பாஜக-16, அமமுக-12, பாமக-7, ஓபிஎஸ்-4 தொகுதி பங்கீடு?…பேச்சுவார்த்தை விறுவிறு!

Author: Udayachandran RadhaKrishnan
30 September 2023, 9:36 pm
BJP Alliance - Updatenews360
Quick Share

பாஜகவுடன் இனி ஒருபோதும் கூட்டணி இல்லை என்று அதிமுக அறிவித்த பின்பு தேசிய ஜனநாயக கூட்டணியில் பாமக, அமமுக, ஓபிஎஸ் அணி ஆகியவை கைகோர்த்து நாடாளுமன்ற தேர்தலை சந்திக்க ஆயத்தமாகிவிட்டன.

பாஜகவுடன் கூட்டணி இல்லை

அதுவும் அதிமுக துணை பொதுச் செயலாளர் கேபி முனுசாமி 2026 சட்டப்பேரவைத் தேர்தலிலும் பாஜகவுடன் கூட்டணி இல்லை என்று திட்டவட்டமாக அறிவித்த பின்பு இது இன்னும் வேகம் பிடித்துள்ளது.

அதிமுகவை சமாதானப்படுத்தி மீண்டும் பாஜக கூட்டணிக்குள் கொண்டு வந்து விடவேண்டும் என்ற பேச்சு டெல்லி அரசியல் வட்டாரத்தில் அடிபட்டு வந்த நிலையில்தான் இரு தினங்களுக்கு முன்பு அதற்கு கேபி முனுசாமி முற்றுப்புள்ளி வைத்தார்.

பாஜகவுடன் இணைந்த டிடிவி, ஓபிஎஸ்

அதேநாளில், “பாஜகவின் மத்திய தலைமை கடந்த ஒரு மாதமாக எங்களை தொடர்பு கொண்டு தினமும் பேசி வருகிறது. படிப்படியாக நல்ல நிகழ்வுகள் நடைபெறும். அவர்களுடன் நானும், டிடிவி தினகரனும் தொடர்பில் இருந்து வருகிறோம். தேர்தல் வரும்போது முறையாக பேச்சுவார்த்தை நடத்தி முடிவெடுக்கப்படும் என்று உறுதி கூறியிருக்கிறார்கள்” என இரு தினங்களுக்கு முன்பு ஓ பன்னீர்செல்வம் செய்தியாளர்களிடம் தெரிவித்தன் மூலம் பாஜக கூட்டணியில் அவருடைய ஆதரவாளர்களும், டிடிவி தினகரனும் இணைவது 100 சதவீதம் உறுதியாகிவிட்டது.

பாஜக கூட்டணியில் ஒரு போதும் சேர மாட்டோம் என்று ஓ பன்னீர்செல்வத்தின் அரசியல் ஆலோசகர் பண்ருட்டி ராமச்சந்திரன் சில வாரங்களுக்கு முன்பு கூறி இருந்தாலும் கூட அதிமுக விலகியதால் இனி இதைவிட வேறொரு நல்ல சந்தர்ப்பம் கிடைக்கவே கிடைக்காது. நமது பலத்தை நிரூபிக்க இதுதான் சரியான தருணம் என்பதை ஓபிஎஸ் உணர்ந்து சென்னை ஆடிட்டர் ஒருவர் மூலம் பேசி டெல்லி பாஜக தலைமையிடம் கூட்டணியை இறுதி செய்து விட்டதையும் புரிந்துகொள்ள முடிகிறது.

பாஜகவின் தேசிய தலைமை செப்டம்பர் 30-ம் தேதிக்குள் தமிழகத்தில் கூட்டணியை முடிவு செய்யவேண்டும் என்று தீர்மானித்து இருந்தாலும் கூட தற்போது அதை அக்டோபர் 3ம் தேதிக்கு மாநில பாஜக தள்ளி வைத்து இருக்கிறது

இந்தக் கூட்டத்தில்தான் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் யார் யார் இணைந்து போட்டிடுவதற்கான வாய்ப்புகள் உள்ளது என்பது தெரிய வரும்.
என்ற போதிலும் பாரிவேந்தரின் இந்திய ஜனநாயக கட்சி, ஏ சி சண்முகத்தின் புதிய நீதி கட்சி, டாக்டர் கிருஷ்ணசாமியின் புதிய தமிழகம் ஆகியவை பாஜகவின் பக்கம் நிற்கின்றன என்பது வெளிப்படையாகவே தெரிகிறது.

