நீட் தேர்வு பற்றி பொது விவாதம்… பாஜக சவாலை நடிகர் சூர்யா ஏற்பாரா.. ? நேருக்கு நேர் மோதலை விரும்பும் சமூக ஆர்வலர்கள்!!

6 July 2021, 3:48 pm
neet - sur
Quick Share

நடிகர் சூர்யா, கடந்த 4 ஆண்டுகளாகவே நீட் தேர்வுக்கு எதிராக குரல் கொடுத்து வருகிறார். இதுதொடர்பாக அவர், விடுக்கும் கண்டன அறிக்கைகள் அவருடைய படங்களின் கிளைமாக்ஸ் காட்சியில் பேசும் வசனங்களை விட அனல் பறப்பதாக இருக்கும்.

‘நீட்’ சமூக நீதிக்கு எதிரானது

நீட் போன்ற ’மனுநீதி’ தேர்வுகள் மாணவர்களின் வாய்ப்புகளை மட்டுமின்றி உயிர்களையும் பறிக்கிறது என்று கடந்த ஆண்டு மனம் குமுறி இருந்தார். இதுதொடர்பாக ஐகோர்ட்டையும் அவர் கடுமையாக விமர்சித்தது, பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

இதேபோல் நீட் தேர்வின் தாக்கம் குறித்து ஆய்வு செய்ய தமிழக அரசு நியமித்த ஓய்வுபெற்ற நீதிபதி ஏ.கே.ராஜன் தலைமையிலான குழுவிடம் அவர் கடந்த மாதம் 19-ம் தேதி கருத்து தெரிவித்தார்.

அப்போது, “அரசுப் பள்ளியில் படித்து உயர்கல்வி பெறுகிற மாணவர்களின் வாழ்க்கை முன்னேற்றத்திற்கு கல்வியே ஆயுதம். ஏழைகளுக்கு ஒருவிதமான கல்வி வாய்ப்பும், பணம் படைத்தவர்களுக்கு ஒருவிதமான கல்வி வாய்ப்பும் இருக்கிற சூழலில், தகுதியைத் தீர்மானிக்க ஒரே தேர்வு முறை என்பது சமூக நீதிக்கு எதிரானது.

12 ஆண்டுகள் பள்ளிக்கல்வி படித்த பிறகும் நுழைவுத் தேர்வு மூலமாகவே உயர்கல்வி செல்ல முடியும் என்பது அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் படிக்கும் மாணவர்களை பின்னுக்குத் தள்ளும் சமூக அநீதி. நீட் நுழைவுத் தேர்வு வைக்கப்படுவதன் மூலம் மருத்துவராக வேண்டும் என்கிற லட்சியத்தோடு படித்த ஆயிரக்கணக்கான ஏழை மாணவர்களின் கனவில் தீ வைக்கப்பட்டது. மாணவர் நலனுக்கும் மாநில நலனுக்கும் நீட் போன்ற நுழைவுத்தேர்வுகள் ஆபத்தானவை” என்று குறிப்பிட்டு இருந்தார்.

சூர்யாவை எதிர்த்து தீர்மானம்

தொடர்ந்து, நீட் தேர்வுக்கு எதிராக விமர்சிப்பதையும் மத்திய பாஜக அரசுக்கு கண்டனம் தெரிவிப்பதையும் பார்த்த தமிழக பாஜக தலைவர்கள், நடிகர் சூர்யாவுக்கு அவ்வப்போது சூடாக பதில் அளித்தும் வந்தனர். இந்தநிலைதான், மத்திய அரசு கொண்டுவர திட்டமிட்டிருக்கும் ஒளிப்பதிவு சட்டத்திருத்தம் பற்றி சூர்யா தனது கருத்தை ஆவேசமாக பதிவு செய்திருந்தார்.

