கோர்ட்டை ஏமாற்றியது அம்பலம்: கெஜ்ரிவால் முகத்திரையை கிழித்த தணிக்கை குழு: ராஜினாமா செய்ய பாஜக போர்க்கொடி

Author: Udhayakumar Raman
26 June 2021, 10:04 pm
Quick Share

தேசிய தலைநகர் டெல்லியில், கடந்த ஏப்ரல் மாத இறுதியில் கொரோனா இரண்டாம் அலை உச்சம் பெற்று, ருத்ரதாண்டவம் ஆடியது. நாளொன்றுக்கு 25 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கொரோனா பாதிப்புக்கு உள்ளாயினர். உருமாற்றம் பெற்ற கொரோனாவால், உயிரிழப்புகளும் அதிகமாக இருந்தது. மூச்சுத் திணறல் ஏற்பட்டு தினமும் 25க்கும் மேற்பட்டோர் உயிரிழந்து வந்தனர். இதனால் கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க உயிர்காக்கும் ஆக்சிஜன் தேவையும் அதிகமாக இருந்தது. இதையடுத்து டெல்லி மாநில முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், “மக்களின் உயிர்களை காப்பாற்ற மத்திய அரசு, டெல்லி மருத்துவமனைகளுக்கு போதிய அளவில் ஆக்சிஜன் விநியோகம் செய்யவில்லை. மக்களை காப்பாற்ற மத்திய அரசு முன் வர மறுக்கிறது” என்று தொடர்ந்து குற்றம் சாட்டிக்கொண்டே இருந்தார்.

அதாவது, மத்திய அரசு உதவி செய்யாததால்தான் மக்கள் உயிரை பறிகொடுக்க நேரிடுகிறது என்று அவர் மறைமுகமாக பிரதமர் மோடி மீது குற்றச்சாட்டுகளை கூறி மக்களை கொதிநிலைக்கு கொண்டு சென்றார். மோடிக்கு எதிராக வெறுப்புணர்வையும் ஏற்படுத்தினார். இதனால் டெல்லி முதலமைச்சருக்கு ஆதரவாக எதிர்க்கட்சிகளும் வரிந்து கட்டிக்கொண்டு மத்திய அரசை கரித்துக் கொட்டின. மத்திய பாஜக அரசுக்கும், பிரதமர் மோடிக்கும் மனிதாபிமானமே இல்லை என்று வசைபாடவும் செய்தன.இதற்கிடையே, டெல்லியில் உள்ள தனியார் மருத்துவமனைகளில் ஆக்சிஜன் சிலிண்டர்களுக்குத் தட்டுப்பாடு நிலவுகிறது. இதைச் சமாளிக்க உத்தரவிடவேண்டும் என்று கோரி டெல்லி ஐகோர்ட்டில் வழக்கும் தொடரப்பட்டது.

இதை அவசர வழக்காக விசாரித்த நீதிபதிகள் மத்திய அரசுக்கு, கடும் கண்டனம் தெரிவித்தனர். “டெல்லியில் ஆக்சிஜன் தேவை அதிகரித்து வருகிறது. ஆனால், உண்மை நிலவரத்தை எப்படி மத்திய அரசு கண்டுகொள்ளாமல் இருக்கிறது. ஆக்சிஜன் பற்றாக்குறையால் மக்கள் உயிரிழப்பதை அனுமதிக்க முடியாது. மருத்துவமனைகளில் ஆக்சிஜன் தேவை அதிகரித்துள்ளது எனக் கூறப்படுகிறது. எனவே தொழிற்சாலைகளில் இருந்து ஆக்சிஜன் சிலிண்டர்களை மருத்துவத் தேவைக்குத் திருப்பிவிடுமாறு கோர்ட் உத்தரவிடுகிறது. மக்கள் உயிரைவிடப் பொருளாதார நலன் முக்கியமானது அல்ல. மத்திய அரசுக்கு மக்கள் உயிர் மீது அக்கறையில்லையா? ஒருசில மருத்துவமனைகள்தான் ஆக்சிஜன் தட்டுப்பாடு தொடர்பாக கோர்ட்டை அணுகியுள்ளன. ஆனால், ஆக்சிஜன் தேவை5 மடங்கு அதிகரித்துள்ளதாக எங்களுக்குத் தகவல் கிடைத்துள்ளது.

