முப்படை தளபதியின் மரணத்தைக் கொண்டாடும் தேசத் துரோகிகள்…! மனிதநேயம் மரித்துப் போய்விட்டதா…?

Author: Babu Lakshmanan
9 December 2021, 5:49 pm
bipin rawat - updatenews360 (2)
Quick Share

துயர சம்பவம்

இந்திய முப்படைகளின் தளபதியாக பதவி வகித்து வந்த 63 வயது பிபின் ராவத், அவருடைய மனைவி மதுலிகா மற்றும் ராணுவ அதிகாரிகள் 12 பேர் நீலகிரி மாவட்டம் வெலிங்டனில் உள்ள ராணுவ பயிற்சி கல்லூரியில் நடைபெற இருந்த ராணுவ அதிகாரிகளுக்கான கூட்டத்தில் பங்கேற்பதற்காக கோவை சூலூர் விமானப் படை தளத்திலிருந்து எம் ஐ-17 வி 5 ராணுவ ஹெலிகாப்டர் மூலம் பயணித்தனர்.

அந்த ஹெலிகாப்டர் குன்னூர் அருகே காட்டேரி பூங்கா என்ற இடத்தில் மலைப்பகுதியில் உள்ள பள்ளத்தாக்கில் விழுந்து நொறுங்கியது. அப்போது ஹெலிகாப்டர் தீப்பிடித்துக் கொண்டது. அதிலிருந்த பிபின் ராவத் அவருடைய மனைவி மதுலிகா, பிரிகேடியர் லிட்டெர், கர்னல் ஹரிந்தர்சிங் உள்ளிட்ட 13 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். 80 சதவீத தீக்காயத்துடன் மீட்கப்பட்ட குரூப் கேப்டன் வருண் சிங் கவலைக்கிடமான நிலையில் தொடர்ந்து ராணுவ ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார்.

நாட்டின் முதல் முப்படை தளபதியான பிபின் ராவத்தின் அகாலமரணம் நாட்டையே உலுக்கி இருக்கிறது. பெரும் துயரத்திலும் ஆழ்த்தியுள்ளது.

பாக்., கூட வருத்தம்

நமது ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் பிரதமர் மோடி உள்ளிட்ட பல தலைவர்களும் இந்தத் துயர சம்பவத்தால் பெரும் வேதனை அடைந்துள்ளனர். தேசப்பற்று கொண்ட மக்கள் அனைவரும் மரணமடைந்த ராணுவ அதிகாரிகளுக்கு, கண்ணீர் மல்க வீர வணக்கம் செலுத்தி அஞ்சலி செய்தும் வருகின்றனர். தமிழகத்தின் பல ஊர்களில் அவர்களுக்காக மோட்ச தீபமும் ஏற்றப்பட்டது.

அமெரிக்கா, ரஷ்யா, பிரான்ஸ், ஆஸ்திரேலியா, இஸ்ரேல், சிங்கப்பூர் உள்ளிட்ட பல நாடுகள் பிபின் ராவத்தின் திடீர் மறைவுக்கு அனுதாபம் தெரிவித்துள்ளன. நமது பரம எதிரியான பாகிஸ்தான் நாட்டின் ராணுவம் கூட இரங்கல் தெரிவித்து இருக்கிறது.

துயரத்திற்கு கொண்டாட்டம்

ஆனால் மனிதநேயம் மரித்துப் போய்விட்டது, என்பதைப் போல சமூக வலைத்தளங்களில், வீரமிக்க பெருமை மிகு, நமது முப்படைகளின் தளபதியின் மரணத்தை கொச்சைப்படுத்துவதுபோல் பலர் கருத்துகளைப் பதிவிட்டு, தங்களது முகத்தில் தாங்களே கரியை பூசிக்கொண்டு இருப்பதையும் காண முடிகிறது.

தங்களை அன்னிய சக்திகளின் கைக்கூலிகள், அடிமைகள் என்பதையும் அவர்கள் வெளிச்சம் போட்டு காட்டியிருக்கின்றனர்.

