அன்று மதுக்கடைக்கு எதிர்ப்பு… இன்று டாஸ்மாக்குக்கு போலீஸ் பந்தோபஸ்து… இது திமுகவின் துரோக திராவிட மாடல் ஆட்சி : சசிகலா புஷ்பா விமர்சனம்!!
Author: Babu Lakshmanan3 June 2022, 5:34 pm
தாங்கள் ஆட்சிக்கு வந்தவுடன் மதுவை தடை செய்வதாகவும் கூறினார். ஆனால், இன்று டாஸ்மாக்கை திறந்து அதற்கு போலீஸ் காவல் போட்டுள்ளது என்று பாஜக மாநில துணைத்தலைவர் சசிகலா புஷ்பா தெரிவித்தார்
தூத்துக்குடியில் பாஜக மாநில துணைத் தலைவர் சசிகலா புஷ்பா செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசியதாவது :- பாஜகவின் 8 ஆண்டுகால ஆட்சி மக்களுக்கு நம்பிக்கையை கொடுத்துள்ளது. 2014ல் 7 மாநிலங்களில் மட்டும் வெற்றி பெற்றிருந்த பாஜக, இன்றைய தினம் 18 மாநிலங்களில் வெற்றி பெற்று உலகிலேயே பெரிய கட்சியாக பாஜக உள்ளது.
தமிழகத்தில் திமுக ஆட்சி நடந்தாலும், பாஜக மாநில தலைவர் அண்ணாமலை மக்களுக்கு என்ன தேவை என்பதை மத்தியில் இருந்து பெற்று கொடுத்து வருகிறார். கிட்டத்தட்ட நூறு நாடுகளுக்கு தடுப்பூசியை வழங்கியிருக்க கூடிய ஒரு நாடாக இந்தியாவை தலை நிமிர செய்திருப்பவர் பிரதமர் நரேந்திர மோடி.
முந்தைய காங்கிரஸ் ஆட்சியில் ஏழ்மை நிலை 22 சதவீதமாக இருந்தது. பாஜக ஆட்சியில் ஏழ்மையின் நிலை 10 சதவீதமாக குறைந்துள்ளது. தனிநபர் வருமானம் காங்கிரஸ் ஆட்சியில் ஒரு நபருக்கு வருடத்திற்கு இருபத்தி ஒன்பது ஆயிரமாக இருந்தது. தற்போதைய பாஜக ஆட்சியில் 30 ஆயிரமாக உயர்ந்துள்ளது. ஜிஎஸ்டியின் மூலமாக நமது நாட்டிற்கு பல லட்சம் கோடி வருவாய் கிடைக்கிறது. இது பல பண முதலைகளின் கருப்பு பணத்தை இன்று புறம் தள்ளியுள்ளது.
ரயில்வே துறையில் மிகச் சிறந்த கட்டமைப்பில் உலகின் இரண்டாவது நாடாக இந்தியா திகழ்கிறது. முஸ்லிம் பெண்களுக்கு பாரதிய ஜனதா கட்சி செய்திருக்கும் மிகப்பெரிய பங்கு முத்தலாக் தடை சட்டம். இந்த சட்டத்தின் மூலமாக முஸ்லிம் பெண்கள் மிகுந்த உரிமையையும், நம்பிக்கையையும் பெற்றுள்ளனர். தமிழகத்தில் இன்று ஒவ்வொரு அமைச்சர்களும் பாஜக மாநில தலைவர் அண்ணாமலையை பார்த்து பயந்து நடுங்கிக் கொண்டு இருக்கின்றனர். திமுக மக்களுக்கு கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்ற தவறிவிட்டது.
திமுகவால் டாஸ்மாக்கை இன்னும் மூட முடியவில்லை. அதிமுக ஆட்சி நடக்கும்போது கனிமொழி எம்பி, மது பழக்கத்தினால் பல பெண்கள் விதவையாகி விட்டனர் என்று கூறினார். தாங்கள் ஆட்சிக்கு வந்தவுடன் டாஸ்மாக்கை தடை செய்வதாகவும் கூறினார். ஆனால் இன்று டாஸ்மாக்கை திறந்து அதற்கு போலீஸ் காவல் போட்டுள்ளது திமுக ஆட்சி தான்.
திமுகவினர் தற்போது திருட்டு மணல் அள்ள துவங்கியுள்ளனர். அதிமுகவை குறை சொன்னவர்கள் தற்போது குவாரியை திறந்து திருட்டுத்தனமாக மணல் அள்ள தொடங்கியுள்ளனர். தமிழகத்தைப் பொருத்தவரை திமுகவிற்கு சிறந்த எதிர்க்கட்சியாக திகழ்ந்து கொண்டிருப்பது பாஜகதான், என்றார்.
சமையல் எரிவாயு விலை உயர்வு குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பியதற்கு, “சமையல் எரிவாயு விலையை குறைப்பேன் தேர்தல் அறிக்கையில் தெரிவித்திருந்தாரே ஸ்டாலின் ஏன் குறைக்கவில்லை? எங்கே சென்றார்? அவரிடத்தில் கேளுங்கள் இந்த கேள்வியை,” என்றார்.