இதனால் கோபம் கொண்ட தமிழக பாஜக மாநில இளைஞரணிச் செயலாளர் வினோஜ் செல்வம் தலைமையில் நடந்த பாஜக இளைஞரணிச் செயற்குழுக் கூட்டத்தில் நடிகர் சூர்யாவை எதிர்த்து அண்மையில் ஒரு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

அதில், “நீட் தேர்வு குறித்து தொடர்ந்து உண்மைக்குப் புறம்பாக நடிகர் சூர்யா பேசி வருகிறார். மத்திய அரசின் மக்கள் நலத் திட்டங்களையும் சட்டங்களையும் உள்நோக்கத்துடன் சுய விளம்பரத்துக்காகத் தொடர்ந்து எதிர்க்கிறார். இதற்காக நடிகர் சூர்யாவிற்கு கண்டனம் தெரிவிப்பதோடு தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்தால், அவர் மீது சட்ட ரீதியாக நடவடிக்கை மேற்கொள்ளப்படும்” என்று கூறப்பட்டு இருந்தது.

சூர்யாவுக்கு எதிராக இப்படி பாஜக கண்டன தீர்மானம் போட்டது தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

ஏனென்றால் இதுவரை எந்த தேசிய கட்சியும் ஒரு நடிகருக்காக தனிப்பட்ட முறையில் கண்டன தீர்மானம் நிறைவேற்றியது இல்லை.

இதனால் உடனே சூர்யாவுக்கு ஆதரவாக சில கட்சிகள் பாஜகவை கண்டித்தன. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில பொதுச்செயலாளர் ஜி. பாலகிருஷ்ணன் தனது ட்விட்டர் பதிவில், “திரைப் படக் கலைஞர் சூர்யா, தமிழகத்திற்கு நீட் விலக்கு குறித்தும், சினிமா சட்டத்தில் திருத்தம் பற்றியும் தனது விமர்சனங்களை நியாயமாக முன்வைக்கிறார். ஆனால், அவரை மிரட்டும் நோக்கத்துடன் பாஜகவினர் தீர்மானம் போட்டுள்ளனர். இது வன்மையான கண்டனத்திற்குரிய செயல்” என்று கூறியிருந்தார்.

சூர்யாவுக்கு சவால்

இந்த நிலையில் தமிழக பாஜக மாநில பொதுச் செயலாளர் கரு. நாகராஜன் நடிகர் சூர்யாவுக்கு திடீரென ஒரு சவால் விடுத்தார். இதுதொடர்பாக அவர் கூறும்போது, “நீட் தேர்வை காங்கிரஸ், கம்யூனிஸ்ட் கட்சிகள் ஆளும் மாநிலங்களில் அந்த கட்சிகள் எதிர்க்கவில்லை. ஆனால் தமிழகத்தில் மட்டுமே இந்த இரு கட்சிகளும் எதிர்த்து வருகின்றன. நீட் தேர்வில் உண்மையில் இரட்டைவேடம் போடுவது காங்கிரசும், கம்யூனிஸ்ட்டுகளும்தான்.

கண்களை மூடிக்கொண்டு நீட் தேர்வு, மத்திய அரசின் ஒளிப்பதிவு திருத்த சட்டம் ஆகியவற்றை நடிகர் சூர்யா எதிர்ப்பதால்தான் அவருக்கு எதிராக பாஜக சார்பில் கண்டன தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதுபற்றி அவருடன் பாஜக எப்போதும் விவாதம் நடத்த தயாராக உள்ளது. அதை ஏற்றுக்கொண்டு பாஜகவுடன் நேருக்கு நேர் விவாதிக்க சூர்யா முன்வரவேண்டும்” என்று
அழைப்பு விடுத்தார்.

karu nagarajan bjp - updatenews360

நீட்டுக்கு காங்., ஆதரவு

இதுபற்றி, மாநில பாஜக நிர்வாகி ஒருவர் கூறும்போது, “நீட் தேர்வு, ஒளிப்பதிவு சட்டத்திருத்தம், புதிய கல்விக் கொள்கை உள்ளிட்ட பல்வேறு விஷயங்களில் எதையுமே முழுமையாக அறிந்து கொள்ளாமல் சூர்யா கண்டன அறிக்கைகளை விடுகிறார். அதுவும் மிக மிகத் தாமதமாக தனது எதிர்ப்பை பதிவு செய்வதுதான் அவர் மீதான சந்தேகத்தை ஏற்படுத்துகிறது.

