திமுக அரசுக்கு கவலையே கிடையாது… மகனுக்கும், மருமகனுக்காக மட்டுமே ஆட்சி செய்கிறார் CM ஸ்டாலின் : அண்ணாமலை விமர்சனம்!!

Author: Babu Lakshmanan
14 September 2023, 8:55 am
Annamalai STalin - Updatenews360
Quick Share

தமிழகத்தில் முதலமைச்சர் ஸ்டாலின் குடும்ப அரசியல் நடப்பதாக நிலக்கோட்டையில் பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

என் மண் என் மக்கள் என்ற தலைப்பில் தமிழக முழுவதும் பாஜக தலைவர் அண்ணாமலை நடை பயணம் மேற்கொண்டு, அதன்படி திண்டுக்கல் மாவட்டத்தில் 5 நாட்கள் நடை பயணம் மேற்கொண்டு வருகிறார். கொடைக்கானலை தொடர்ந்து இரண்டாவது நாளாக நிலக்கோட்டையில் நடைபயணத்தை மேற்கொண்டார். நிலக்கோட்டையில் செங்கட்டாம்பட்டி பிரிவுகளில் இருந்து தொடங்கி இபி காலனி வழியாக பெரிய காளியம்மன் கோயில், மாரியம்மன் கோயில், சேர்மன் பஜார், மெயின் பஜார், சங்கரன் சிலை வழியாக நால்ரோடு வரை சுமார் 2 மணி நேரம் நடை பயணமாக வந்தடைந்தார்.

அப்போது, வழி நெடுகிலும் மேளதாளம் முழங்க, வான வேடிக்கையுடன் உற்சாக வரவேற்பும், பொதுமக்கள், பெண்கள் அங்காங்கே நின்று கொண்டு ஆராத்தி எடுத்து வரவேற்பு அளித்தனர். அதேபோன்று, இபி காலனி பாஜக தமிழக வழக்கறிஞர் பிரிவு மாநில தலைவர் வீர வணங்காமுடி தலைமையில் அண்ணாமலைக்கு கும்ப மரியாதை செலுத்தப்பட்டது.

அதனைத் தொடர்ந்து, வழிநெடுக பொதுமக்களிடம் பல்வேறு கோரிக்கைகளையும் கேட்டறிந்தார். ஏராளமான இளைஞர்கள் அண்ணாமலையுடன் செல்பி எடுத்துக் கொண்டனர். இதைத்தொடர்ந்து, நிலக்கோட்டை நால்ரோடு முன்பு இந்த கூட்டத்தில் அண்ணாமலை பேசினார்.

அவர் பேசும்போது கூறியதாவது:- தமிழகம் முழுவதும் இதுவரை 57 சட்டமன்ற தொகுதிகளில் நடைபயணம் மேற்கொண்டு உள்ளேன். தென் தமிழகம் வளர்ச்சியில் பின்தங்கி உள்ளது. அதேசமயம், நிலக்கோட்டை பகுதியை சுற்றி வரும் போது, அங்கிருந்த பெண்கள் தங்களது குழந்தைகள் பட்டாதாரிகள் மற்றும் மேல்நிலை பட்டாதாரிகள், பட்டம் படித்து வீட்டிலேயே வேலை வாய்ப்பு என்று இருக்கிறார்கள். அதற்கு ஏதேனும் வழிவகை செய்ய வேண்டும் என்று மனுவை கொடுத்தனர்.

இதனைப் பார்க்கும்போது தமிழகத்தில் வேலைவாய்ப்பிற்கு என்று எந்த திட்டத்தையும் தமிழக அரசு ஏற்படுத்தவில்லை என்பது தெள்ளத்தெளிவாக தெரிகிறது. அதுமட்டுமல்ல, நிலக்கோட்டை என்றாலே மல்லிகை பூ தான் நினைவுக்கு வருகிறது. அதுவும் நிலக்கோட்டை மல்லிகை பூக்கள் தான், உலகம் முழுக்க மதுரை மல்லி என்ற பெயர் விளங்கி புகழ் சேர்த்து, புவிசார் குறியீடு மதுரைக்கு கிடைத்துள்ளது. அப்படி மிகவும் விவசாயம் செய்யும் மக்களாகவே இங்கு இருக்கக்கூடிய அனைத்து தரப்பு மக்களும் இருக்கிறீர்கள் என்பது இந்த கூட்டத்தின் வாயிலாக எனக்கு கிடைத்த தகவல் கிடைத்துள்ளது.

