புதுவையில் திமுகவுக்கு ஆப்பு : ரெங்கசாமிக்கு தூண்டில் போடும் பாஜக, காங்கிரஸ்!!
24 January 2021, 11:39 amகட்சி தொடங்கி மூன்றே மாதத்தில் ஆட்சியைக் கைப்பற்றியவர் என்ற பெருமை புதுச்சேரி என்.ஆர்.காங்கிரஸ் தலைவர் ரங்கசாமிக்கு உண்டு. 70 வயது ரங்கசாமிக்கு ஜூனியர் காமராஜர் என்ற சிறப்பு அடைமொழியும் உண்டு. உடை அணிவதில் மட்டுமின்றி காமராஜரைப் போலவே எளிய வாழ்க்கையை மேற்கொள்பவர். 7 முறை தேர்தலில் போட்டியிட்டு ஏழிலும் வென்றவர்.
அவரிடம் எந்த ஆடம்பரமும் கிடையாது. ஒரு முதல்வர் எந்த பாதுகாப்பும் இன்றி மோட்டார் சைக்கிளில் வலம் வந்த காட்சியை ஒரு நகர மக்கள் கண்டு ஆச்சரியப்பட்டிருப்பார்கள் என்றால் அது புதுச்சேரிவாசிகளாகத்தான் இருக்கும்.
அரசியலில் இப்படியும் ஒரு மனிதரா? என்று வியக்கும் அளவிற்கு எளிய மனிதராக திகழும் ரங்கசாமிக்கு இப்போது ஜாக்பாட் அடித்திருக்கிறது. எதிர்க்கட்சித் தலைவராக இருக்கும் அவருக்கு எப்படி திடீர் அதிர்ஷ்டம் அடிக்கும்? என்று கேள்வி எழலாம்.
அத்தகைய ஒரு பொன்னான வாய்ப்பை ஏற்படுத்தி கொடுத்தது சாட்சாத் திமுக தலைவர் மு.க. ஸ்டாலின்தான் என்றால் அது100 சதவீதம் உண்மையே. தமிழக சட்டப்பேரவை தேர்தலுடன் சேர்த்து புதுச்சேரி மாநில சட்டப்பேரவைக்கும் வருகிற மே மாதம் தேர்தல் நடைபெற இருக்கிறது. இந்தத் தேர்தலில் ஆளுங்கட்சியான காங்கிரசை கூட்டணியில் இருந்து கழற்றிவிட்டு 30 தொகுதிகளிலும் தனித்தே போட்டியிடப் போவதாக அண்மையில் திமுக எம்பி ஜெகத்ரட்சகன் புதுவை மாநில திமுக நிர்வாகிகள் கூட்டத்தில் அறிவித்தார்.
இதுதான் மீண்டும் அரிய வாய்ப்பை ரங்கசாமிக்கு ஏற்படுத்தி தந்துள்ளது. தற்போது புதுவை முதல்வராக இருக்கும் நாராயணசாமி தனது திருவிளையாடல்கள் மூலம் காங்கிரசில் செல்வாக்குடன் வளர்ந்து கொண்டிருந்த ரங்கசாமியை 2011-ல் ஓரங்கட்டினார்.
டெல்லி மேலிடத்திற்கு இல்லாததையும் பொல்லாததையும் சொல்லி அவரை கடுப்பேற்றினார். இதனால் அதிர்ச்சியடைந்த ரங்கசாமி உடனடியாக தனிக் கட்சி தொடங்கி அடுத்த மூன்றே மாதங்களில் ஆட்சியை பிடித்து சாதனையும் படைத்தார். அப்போது மத்தியில் ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு ஆட்சி செய்து வந்தபோதிலும் ரங்கசாமிக்கு எந்த தொந்தரவும் அளிக்கவில்லை.
2016 சட்டப் பேரவை தேர்தலில் கூட ரங்கசாமியின் கட்சி மிக மோசமாக தோற்கவில்லை. தனித்து போட்டியிட்டு 8 இடங்களில் வெற்றி கண்டது குறிப்பிடத்தக்கது.
கடந்த நான்கரை ஆண்டுகளுக்கும் மேலாக புதுச்சேரியில் காங்கிரஸ் ஆட்சி நடந்த வந்தாலும் அந்த மாநிலத்தில் எந்த வளர்ச்சி திட்டங்களும் நிறைவேற்றப்பட்டதாக தகவல் இல்லை.
நாராயணசாமியின் ஒரே பொழுதுபோக்கு மாநில கவர்னர் கிரண்பெடியுடன் தினமும் சண்டை போடுவதுதான் என்று ஆகிப்போனது இதனால் தான் புதுச்சேரி மாநில மக்களுக்கு நாராயணசாமி என்றாலே எரிச்சல் ஆகிவிட்டது.
வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் காங்கிரஸ்-திமுக கூட்டணி வெற்றி பெறாது என்று நினைத்ததால்தான் என்னவோ 30 தொகுதிகளிலும் போட்டியிடும் என்று திமுக அறிவித்தற்கான காரணம் என்கிறார்கள்.
திமுகவின் இந்த அறிவிப்பால் அதிர்ச்சியடைந்த ராகுல்காந்தி உடனடியாக நாராயணசாமியை டெல்லிக்கு அழைத்து விரிவாக இது பற்றி பேசியுள்ளார். அப்போது நாராயணசாமிக்கு நன்கு ‘டோஸ்’ கிடைத்திருக்கிறது.
