இன்று நீதிமன்றத்தில் ஆஜராகிறார் அண்ணாமலை… நீதிமன்றம் மூலம் அம்பலப்படுத்துவேன்… திமுகவினருக்கு நன்றி…!!

Author: Babu Lakshmanan
14 July 2023, 8:21 am
Annamalai Vs Dmk - Updatenews360
Quick Share

திமுக எம்பி டிஆர் பாலு தொடர்ந்த வழக்கு தொடர்பாக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை இன்று சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் ஆஜராகிறார்.

தமிழகத்தில் திமுக- பாஜக இடையே தொடர்ந்து மோதல் ஏற்பட்டு வருகிறது. திமுக அமைச்சர்களின் ஊழல் பட்டியலை அண்ணாமலை அடுத்தடுத்து வெளியிட்டு கதிகலங்கச் செய்து வருகிறார். குறிப்பாக, திமுக நிர்வாகிகளின் சொத்து மற்றும் ஊழல் பட்டியில் எனக்கூறி பாஜக மாநில தலைவர் அண்ணாமலை திமுக ஃபைல்ஸ் என்ற வீடியோவை வெளியிட்டிருந்தார்.

அதில் முதலமைச்சர் ஸ்டாலின், உதயநிதி, கனிமொழி, தயாநிதி மாறன், கலாநிதி மாறன், டிஆர் பாலு உட்பட 17 பேரின் சொத்து மதிப்பு 1 லட்சத்து 50 ஆயிரம் கோடி என தெரிவித்திருந்தார்.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்த திமுக நிர்வாகிகள் அண்ணமாலைக்கு வக்கீல் நோட்டீஸ் அனுப்பியிருந்தனர். அதில் 48 மணி நேரத்தில் மன்னிப்பு கேட்கவில்லையென்றால் 500 கோடி,100 கோடி, 5 கோடி, 1 கோடி என நஷ்ட ஈடு வழங்க வேண்டும் என தனித்தனியாக நோட்டீஸ் அனுப்பப்பட்டிருந்தது. இந்த நோட்டீஸ்க்கு பதில் அளித்த அண்ணாமலை, பொது தளத்தில் இருக்கும் தகவலைத்தான் வெளியிட்டேன். எனவே மன்னிப்பு கேட்க முடியாது சட்ட ரீதியாக வழக்கை சந்திக்க தயார் என கூறியிருந்தார்.

இதனையடுத்து முதலமைச்சர் ஸ்டாலின் சென்னை உயர்நீதிமன்றத்தில் அண்ணாமலை மீது வழக்கு தொடர்ந்த நிலையில், தற்போது முன்னாள் மத்திய அமைச்சரும், திமுக பொருளாளருமான டிஆர் பாலு சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் 17வது நீதித்துறை நடுவர் மன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். அதில் அடிப்படை ஆதாரமின்றி தன்னைப்பற்றி அவதூறு கருத்துகளை கூறியதாக தெரிவித்துள்ளார். எனவே அண்ணாமலை மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொண்டார்.

இந்த நிலையில், இது தொடர்பான வழக்கில் சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை இன்று ஆஜராகிறார்.

இது தொடர்பாக அவர் விடுத்துள்ள டுவிட்டர் பதிவில், “திமுக பாராளுமன்ற உறுப்பினர் திரு. டி.ஆர்.பாலு அவர்களின் சொத்துக் குவிப்பு பற்றிய தகவல்களை, தமிழக பாஜக சார்பாக #DMK Files இல் வெளியிட்டதைத் தொடர்ந்து, அவர் என் மீது தொடர்ந்துள்ள அவதூறு வழக்கில், சென்னை சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் இன்று நேரில் ஆஜராக உள்ளேன்.

ஊழல் எனும் கரையான், இத்தனை ஆண்டு காலம் நமது நாட்டை எப்படி அரித்திருக்கிறது என்றும், அதனை அரசியலிலிருந்து முழுமையாக அப்புறப்படுத்த வேண்டியது எத்தனை முக்கியம் என்பதையும் பொதுமக்கள் அனைவரும் அறிவார்கள்.

நமது மாண்புமிகு நீதித் துறையின் மீது எனக்கு முழு நம்பிக்கை உள்ளது. திமுகவினர் சொத்துக் குவிப்பு பற்றிய அனைத்து உண்மைகளும் மாண்புமிகு நீதிமன்றம் வாயிலாக மக்களுக்குத் வெளிப்படுத்தும் வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுத்த திமுகவுக்கு நன்றி,” என தெரிவித்துள்ளார்.

Views: - 268

0

0