நிலக்கோட்டை பொறுத்தவரை அரசு மருத்துவக்கல்லூரி, அரசு கலைக் கல்லூரி, அரசு பூச்செண்டு தொழிற்சாலை, இப்படி பல்வேறு தொழிற்சாலைகளை ஏற்படுத்தி தருவதாக தேர்தல் வாக்குறுதி கூறிய திமுக அரசு, அந்தத் தேர்தல் வாக்குறுதி எல்லாம் காற்றில் பறக்க விட்டு, மக்களை திசை திருப்பி சனாதானத்தை அழிக்கப் போகிறோம் என்று பேசிக்கொண்டு, மக்களுக்கு அடிப்படை வசதிகளை செய்யக்கூட தவறி உள்ளது.

இன்றைய தமிழகத்தின் முதலமைச்சர் ஸ்டாலின் ஆட்சி செய்யும் இடம், தனது மகனுக்கும், தனது மருமகனுக்கும் முக்கியத்துவம் கொடுத்து ஆட்சி செய்து வருகிறார். தமிழகத்தைப் பொறுத்தவரை முப்பத்தி ஏழு கேபினட் அமைச்சர்கள் இடம்பெற்றுள்ளார்கள். அப்படிப்பட்ட கேபினட் அமைச்சர்களில் 11 பேர் ஊழல் வழக்கில் சிக்கி நீதிமன்ற வழக்குகளில் உள்ளார்கள். தமிழகத்தில் திமுக ஊழல் செய்யும் நிலையிலேயே செயல்பட்டு வருகிறது.

நிலக்கோட்டையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு தனியார் பள்ளியில் படிக்கக்கூடிய சிறுமிகள் மதுபான மருந்தியதாக நாளிதழ் மற்றும் ஊடகங்களின் வாயிலாக அறிந்தேன். இதேபோன்று பல்லடம் பகுதியில் ஒரு இளைஞர் மதுபான மருந்து குடிபோதையில் ஒரு குடும்பத்தைச் சேர்ந்த 4 பேரை வெட்டிக் கொலை செய்கிறார். இந்தக் கொலை செய்வதற்கு காரணம் என்னவென்றால் தனது தோட்டத்தின் அருகே உள்ள பகுதியில் குடித்ததை தட்டி கேட்ட நபர்களை வெட்டிக்கொண்டு உள்ளார்கள். அப்ப தமிழகம் முழுவதும் மதுபானத்தால் கொலை, சிறுமிகள் பள்ளிகளில் மது அருந்தும் அவல நிலை இதுபோன்ற நிலை எல்லாம் நடந்து கொண்டிருக்கிறது.

இதைப்பற்றி திமுக அரசுக்கு கவலை கிடையாது. காரணம் டாஸ்மார்க் மூலமாக திமுக கட்சிக்காரர்கள் நடத்தும் மதுபானக்கூடங்களை மூடக்கூடாது என்பதுதான் ஒரே காரணம். மக்கள் மதுபானத்தால் ஒவ்வொரு குடும்பமும் மிகுந்த அளவில் பொருளாதார ரீதியாகவும், மன உளைச்சல் காரணமாக பல்வேறு குடும்பங்கள் மது போதையால் தத்தளித்து கொண்டிருக்கின்றனர்.

திமுக தனது சட்டமன்றத் தேர்தலின் போது தனது தேர்தல் அறிக்கையில் தமிழகத்தில் மது இல்லா தமிழகத்தை உருவாக்குவோம் என்று வாக்குறுதி கொடுத்தனர். அந்த வாக்குறுதியும் இன்று வரை நிறைவேற்றவில்லை. பெண் உரிமை தொகை 2 கோடியே 25 லட்சம் அனைத்து குடும்பத் தலைவிகளுக்கும் வழங்குவதாக கூறிவிட்டு, தற்போது ஒரு கோடியே 6 லட்சம் பேருக்கு வழங்குவதாக பெருமையாக பேசிக் கொண்டிருக்கிறார்கள்.