சினிமாவில் எழுதிக்கொடுக்கும் வசனங்களை பேசுவதுபோல அவருடைய அறிக்கைகள் தென்படுகின்றன. நிச்சயம் அவரை இந்த விஷயங்களில் யாரோ பின்னாலிருந்து இயக்குகிறார்கள். அதனால் தான் ஒவ்வொரு முறையும், அவர் தாமதமாக கருத்துகளை பதிவு செய்கிறார். மத்திய அரசுக்கு எதிராக ஆவேசமாகப் பேசுகிறார். அவரிடம் நீட் தேர்வு, புதிய கல்விக்கொள்கை போன்றவற்றில் சுய புரிதல் எதுவுமே இல்லை. ரிமோட் கண்ட்ரோல் பொம்மைபோல் இயங்குகிறார். எனவேதான் அவரை நேருக்குநேர் பொதுவிவாதத்துக்கு அழைக்கிறோம். சொந்த சரக்கு இருந்தால் அவர் நிச்சயம் வருவார். இல்லையென்றால் மூச்சுக் காட்டாமல், தன்னை பின்னால் இருந்து இயக்குபவர்கள் மூலம் பாஜகவுக்கு எதிராக வழக்கம் போல் கண்டன அறிக்கைகளை விட வைப்பார்.

ஒரு விஷயத்தை நடிகர் சூர்யா புரிந்து கொள்ளவேண்டும். 2017-ல் நீட் தேர்வு குறித்த வழக்கில் அத்தேர்வுக்கு ஆதரவாகவும், தமிழக அரசுக்கு எதிராகவும் சுப்ரீம் கோர்ட்டில் வாதிட்டவர்,
முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரத்தின் மனைவி நளினி.

nalini chidambaram - updatenews360

அப்போது மத்திய அரசு கொண்டு வந்த நீட் தேர்வு செல்லும் என்று சுப்ரீம் கோர்ட் தீர்ப்பளித்தவுடன், நளினி என்ன சொன்னார், தெரியுமா?… நீட் தேர்வு இல்லாத கடந்த 10 ஆண்டுகளில் பிளஸ்- 2 மதிப்பெண்களைக் கொண்டு தனியார் பள்ளிகளில் படித்த 30 ஆயிரம் மாணவர்கள், மருத்துவக் கல்லூரிகளில் சேர்ந்துள்ளனர். ஆனால் இந்த 10 வருடங்களிலும் அரசுப் பள்ளிகளில் படித்த கிராமப் புற மாணவர்கள் 250 பேருக்கு மட்டுமே மருத்துவப் படிப்பில் சேருவதற்கு இடம் கிடைத்தது.

அதனால்தான் அனைவருக்கும் சமவாய்ப்பு அளிக்கும் விதமாக நீட் தேர்வு செல்லும் என்று சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டது என்று குறிப்பிட்டிருந்தார். அது தொடர்பான வீடியோக்கள், சமூக வலைத்தளங்களில் இன்றும் உள்ளன. அதை சூர்யா பார்த்து விட்டு எங்களுடன் விவாதத்துக்கு வந்தால் நன்றாக இருக்கும்” என்று தெரிவித்தார்.

கண்டன தீர்மானம், நேருக்கு நேர் விவாதம் என்று அடுத்தடுத்து தமிழக பாஜக தொடுத்துள்ள கணைகளால் நடிகர் சூர்யா அதிர்ந்துதான் போயிருக்கிறார்.

“சபாஷ், நிஜமாகவே இது சுவாரஸ்யமான போட்டிதான்! இந்த சவாலை நிச்சயம் நடிகர் சூர்யா ஏற்றுக் கொள்வார்” என்று சமூக ஆர்வலர்கள் நம்பிக்கை தெரிவிக்கின்றனர்.

பாஜகவின் சவாலை சூர்யா ஏற்பாரா? என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்!

Views: - 167

1

0