ஒட்டுமொத்தமாகத் தட்டுப்பாட்டைச் சமாளிக்க வேண்டியது மத்திய அரசின் கடமை. இப்படி ஓர் இக்கட்டான நேரத்தில் வேறெங்கெல்லாம் ஆக்சிஜன் கிடைக்கிறதோ அங்கெல்லாம் போய் பிச்சை எடுங்கள், கடனாக கேளுங்கள், இல்லையென்றால் திருடுங்கள்” என்று காட்டமாகத் தெரிவித்தனர். நீதிபதிகளின் இந்த கருத்துக்கு ஊடகங்கள் மிகவும் முக்கியத்துவம் கொடுத்து பரபரப்பாக செய்திகளை வெளியிட்டன. தமிழகத்தில் சில தனியார் தொலைக்காட்சி சேனல்கள் இதுதொடர்பாக காரசார விவாதங்களை நடத்தி மோடி அரசை மிகமோசமாக விமர்சிக்கவும் செய்தன. அரசியல் கட்சித் தலைவர்கள் மோடிக்கு எதிராக கண்டன அறிக்கைகளும் வெளியிட்டனர். நாட்டின் தலைநகரில் உள்ள ஒரு கோர்ட் அந்நாட்டின் அரசுக்கு எதிராக கடுமையாக அறிவுரை கூறுவதுபோல் அமைந்த கருத்து வெளிநாட்டு ஊடகங்களிலும் வெளியானது. இதனால் சர்வதேச அளவில் மத்திய பாஜக அரசு மீது ஒரு கரும்புள்ளியும் விழுந்தது.

இந்த நிலையில் சில மருத்துவமனைகள் சுப்ரீம் கோர்ட்டின் உதவியை நாடியதால் மறு உத்தரவு வரும் வரை டெல்லிக்கு தினமும் 700 டன் ஆக்சிஜனை விரைந்து வழங்க மத்திய அரசுக்கு சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டது. இதைத்தொடர்ந்து தினமும் 700 டன் ஆக்சிஜனை, கெஜ்ரிவாலின் ஆம் ஆத்மி தலைமையிலான டெல்லி மாநில அரசுக்கு, மத்திய அரசு விநியோகம் செய்து வந்தது. மே 7-ம் தேதிக்கு பிறகு ஆக்சிஜன் தேவை குறைந்துவிட்டதால், தங்கள் மாநிலத்திற்கு வந்த ஆக்சிஜனை கெஜ்ரிவால் அரசு பக்கத்து மாநிலங்களுக்கு திருப்பிவிடத் தொடங்கியது. இதுபற்றி சுப்ரீம்கோர்ட்டில் தெரிவித்துவிட்டு டெல்லி மாநிலத்துக்கான ஆக்சிஜன் விநியோகத்தை மத்திய அரசு குறைத்துக் கொண்டது.