நூற்றுகணக்கான அந்தக் கயவர்களின் தீய எண்ணங்களை, வெளிப்படுத்தக் கூடாது என்று மனம் நினைத்தாலும் கூட அவற்றைப் படிக்கும்போது, நெஞ்சம் குமுறுகிறது, கொந்தளிக்கிறது.

அதில் சிலர் அனுதாபம் தெரிவிக்கும் போர்வையில், பசுத்தோல் போர்த்திய புலியாக தங்களது தீய சிந்தனைகளையும் கெட்ட நோக்கத்தையும் வெளிப்படுத்தியுள்ளனர்.

அதுவும் பிபின் ராவத் மரணமடைந்தது அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்ட சில நிமிடங்களில், இந்தப் பதிவுகளில் பெரும்பாலானவை போடப்பட்டுள்ளன என்பதுதான், இங்கே கவனிக்க வேண்டிய விஷயம்.

அவர்கள் யார், அவர்களது வலைத்தள முகவரி, பின்னணி என்ன என்பதை வெளியிடுவதெல்லாம்
நமது நோக்கமல்ல. என்றபோதிலும், அவர்கள் சமூக வலைத்தளங்களில் பதிவிட்ட, படுமோசமான கருத்துகள் சிலவற்றை இங்கே பார்ப்போம். அப்போதுதான் அவர்களின் சுயரூபம் வெளியே தெரியும்.

“சர்ச்சைக்கு உள்ளாகாத ராணுவ தளபதி விபத்தில் சிக்கி இறந்துட்டார்னா, அச்சச்சோன்னு
உச்சுக்கொட்டலாம், வீர வணக்கம் செலுத்தலாம். ஆனா தனக்கான ராணுவ வேலைய கவனிக்காம, ராணுவ ஆட்சி வந்து விடுமோனு பயப்படுகிற அளவுக்கு ஆளுங்கட்சிக்கு சொம்பா மாறின தளபதி விபத்தில் சிக்கினா மக்கள் அனுதாபப் படமாட்டார்கள்.

குடியுரிமைச் சட்டத்தை எதிர்த்து டெல்லியில் மாணவர்கள் போராடியபோது மாணவர்கள் தவறான திசையில் வழி நடத்தப்படுகின்றனர் என ராணுவ மரபை மீறி அரசியல் கருத்து கூறி ராணுவ அதிகாரிகள் அரசியல் தலைவர்கள் உள்ளிட்ட பலரின் விமர்சனத்துக்கு ஆளாகி அறியப்பட்டவர் பிபின் ராவத். ஆழ்ந்த இரங்கல்.

நண்பர்களே, அந்த ஓரினச்சேர்க்கையாளர் செத்துப் போனார்!

தெய்வீகத்தின் தலையீடு!

அப்பாவி மக்களை காக்கை குருவிகளைப்போல் கொன்று குவித்தபோது பல்லிளித்த ஜனநாயகம் இன்று நீலிக்கண்ணீர் வடிக்கிறது விதைப்பதே விளையும்…

தெரியும்!!! அந்தாளு நேத்து கொடி நாளுக்கு நிதி குடுக்குறதுபோல போஸ் குடுத்துட்டு இன்னைக்கு ஆள காலி பண்ண பார்த்திருக்கான் கேடிப் பைய மோதி!

இதில் ஒரு வேடிக்கை என்னவென்றால், பொதுவெளியில் தங்களது கருத்துகளை பதிவிட்ட இவர்களில் பலர், தங்கள் மீது தேசத்துரோக வழக்குகள் பதிவாகி விடுமோ?…என்று நடுநடுங்கி பயந்தாங்கொள்ளிகள் போல் தங்களின் பதிவை, பின்தொடர்பவர்கள் மட்டுமே பார்க்கும்படி உடனடியாக பிளாக் செய்தும் விட்டனர்.