இந்த மூன்று கட்சி தலைவர்களிடமும் தமிழக பாஜகவின் மூத்த தலைவர்கள் வாயிலாக பேசி அண்ணாமலை உத்தரவாதம் பெற்றுவிட்டதாகவும் கூறப்படுகிறது. ஏற்கனவே டிடிவி தினகரனுடனும், ஓபிஎஸ்சுடனும் டெல்லி பாஜக மேலிடம் நேரடி தொடர்பில் இருப்பதால் அவர்கள் இருவர் குறித்தும் மாநில பாஜக தலைமைக்கு எவ்வித நெருக்கடியும் ஏற்பட வாய்ப்பு இல்லை.

பாமகவுக்கு ரூட் போட்ட பாஜக

அதேநேரம் டாக்டர் அன்புமணியை தலைவராக கொண்ட பாமகதான் தேசிய ஜனநாயக கூட்டணியில் இணைந்து போட்டியிடுவது பற்றி எந்த உறுதிமொழியையும் இதுவரை அளிக்கவில்லை. ஆனால் பாமக எப்போதுமே கடைசி நேரத்தில் யார் அதிக தொகுதிகளை ஒதுக்குகிறார்களோ, அவர்களுடன் கைகோர்த்து விடும் என்பது அரசியல் வட்டாரம் அறிந்த ஒன்று. அத்துடன் மாநிலங்களவை எம்பி ஒன்றையும் அக்கட்சி கேட்கும். அதை கொடுத்து விட்டால் பாமக திருப்தி அடைந்து கூட்டணியில் இணைந்துவிடும்.

விஜயகாந்தின் தேமுதிகவை கூட்டணியில் இணைத்துக் கொள்வது பற்றி இப்போதே அவசரம் காட்ட வேண்டாம் என்று தமிழக பாஜக கருதுகிறது. ஆனால் டெல்லி மேலிடமோ எந்த ஒரு சிறு கட்சியையும் கூட விட்டு விடக்கூடாது. 2014 தேர்தலில் தேமுதிக நமது கூட்டணியில்14 தொகுதிகளில் போட்டியிட்டு கணிசமான ஓட்டுகள் வாங்கியதை யாரும் மறந்து விடக்கூடாது. இப்போது அவர்களது வாக்கு சதவீதம் வேண்டுமானால் குறைந்து இருக்கலாம். என்ற போதிலும் அந்த கட்சியை குறைத்து மதிப்பிட கூடாது என்று தேசிய தலைமை கறார் காட்டுகிறது.

தொகுதிப் பங்கீடில் பாஜக சுறுசுறுப்பு

இந்த நிலையில்தான் தனது கூட்டணி கட்சிகளுடன் தொகுதி பங்கீட்டில் தமிழக பாஜக சுறுசுறுப்பு காட்டி வருகிறது. அதற்காக ரகசிய பேச்சு வார்த்தைகளும் நடந்து வருவதாக தெரிகிறது.

இதன்படி பாஜக-16, அமமுக-12, பாமக-7, ஓபிஎஸ்-4 என்று தொகுதிகளை பங்கீடு செய்து கொள்வது குறித்து பேச்சு நடக்கிறது என்கிறார்கள்.

பாஜகவுக்கு 16 தொகுதிகள் என்றாலும் தேமுதிக,புதிய நீதி கட்சி இந்திய ஜனநாயக கட்சி புதிய தமிழகம் ஆகிய கட்சிகளுக்கு பாஜகவே உள் ஒதுக்கீடு செய்யும் என்றும் கூறப்படுகிறது.

பாஜக போட்டியிடும் என்று எதிர் பார்க்கும் தொகுதிகளாக தென் சென்னை, நீலகிரி, கோவை, பெரம்பலூர், சிவகங்கை, ராமநாதபுரம்,பொள்ளாச்சி, தென்காசி, கன்னியாகுமரி, வேலூர், கரூர், நெல்லை, கள்ளக்குறிச்சி, திருப்பூர், திருவண்ணாமலை, தூத்துக்குடி உள்ளன.

இவற்றில் தேமுதிகவுக்கு கள்ளக்குறிச்சி, திருப்பூர் தொகுதிகளை தர பாஜக விரும்புவதாக தெரிகிறது. இதேபோல் புதிய தமிழகம் கட்சிக்கு தென்காசியும், இந்திய ஜனநாயக கட்சிக்கு பெரம்பலூரும்,புதிய நீதி கட்சிக்கு வேலூரும் பாஜக தன் பங்கில் இருந்து ஒதுக்கீடு செய்யும்.