அதேநேரம் டெல்லி மருத்துவமனைகளில் பயன்படுத்தப்பட்ட ஆக்சிஜன் அளவுகுறித்து ஆய்வு செய்வதற்காக தணிக்கைக் குழு ஒன்றை சுப்ரீம் கோர்ட் நியமித்தது. இக்குழுவின் இடைக்கால அறிக்கை சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதில், “டெல்லியில் குறிப்பிட்ட 4 மருத்துவமனைகளின் படுக்கைகளுக்கு ஏற்ற ஆக்சிஜன் அளவான 289 டன்னை விட 4 மடங்கு கூடுதலாக அதாவது 1,140 டன் ஆக்சிஜனை டெல்லி மருத்துவமனைகள் பெற்றுள்ளன. ஏப்ரல் 25 முதல் மே 10 வரை டெல்லி அரசாங்கத்தால் ஆக்சிஜனுக்கான தேவை இந்தியாவின் இரண்டாவது அலைக்கு நடுவே 4 மடங்கு மிகைப்படுத்தப்பட்டுள்ளது. டெல்லி மாநிலத்தால் கேட்கப்பட்ட அதிகப்படியான மருத்துவ ஆக்சிஜன் 12 மாநிலங்களில் 2-ம் அலை கொரோனா தொற்று நோயாளிகளுக்கான ஆக்சிஜன் விநியோக நெருக்கடியை ஏற்படுத்தி இருக்கிறது” என்று கூறியுள்ளது.

சுப்ரீம் கோர்ட்டின் தணிக்கைக் குழுவின் இந்த அறிக்கை பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. அதாவது தனது அரசியல் லாபத்திற்காக, அரவிந்த் கெஜ்ரிவால் இப்படி நாடகமாடி இருப்பது அம்பலமாகி உள்ளது. “டெல்லி முதலமைச்சர் கெஜ்ரிவாலின் முகத்திரையை சுப்ரீம் கோர்ட்டின் தணிக்கைக் குழு அறிக்கை கிழித்து இருக்கிறது. சர்வதேச அளவில் பிரதமர் மோடியின் பெயரை களங்கப்படுத்துவதற்காக திட்டமிட்டு, ஆக்சிஜன் தட்டுப்பாடு நாடகத்தை அவர் நடத்தியிருக்கிறார். எனவே கெஜ்ரிவால் உடனடியாக முதலமைச்சர் பதவியிலிருந்து ராஜினாமா செய்யவேண்டும்” என்று பாஜக தலைமை போர்க்கொடி உயர்த்தியுள்ளது. இதேபோன்ற கோரிக்கையை காங்கிரசும் விடுத்து இருக்கிறது. தனது வேடம் கலைந்து விட்டதால் கெஜ்ரிவால் தற்போது, அடுத்த நாடகத்தை அரங்கேற்றி இருக்கிறார்.

சுப்ரீம் கோர்ட்டின் தணிக்கை குழு அறிக்கை பற்றி அவர் கூறும்போது,”2 கோடி டெல்லி மாநில மக்களின் மூச்சுக்காக போராடியது நான் செய்த குற்றம். தேர்தல் பிரச்சாரத்தில் மோடி மும்முரமாக இருந்தபோது, நான் ஆக்சிஜனை ஏற்பாடு செய்ய போராடினேன். ஆக்சிஜன் பற்றாக்குறையால் மக்கள் தங்களின் உறவினர்களை இழந்துவிட்டார்கள். தயவுசெய்து பொய் சொல்லாதீர்கள், அவர்கள் மோசமாக உணர்கிறார்கள்”என்று என்று உருகி இருக்கிறார்.
ஆக்சிஜன் தேவையை, கெஜ்ரிவால் 4 மடங்கு ஊதிப் பெரிதாக்கியதால் இதே காலகட்டத்தில் தமிழகம், மராட்டியம், கர்நாடகா உள்ளிட்ட 12 மாநிலங்களில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட கொரோனா நோயாளிகள் போதிய ஆக்சிஜன் கிடைக்காமல் உயிரிழந்துள்ளனர். தங்களது தேவைக்கு ஏற்ப மட்டுமே போதிய ஆக்சிஜனை டெல்லி மாநில அரசு கேட்டு பெற்றிருந்தால் இந்த 1000 பேர் கொத்துக் கொத்தாக செத்து விழுந்திருக்கும் அவல நிலை ஏற்பட்டிருக்காதே?… இவர்களின் உயிரிழப்புக்கு கெஜ்ரிவால் பொறுப்பேற்பாரா, என்ன?…

Views: - 400

0

0