கோவில் தேரோட்டத்தின் போது வரும் கொரோனா… முதலமைச்சருக்காக கூட்டிய கூட்டத்தினால் வரதா…? தமிழக அரசுக்கு எச். ராஜா கேள்வி..!!
Author: Babu Lakshmanan11 December 2021, 2:19 pm
சென்னை : கொரோனா அச்சுறுத்தலால் சிதம்பரம் நடராஜர் கோவில் தேரோட்டத்திற்கு அனுமதி மறுத்த தமிழக அரசு, முதலமைச்சர் கூட்டத்திற்கு இத்தனை பேரை அனுமதித்தது ஏன்..? என்று பாஜக மூத்த தலைவர் எச்.ராஜா கேள்வி எழுப்பியுள்ளார்.
தமிழகத்தில் 10 ஆண்டுகளுக்கு பிறகு திமுக ஆட்சிக்கு வந்த நிலையில், இந்துவிரோத நடவடிக்கைகளை அதிகம் மேற்கெண்டு வருவதாக பாஜக உள்ளிட்ட எதிர்கட்சிகள் விமர்சனம் செய்து வருகின்றன. பிற பண்டிகைகளுக்கு வாழ்த்து சொல்லும் திமுக தலைவரும், முதலமைச்சருமான ஸ்டாலின், இந்துக்களின் பண்டிகையான தீபாவளிக்கு மட்டும் வாழ்த்து சொல்லவதில்லை எனக் கூறி, பாஜகவினர் கேள்வி மேல் கேள்வி எழுப்பி வருகின்றனர்.
அதுமட்டுமில்லாமல், கொரோனா தொற்று குறைந்த பிறகும், கோவில்களை திறக்க தமிழக அரசு அனுமதி மறுப்பதாகக் கூறி, பாஜகவினர் போராட்டங்களையும் நடத்தினர். இது போன்று திமுகவின் ஒவ்வொரு செயல்களையும் பாஜகவினர் விமர்சித்து வருவதன் மூலம், இந்து விரோத போக்கை முதலமைச்சர் ஸ்டாலின் கடைபிடிக்கிறாரா..? என்ற சந்தேகம் பொதுமக்களிடையே எழுந்துள்ளது.
கொரோனா தொற்று நாளுக்கு நாள் குறைந்து வந்தாலும், அரசியல் பொதுக் கூட்டங்களுக்கு தமிழக அரசு இன்னமும் தடை விதித்துள்ளது. இதனால், 20ம் தேதி நடக்கும் சிதம்பரம் நடராஜர் கோவில் தேரோட்ட நிகழ்ச்சியில் பொதுமக்கள் பங்கேற்க தமிழக அரசு தடை விதித்துள்ளது. இது பொதுமக்கள் மற்றும் பாஜக உள்ளிட்ட அரசியல் கட்சிகளிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இதனிடையே, சேலம் சீலநாயக்கன்பட்டியில் நடந்த நிகழ்ச்சியில் 30 ஆயிரத்திற்கும் மேற்பட்டோருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நலத்திட்ட உதவிகள் வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் ஏராளமான பொதுமக்கள், கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
இந்த நிலையில், தமிழக அரசுக்கு பாஜக மூத்த தலைவர் எச்.ராஜா கேள்வி எழுப்பி டுவிட் போட்டுள்ளார். அதாவது, சேலத்தில் முதல்வர் ஸ்டாலின் அவர்களை பார்க்க அரசு மக்களை திரட்டலாம். கொரோனா வராது. ஆனால் சிதம்பரத்தில் தேரோட்டத்திற்கு தடை. திருச்செந்தூர், திருவண்ணாமலை, சிதம்பரம் என்று அனைத்து இடங்களிலும் இந்துக்களுக்கு வழிபாட்டுரிமை மறுக்கப்படுகிறது. ஆனால் பணிமயமாதா தேரோட்டத்திற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது, எனக் குறிப்பிட்டுள்ளார்.
அவரது இந்தக் கருத்திற்கு ஆதரவாகவும், எதிராகவும் நெட்டிசன்கள் கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.
0
0