பிஜேபியை நீங்கள் கடுமையாக எதிர்ப்பது சரிதான். அதற்காக எந்த நேரமும் கவர்னருடன் சண்டை போட்டுக் கொண்டா இருப்பார்கள்? ஆட்சிகாலம் முடிகிற நேரத்திலும் கூடவா இந்த சண்டை தேவை? என்று ராகுல் ஆவேசமாக சாடியிருக்கிறார்.
இதைத்தொடர்ந்து டெல்லி காங்கிரஸ் மேலிடம் ரங்கசாமியை சமாதனப்படுத்தி காங்கிரசுடன் இணைக்கும் முயற்சியில் தீவிரமாக இறங்கியது.
“நீங்கள் மீண்டும் காங்கிரஸுக்கு வாருங்கள். வருகிற தேர்தலில் முதல்வர் வேட்பாளராக போட்டியிடுங்கள். இதற்கு சம்மதித்தால் ராகுல்காந்தி உங்களிடம் பேசத் தயாராக இருக்கிறார்” என்று அழைப்பு விடுத்துள்ளனர்.
ஆனால் ரங்கசாமி இதற்கு எந்த பதிலும் சொல்லவில்லை. அதாவது புதுவையில் திமுக ஆதரவு இல்லாமலேயே காங்கிரசை 30 தொகுதிகளிலும் களமிறக்க இந்த நடவடிக்கைகளில் டெல்லி மேலிடம் ஈடுபட்டுள்ளதாக தெரிகிறது.
திமுக தலைவர் ஸ்டாலினுக்கு தக்க பதிலடி கொடுக்கும் விதமாக இந்த அதிரடி நடவடிக்கையில் காங்கிரஸ் இறங்கியதாக கூறப்படுகிறது. இப்படி ஒரு பக்கம் காங்கிரஸ் திடீர் அழைப்பு விடுக்க மறுபக்கம் ரங்கசாமிக்கு பாஜகவும் தூண்டில் போட்டுள்ளது.
டெல்லியில் இருந்து ரங்கசாமியை தொடர்பு கொண்டு பேசிய பாஜக மேலிடத் தலைவர்கள், “நீங்கள் இன்னும் சில நாட்களில் புதுவை முதல்வராக பதவி ஏற்க தயாராக இருங்கள். காங்கிரஸிலிருந்து 6 எம்எல்ஏக்கள் விலகி பாஜகவில் சேரப் போகிறார்கள். அதிமுக-பாஜக ஆதரவுடன் நீங்கள் ஆட்சி அமைக்கலாம்” என்று கூறியிருக்கிறார்கள்.
இதைக்கேட்டு ரங்கசாமி அப்படியே உறைந்து போனார். ஒரே நேரத்தில் எதிரெதிர் துருவங்களில் இருந்து அழைப்பு வந்ததால் அவர் திக்குமுக்காடித்தான் போனார். ஆனால் அவர் இந்த இரு அழைப்புகளையுமே நிராகரித்து விட்டார் என்றே தெரிகிறது.
பாஜக தலைவர்களிடம் அவர், “தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே இருக்கிறது. குறுக்கு வழியில் ஆட்சியைக் கைப்பற்ற நான் தயாராக இல்லை.தேர்தலை சந்தித்து மக்கள் வெற்றி பெற வைத்த பின்னர் முதல்வர் ஆகிறேன்” என்று நாசூக்காக கூறியுள்ளார்.
அதேநேரம் கூட்டணி வைக்கும்போது 2019 நாடாளுமன்ற தேர்தலைப் போலவே பாஜகவை தனது அணியில் ரங்கசாமி சேர்த்துக் கொள்வார்.இதுபற்றி அவருடைய கட்சி நிர்வாகிகள் கூறுகையில், புதுவையில் என்.ஆர்.காங்கிரஸ் நிச்சயம் வெற்றி பெறும். அதனால் அடுத்த 5 ஆண்டுகளுக்கு அவர் நிம்மதியாக ஆட்சி செய்யவே விரும்புவார். தவிர தற்போதைய நாராயணசாமி அரசு மக்களுக்கு எந்த திட்டங்களையும் நிறைவேற்ற வில்லை என்பதால் மத்திய அரசுடன் இணக்கமாக இருந்து அதை சாதிக்கவே நினைப்பார். அதனால் அவருடைய முதல் சாய்ஸ் பாஜகதான்” என்று நம்பிக்கை தெரிவித்தனர்.
பிஜேபியின் தலைமையும் அதைத்தான் விரும்புகிறது. இதுகுறித்து அக்கட்சியின் புதுவை மாநில பாஜக நிர்வாகிகள் கூறுகையில், “புதுச்சேரி எப்போதும் தேசிய நீரோட்டத்தில்தான் இணைந்தே செயல்படும். அதனால் என். ஆர். காங்கிரசுடன் கூட்டணி வைப்பதற்கு மீண்டும் எங்களுக்கு நல்ல வாய்ப்பு உருவாகி இருக்கிறது” என்றனர்.
ஒட்டுமொத்தத்தில் பாஜகவும், காங்கிரசும் தனித்தனியாக திமுகவுக்கு ஆப்பு வைக்க போகின்றன என்பது உறுதியாக தெரிகிறது. திமுகவின் நிலையோ சொந்தக் காசில் சூனியம் வைத்துக் கொண்ட கதையாகிப் போனது!
0
0