அமமுகவுக்கு வட சென்னை, ஸ்ரீபெரும்புதூர், காஞ்சிபுரம், ஈரோடு, திண்டுக்கல், திருச்சி,
சேலம், நாகப்பட்டினம், சிதம்பரம், மதுரை, தஞ்சாவூர், விருதுநகர் ஆகியவை ஒதுக்க திட்டமிடப்பட்டு உள்ளது.

பாமகவுக்கு திருவள்ளூர், அரக்கோணம், தர்மபுரி, கிருஷ்ணகிரி, கடலூர், மயிலாடுதுறை, ஆரணி என 7 தொகுதிகள் ஒதுக்கப்படலாம். கூடுதலாக ஏதாவது ஒரு மாநிலத்தில் இருந்து மாநிலங்களவை எம்பி பதவி வழங்கவும் வாய்ப்பு உண்டு.

ஓபிஎஸ் அணி தேனி, மத்திய சென்னை, விழுப்புரம், நாமக்கல், ஆகிய நான்கு தொகுதிகளில் களம் இறங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

திமுகவிடம் துணிந்து பேரம் பேசும் கூட்டணி கட்சிகள்

இது ஒருபுறம் இருக்க, இன்னொரு பக்கம் பாஜக கூட்டணியில் இருந்து, அதிமுக வெளியேறியது திமுகவின் கூட்டணி கட்சிகளான காங்கிரஸ், விசிக, இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட், மதிமுக, மனிதநேய மக்கள் கட்சி ஆகியவற்றுக்கு திமுகவிடம் துணிந்து பேரம் பேசும் அளவிற்கு உற்சாகத்தை தந்திருக்கிறது.

2019 தேர்தல் போல ஒன்பது தொகுதிகளை காங்கிரசுக்கு ஒதுக்கினாலே பெரிய விஷயமாக இருக்கும் என்று கருதப்பட்ட நிலையில் எங்களுக்கு 2009 தேர்தல் போலவே 15 தொகுதிகளை ஒதுக்குங்கள் என்று திமுக தலைமையிடம் காங்கிரஸ் மல்லுக்கட்ட தொடங்கிவிட்டது.

அதேநேரம் விசிக இந்த முறை நான்கு தொகுதிகளை ஒதுக்கவேண்டும். அதில் இரண்டு பொதுத் தொகுதிகளும், இரண்டு தனித் தொகுதிகளும் இருக்கவேண்டும் என்று கடுமை காட்டுகிறது. அது மட்டுமல்ல விசிக தனிச் சின்னத்தில் தான் போட்டியிடும் என்ற தகவலையும் திமுகவிடம் உறுதிப்பட தெரிவித்திருக்கிறது.

திமுகவுக்கு அழுத்தம்

அதேபோல சென்ற நாடாளுமன்றத் தேர்தலில் ஈரோடு தொகுதியில் திமுக சின்னத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்ற மதிமுக இம்முறை ஈரோடு தவிர விருதுநகர், காஞ்சிபுரம் தொகுதிகளை கூடுதலாக கேட்டு இருக்கிறது. மேலும் தனது சின்னத்தில் மட்டுமே போட்டியிட விரும்புவதாக அறிவாலயத்திடம் தெரிவித்தும் உள்ளது. 2019-ல் தலா இரண்டு தொகுதிகளில் போட்டியிட்ட மார்க்சிஸ்ட் கட்சியும் இந்திய கம்யூனிஸ்டும் தங்களுக்கு தலா 3 தொகுதிகளை ஒதுக்கும்படி திமுக தலைமைக்கு அழுத்தம் கொடுக்கத் தொடங்கி இருக்கின்றன.

இதில் ஒரு ஆச்சரியமான விஷயம் என்னவென்றால் திமுக கூட்டணியில் உள்ள மனிதநேய மக்கள் கட்சி தனக்கு ஒரு நாடாளுமன்ற தொகுதியை ஒதுக்கி தரவேண்டும் என்று கேட்டு அறிவாலயத்தை அதிர வைத்துள்ளது.

“பாஜக தரப்பில் இன்னும் கூட்டணி பேச்சுவார்த்தையே தொடங்கப் படாத நிலையில் டிடிவி தினகரன் கட்சிக்கு 12 தொகுதிகளும், ஓபிஎஸ்க்கு நான்கு தொகுதிகளும் ஒதுக்கப்பட இருப்பதாக கூறுவது கொஞ்சமும் நம்பும்படி இல்லையே என்று விமர்சனங்கள் வைக்கப்பட்டாலும், அது உண்மையாக இருக்ககும் வாய்ப்புகளே அதிகம்” என்று அரசியல் நோக்கர்கள் கூறுகிறார்கள்.

