன் தேர்தல் நடத்தி முடிக்கப்படும் என்று தேர்தல் ஆணையம் தெரிவித்ததுடன் நில்லாமல் தேர்தல் பிரச்சாரம், வாக்குப்பதிவு உள்ளிட்டவை தொடர்பாக உரிய வழிகாட்டு நெறிமுறைகளையும் வெளியிட்டது. மேலும், 243 உறுப்பினர்கள் கொண்ட பீகார் சட்டமன்றத்திற்கு தேர்தல் தேதியை இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

ec sunil arora - updatenews360

கொரோனாத் தொற்றுக்குப்பின் நாடு முழுவதும் ஊரடங்கு அறிவிக்கப்பட்டது. இதனால் பொதுப்போக்குவரத்தும் தனியார் போக்குவரத்தும் முடங்கியது. அனைத்து நிறுவனங்களும் வர்த்த நடவடிக்கைகளும் முடங்கின. கல்வி நிறுவனங்களும் கடைகளும் மூடப்பட்டன. பெருமளவு மக்கள் வேலை இழந்தனர். தொழில்கள் பாதிக்கப்பட்டன. வருமானம் இல்லாமல் மக்கள் தவித்தனர்.

பீகார் மாநிலத்தைச் சேர்ந்த தொழிலாளர்கள் பல்வேறு மாநிலங்களிலும் வேலை பார்த்துவந்ததால் திடீரென்று தமது சொந்த ஊருக்குச் செல்ல முடியாத சூழல் ஏற்பட்டது. இலட்சக்கணக்கான கூலித் தொழிலாளர்கள் நடந்தே செல்லும் நிலை உருவானதால் அவர்களுக்கு பெரும் இன்னல்கள் ஏற்பட்டன. ஆனால், அவர்கள் சொந்த மாநிலத்துக்குத் திரும்பிய பின்னர் பல்வேறு நலத்திட்டங்களை மத்திய, மாநில அரசுகள் அறிவித்துச் செயல்படுத்தின.

மத்திய அரசின் ஊரடங்கு குறித்தும் அதைத் தொடர்ந்து மத்திய அரசும் பீகார் அரசும் மேற்கொண்ட நடவடிக்கைகள் குறித்தும் மக்கள் என்ன நினைக்கிறார்கள் என்பதை அறியும் வாய்ப்பாக பீகார் சட்டமன்றத் தேர்தல் பார்க்கப்படுகிறது. மேலும், பீகார் தேர்தல் முடிவுகள் தேசிய கட்சிகளின் எதிர்காலத்தையும் அடுத்து தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் தேசியக்கட்சிகளின் வாய்ப்புகளையும் பாதிக்கும். அதுமட்டுமின்றி பீகாரில் கட்சிகளுக்குக் கிடைக்கப்போகும் இடங்கள் மாநிலங்களவையில் கட்சிகளின் வலிமையையும் மாற்றியமைக்கும்.

Nithish_UpdateNews360

கடந்த 2015ஆம் ஆண்டு நடந்த பீகார் சட்டமன்ற தேர்தலில் ஒருங்கிணைந்த ஜனதா தளக் கட்சியின் நிதிஷ்குமார், ராஷ்டிரிய ஜனதா தளம் மற்றும் காங்கிரஸ் ஆகிய கட்சிகளுடன் இணைந்து போட்டியிட்டார். இந்த மகாகத்பந்தன் கூட்டணி அபார வெற்றி பெற்று ஆட்சியைப் பிடித்தது. முதலமைச்சராக நிதிஷ் குமார் பதவியேற்றார். ஆனால் லாலு பிரசாத் யாதவ் குடும்பத்தார் மீதான ஊழல் குற்றச்சாட்டுகளால் அடுத்த இரண்டு ஆண்டுகளில் கூட்டணி உடைந்தது. இதனால் நிதிஷ்குமார் – லாலு இடையிலான 25 ஆண்டுகால நட்பில் விரிசல் ஏற்பட்டது. பின்னர் பாஜக உடன் கூட்டணி சேர்ந்து நிதிஷ்குமார் ஆட்சியைத் தக்க வைத்துக் கொண்டார்.

வரும் சட்டமன்றத் தேர்தலில் பாஜக-ஒருங்கிணைந்த ஜனதா தளக்கட்சியின் கூட்டணி தொடரும் என்று தெரிகிறது. கூட்டணிப் பேச்சுகளும் கிட்டத்தட்ட முடிந்துவிட்டன. லாலு பிரசாத் யாதவின் ராஷ்டிரீய ஜனதா தளத்துடன் காங்கிரஸ் கூட்டணி அமைக்கும். ஆளும் கூட்டணி வெற்றிபெற்றால் பாஜகவுக்கு அது மிகப்பெரிய பலமாக இருக்கும். எதிர்க்கட்சிகளின் வெற்றி கொரோனாவைக் கட்டுப்படுத்துவதிலும் ஊரடங்கை நடைமுறைப்படுத்தியதிலும் மத்திய அரசு தோல்வியடைந்துவிட்டது என்ற குற்றச்சாட்டையும் வலிமைப்படுத்தும்.

இதைத் தொடர்ந்து வரும் தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் பாஜகவுடனும் காங்கிரசுடனும் கூட்டணி அமைக்கும் கட்சிகளை பீகார் தேர்தல் முடிவுகள் பாதிக்கும். பீகாரில் வெற்றிபெற்றால் வலிமையான நிலையில் பாஜக தமிழகத்தில் களம் இறங்கும். கூட்டணி இட ஒதுக்கீடுகளிலும் கடுமையான பேரத்தை மேற்கொள்ளும். காங்கிரஸ் வெற்றிபெற்றாலும் இதுபோல்தான் நடந்துகொள்ளும். மாறாக, பாஜக தோல்வி அடைந்தால் தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் அதனுடன் சேர கட்சிகள் தயங்கும். அதன் பேர வலிமையும் பெருமளவு குறையும். காங்கிரஸ் தோல்வியும் அக்கட்சிக்கு இதே நிலையை ஏற்படுத்தும்.

மாநிலங்களவையில், பீகாருக்கு 16 உறுப்பினர்கள் உள்ளனர். பீகார் தேர்தல் முடிவைத் தொடர்ந்து ஒவ்வொரு மாநிலங்களவைத் தேர்தலிலும் ஒவ்வொரு கட்சிக்கும் கிடைக்கும் உறுப்பினர்கள் எண்ணிக்கை மாறும். பாஜக அரசு தற்போதைய நிலையில் அதிமுக அரசின் ஆதரவில்தான் முக்கிய சட்டங்களை மாநிலங்களவையில் நிறைவேற்றிவருகிறது. பீகார் தேர்தலில் பெருவெற்றி பெற்றால் இந்த நிலை மாறும். தோல்வி அடைந்தால் மாநிலங்களவையில் அதன் வலிமை மேலும் குறையும். அனைத்துக்கும் மேலாக பீகார் தேர்தல் முடிவுகள் நாடு முழுவதும் மக்கள் மனங்களிலும் அரசியல் கட்சிகளின் வியூகங்களிலும் பெரும் மாற்றத்தை ஏற்படுத்தும்.