இப்படி பல புல்லுருவிகள் தெரிவித்துள்ள கருத்துகள் ராணுவத்தின் முன்னாள் அதிகாரிகள், சமூக ஆர்வலர்களை கொந்தளிக்க வைத்திருக்கிறது.

புல்லுருவிகள் மீது நடவடிக்கை

ராணுவ மேஜர் மதன்குமார் இதுகுறித்து கூறும்போது, “நானும் இதுபோன்ற பல பதிவுகளை படித்தேன். இப்படியொரு துயரம் நடந்து விட்டதே என்று நாட்டு மக்களில் 99 சதவீதம் பேர் வேதனையில் மூழ்கி இருக்கும் நிலையில், இதுபோல் தேசத்திற்கு எதிராக கருத்துகளை பதிவிடும் புல்லுருவிகளை கண்டறிந்து அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவேண்டிய கட்டாயம், அவசியம் மத்திய அரசுக்கும், மாநில அரசுக்கும் உள்ளது.

தேசத்தில் வாழத் தகுதி இல்லாதவர்கள், தேசத்தை துண்டாடக் கூடிய சக்திகளுக்கு துணை போகக் கூடிய துரோகிகளை கண்டு களையெடுத்து வேட்டையாடும் தருணம் வந்துவிட்டது” என்று ஆவேசம் காட்டியுள்ளார்.

திமுக மீது விமர்சனம்

பிரபல அரசியல் விமர்சகரும், சமூக ஆர்வலருமான மாரிதாஸ் தனது ட்விட்டர் பக்கத்தில், “திக, திமுக ஆதரவாளர்கள் பலரும் ராணுவத்தளபதி விபத்தில் மரணம் அடைந்ததை கேலி செய்யும் விதமாக பதிவுகள் இடுவதும் சிரிப்புமாக emoji போடுவதை காண முடிகிறது. ஒவ்வொரு முறையும் இதைச் செய்கிறார்கள். பிரிவினைவாத சக்திகளுக்கு திமுக சிறந்த தேர்வாக இருந்து வருகிறது என்பது மறுக்க முடியாத உண்மை” என்று பதிவிட்டுள்ளார்.

சுந்தர் ராஜசோழன் என்னும் இன்னொரு சமூக ஆர்வலர், “ராணுவத்தின் மீதான காழ்ப்பு இந்த தேசத்தை பிளக்க முடியவில்லையே என்கிற வெறுப்பில் உதயமாவது. காவல்காரன் மீது என்றுமே கயவனுக்கு அதீத குரோதம் இருக்கும். அதிலும் அந்த கயவனுக்கு தன்னுடைய மாறுவேஷத்தில் அது மன நோயாகவே மாறி இருக்கும். ராணுவத்திற்கு எதிராக பிரச்சாரம் செய்பவர்களை ஈவிரக்கமில்லாமல் அரசு ஒடுக்கவேண்டும். இல்லையென்றால் மொத்த இந்தியாவும் சுடுகாடாக மாறும். இங்கிருக்கும் நடுநிலை கோமாளிகளுக்கு இருப்பது அறியாமை அல்ல. அவர்களை சூழ்ந்து இருப்பது கோழைத்தனமும், அயோக்கியத்தனமும்தான்” என்று குறிப்பிட்டிருக்கிறார்.

கருத்து சுதந்திரம் என்ற பெயரில், தேசத்துக்கு எதிராக அன்னியர்களுடன் ரகசியமாக கைகோர்த்து செயல்படும் தீய சக்திகளை சிறைக்கு அனுப்பி கம்பி எண்ண வைக்கவேண்டும் என்பதில் யாருக்கும் எந்த மாற்றுக் கருத்தும் இருக்கமுடியாது.

அதை மத்திய, மாநில அரசுகள் நிச்சயம் நிறைவேற்றும் என்று நம்புவோம்!

ஏனென்றால் தாய் நாட்டை கேலி செய்பவன், இந்த நாட்டிலேயே வாழத் தகுதியற்றவன் என்பதே சரி.

Views: - 274

0

0