கணக்கு போடும் பாஜக

“ஏனென்றால் மத்திய மற்றும் தென் மாவட்டங்களில் டிடிவி தினகரனின் அமமுகவுக்கு அவர் சார்ந்த சமுதாய ஓட்டுகள் 2019 தேர்தலில் பெருமளவில் கிடைத்தது. அப்போது அவருடைய கட்சி வாங்கிய 23 லட்சம் வாக்குகளில் சுமார் 13 லட்சம் ஓட்டுகள் இந்த மாவட்டங்களில் உள்ள 17 தொகுதிகளில் பெற்றவை ஆகும்.

இவற்றில் ஆறு தொகுதிகளில் ஒரு லட்சம் ஓட்டுகளுக்கும் அதிகமாக டிடிவி தினகரன் கட்சி பெற்றது. தான் சந்தித்த முதல் தேர்தலிலேயே 5.3 சதவீத ஓட்டுகளை வாங்கி தனது பலத்தை டிடிவி தினகரன் நிரூபித்ததால் அவருடைய கட்சிக்கு அதிக பட்சமாக 12 தொகுதிகள் வரை ஒதுக்கப்படலாம்.

ஆனால் 2021 சட்டப்பேரவைத் தேர்தலின்போது அமமுகவின் ஓட்டு வங்கி சரிபாதியாக சரிந்து போனதால் இத்தனை தொகுதிகளை டிடிவி தினகரனுக்கு ஒதுக்ககூடாது. வேண்டுமென்றால் ஏழு அல்லது எட்டு தொகுதிகளை தருவதில் தவறில்லை என்ற பேச்சும் தமிழக பாஜகவில் உள்ளது.

பரிதாப நிலையில் ஓபிஎஸ்

அதேநேரம் ஓபிஎஸ் இதுவரை தனது தனிப்பட்ட செல்வாக்கை நிரூபிக்கவில்லை. அவருக்கு இரண்டு தொகுதிகளே அதிகம். தவிர அவரும் சமுதாய வாக்குகளுக்காக டிடிவி தினகரனையும் சசிகலாவையும் தான் பெரிதும் நம்பி இருக்கிறார்.
எனவே ஓபிஎஸ் அணிக்கு இரண்டு சீட்டுகளுக்கு மேல் கொடுக்க வேண்டியது இல்லை என்ற வாதமும் பாஜகவினரால் முன் வைக்கப்படுகிறது.

பாமகவுக்கு 7 தொகுதிகளும் கூடுதலாக ஏதாவது ஒரு மாநிலத்தில் இருந்து மாநிலங்களவை எம்பி பதவியும் ஒதுக்க வாய்ப்பு உள்ளது.

திமுக, பாஜகவில் கூட்டணி மாற்றங்கள்

திமுக கூட்டணி மற்றும் பாஜக தலைமையில் அமைய இருக்கும் புதிய கூட்டணி என இரண்டிலுமே பெரிய மாற்றங்கள் நிகழ்ந்திருப்பது வெளிப்படையாகவே தெரிகிறது.

இதற்குக் காரணம் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அதிமுக இனி ஒருபோதும் பாஜகவுடன் கூட்டணி அமைக்க மாட்டோம், தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து வெளியேறியதில் நாங்கள் உறுதியாக இருக்கிறோம் என்று இரண்டாம் முறையாக அறிவித்ததுதான்.

இதை தங்களுக்கு கிடைத்த நல் வாய்ப்பாக பயன்படுத்தி திமுக கூட்டணியில் உள்ள சில முக்கிய கட்சிகள் வெளியேறி அதிமுகவுடன் கூட்டணி வைக்கவும் வாய்ப்பு உள்ளது. அதேபோல திமுக எதிர்ப்பு வாக்குகளும் அதிமுகவுக்கு திரும்பும் நிலையும் ஏற்பட்டிருக்கிறது” என்று அந்த அரசியல் நோக்கர்கள் கூறுகின்றனர்.

நாடாளுமன்றத் தேர்தல் நடப்பதற்கு இன்னும் ஏழு மாதங்கள் இருப்பதால் தமிழகத்தில் எத்தனை கூட்டணிகள் அமையும்? தொகுதி பங்கீடு குறித்து பிரதான கட்சிகள் எந்த மாதிரியான முடிவுகளை எடுக்கும்? என்பதையெல்லாம் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்!

Views: - 234

0

0