இத்திட்டங்களில் தேர்தல் வாக்குறுதியாக கொடுத்த 10 சதவீத தேர்தல் வாக்குறுதியை கூட நிறைவேற்றாத திமுக அரசு, 90 சதவீதம் தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றி விட்டதாக தமிழக முதல்வர் ஸ்டாலின் பெருமை பேசிக்கொண்டு இருக்கிறார். திமுக தனது பொய் பிரச்சாரத்தின் மூலமாகவே தமிழகத்தில் ஆட்சியைப் பிடித்தது. ஆனால் கடந்த 9 ஆண்டுகால ஆட்சியில் தமிழகத்தில் பல்வேறு திட்டங்களுக்காக ரூபாய் பத்து லட்சத்து 70000 கோடியை மத்திய அரசு மோடி அவர்கள் வழங்கி உள்ளார்.

இதனால் அனைத்து தரப்பு மக்களும் பயனுடைந்துள்ளனர். மோடி பிரதமர் ஆவதற்கு முன்பு இந்தியா பொருளாதார வளர்ச்சியில் பின்தங்கி இருந்தது. தற்போது உலக நாடுகளில் மெச்சும் அளவுக்கு சந்திராயன் 2 மூலமாக நிலவில் ஆய்வினை மேற்கொண்டு, இந்தியாவை வளரச் செய்துள்ளோம். ஆகவே, பிரதமர் மோடி மீது மக்கள் வைத்துள்ள நம்பிக்கையின் வாயிலாக இந்தியா வளர்ந்து கொண்டிருக்கிறது.

ஊழல் இல்லாத ஆட்சி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. ஏழைகள் முன்னேறி பல்வேறு திட்டங்களை மத்திய அரசு செயல்படுத்துகிறது. ஊழல் இல்லாத இந்தியா மீண்டும் உருவாக வருகிற பாராளுமன்றத் தேர்தலில் மோடி மீண்டும் பிரதமராக 39 தொகுதிகளிலும் பாரதிய ஜனதா கட்சி வெற்றி பெற ஆதரவு தருமாறு கேட்டுக் கொண்டார்., இவ்வாறு அண்ணாமலை பேசினார்.

இக்கூட்டத்தில் கிழக்கு மாவட்ட தலைவர் தனபாலன், தமிழக வழக்கறிஞர் பிரிவு மாநில தலைவர் வீர. வணங்காமுடி, ஒன்றிய தலைவர்கள் பாஸ்கரன், ராமகிருஷ்ணன், மாவட்ட தொழில்நுட்ப செயலாளர் மணிகண்டன், ஆன்மீகப் பிரிவு மாவட்ட பொறுப்பாளர் சுரேஷ் பவுன் பட பலர் கலந்து கொண்டனர்.

இதனைத் தொடர்ந்து, கூட்டம் முடிந்து அண்ணாமலை தனது ஆத்தூர் சட்டமன்றத் தொகுதிக்கு சின்னாளபட்டியை நோக்கி பயணத்தை சென்ற போது, கோவில்மேடு சிவன் கோயில் பகுதியில்சுந்தர் வயது 48, மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தபோது விபத்து ஏற்பட்டு உயிருக்கு போராடிக் கொண்டிருந்தார். அவரை உடனடியாக மீட்டு அண்ணாமலை தனக்கு பாதுகாப்புக்காக வரும் மருத்துவ குழு ஆம்புலன்ஸ் மூலம் உடனடியாக மருத்துவமனையில் சேர்க்க உத்தரவிட்டார். இதை அறிந்த அப்பகுதி மக்கள் பொதுமக்கள் மற்றும் அனைவரும் பாராட்டும் மனிதநேயத்தின் பாராட்டினார்கள்.

அதே போன்று நிலக்கோட்டை நால் ரோட்டில் திறந்தவெளியில் போக்குவரத்துக்கு இடையூறாக சுமார் அரை மணி நேரம் கூட்டம் நடந்ததால் திண்டுக்கல், பெரியகுளம் மதுரை செல்லும் பொதுமக்கள் வேறு வழி இல்லாமல் போக்குவரத்து நெரிசலில் சிக்கினார். அரசியல் கட்சிகள் இது போன்ற கூட்டத்தை நாலு ரோட்டில் நடத்தாமல் மாற்று இடத்தில் நடத்த வேண்டும் என்று பொதுமக்கள் பரவலாக பேசிக் கொண்டனர்.

Views: - 284

0

0